நாம் ஒவ்வொருவரும் தினசரி போதிய அளவு தண்ணீர் குடிப்பது நம் உடலுக்கு மிகவும் அவசியமானது. ஆனால் எப்போது எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக, இரவு தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நல்லதா? கெட்டதா? என்பது பலருக்குத் தெரிவதில்லை. இந்தப் பதிவில் தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதன் சாதக பாதகங்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதன் நன்மைகள்:
இரவு நேரத்தில் நாம் நீர்ச்சத்து இழப்பை எதிர்கொள்கிறோம். இதனால், தூங்குவதற்கு முன் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் நீர்ச்சத்து சமநிலையை பராமரிக்க உதவும். போதிய அளவு தண்ணீர் குடிப்பதால் சிறுநீரக கற்கள் உருவாவதை தடுத்து சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
இரவில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது சரும செல்களை வலுப்படுத்தி, சருமம் எப்போதும் பளபளப்பாக இருக்க உதவும். மேலும், உங்களது செரிமானம் சீராக இருந்து மலச்சிக்கலைத் தடுக்க உதவும்.
தசை வலி, தசை பிடிப்புகள் பெரும்பாலும் நீச்சத்து குறைபாட்டால் ஏற்படுகின்றன. எனவே, தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதால் இந்த பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். போதுமான நீர்ச்சத்து ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
போதுமான அளவு தண்ணீர் குடித்து விட்டு தூங்குவது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தை அடைய உதவுவதாக சொல்லப்படுகிறது.
தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதன் தீமைகள்:
தூங்குவதற்கு முன் அதிக அளவு தண்ணீர் குடிப்பது அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி, உங்களது தூக்கத்தை பாதிக்கக்கூடும். இதய நோய், சிறுநீரக நோய் போன்ற சில நோயாளிகளுக்கு மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் இரவில் அதிக அளவு தண்ணீர் குடிப்பது ஆபத்தானது. அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் ரத்தத்தில் சோடியம் அளவு குறைந்து உடல்நிலை மோசமாகும் வாய்ப்புள்ளது.
ஒருவர் ஒரு நாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்?
ஒவ்வொருவரின் உடல் எடை, செயல்பாடு, காலநிலை போன்ற காரணிகளைப் பொறுத்து தண்ணீர் தேவை மாறுபடும். பொதுவாக ஒரு நாளைக்கு 8 முதல் 10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது போதுமானது. ஆனால், தூங்குவதற்கு முன் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது குறித்து மருத்துவரின் ஆலோசனையைப் பெற்று முடிவெடுப்பது நல்லது. ஆரோக்கியமான நபர் அவரது உடல் எடையில் 20 கிலோவுக்கு ஒரு லிட்டர் தண்ணீர் வீதம் குடிப்பது பரிந்துரைக்கப்படுகிறது. அதாவது நீங்கள் 60 கிலோ எடையில் இருக்கிறீர்கள் என்றால், தினசரி 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
இரவு தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பது உடலுக்கு நன்மை தரும் என்றாலும், அதிக அளவு தண்ணீர் குடிப்பது சிலருக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே தனி நபரின் உடல்நிலை மற்றும் தேவைகளைப் பொறுத்து தண்ணீர் அளவை கட்டுப்படுத்த வேண்டும்.