ஃபென்னல் என்பது நாம் சமையலுக்கு உபயோகப்படுத்தும் மசாலாப் பொருட்களில் ஒன்று. இதை நாம் வெஜிடபிள் குருமா, மசால் வடை போன்ற உணவுகளில் சேர்த்து செய்யும்போது அந்த உணவுகளின் மணமும் சுவையும் நம்ப முடியாத அளவுக்கு அதிகரிக்கும். தமிழில் இதை பெருஞ்சீரகம் என்போம். இது நல்ல ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவக்கூடிய ஓர் அற்புதமான விதை. இதில் டீ போட்டு அருந்தும்போது நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.
சாப்பாட்டிற்குப் பின் ஒரு கப் சூடான ஃபென்னல் டீ அருந்தினால் அது இரைப்பை குடல் பாதைகளில் உற்பத்தியாகும் ஜீரணத்துக்கு உதவும் சுரப்பிகளின் அளவை அதிகரிக்கச் செய்யும். இதனால் உணவுகள் அதன் பாதையில் தன்னிச்சையாகச் சென்று தங்கு தடையின்றி செரிமானம் நடந்து முடிய முடிகிறது. ஃபென்னல் டீயில் உள்ள ஃபிளவனாய்ட்ஸ் மற்றும் ஃபினோலிக் என்ற கூட்டுப் பொருட்கள் தீங்கிழைக்கும் ஃபிரிரேடிகல்களை எதிர்த்துப் போராட உதவுகின்றன.
இந்த டீயை தொடர்ந்து அருந்தி வந்தால் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்; வலிகள் நீங்கும். வெது வெதுப்பான ஒரு கப் ஃபென்னல் டீ அருந்தும்போது மனக்கவலை நீங்கி மனம் அமைதி பெறுகிறது. வேலைப்பளு போன்ற பரபரப்பான சூழலிலிருந்து விட்டு விலகி தளர்வுற்ற மனநிலையை பெறவும் முடிகிறது.
ஃபென்னல் டீ பசியுணர்வைத் தடுக்கவும். மேலும் மேலும் சாப்பிட வேண்டும் என்ற ஆவலைக் கட்டுப்படுத்தவும் உதவும் திறமை கொண்ட பானம். திருப்தியுற்ற மனநிலையும் தரும். இதனால் உடல் எடையை சம நிலையில் பராமரிக்க உதவுகிறது.
ஃபென்னல் டீயில் ஆன்டி இன்ஃபிளமேட்டரி மற்றும் நச்சுக்களை வெளியேற்றும் குணங்களும் உள்ளன. இவற்றின் உதவியால் நச்சுக்கள் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு, வீக்கங்களும் குறைக்கப்பட்டு விடுவதால் சரும ஆரோக்கியம் பெற்று பளபளப்புப் பெறுகிறது. இதிலுள்ள சுவாசக் குழல் சுரப்பு மற்றும் சளி, கோழை ஆகியவற்றை நீக்கும் குணமானது சுவாசப் பாதையை சுத்தமடையச் செய்து சிரமமின்றி மூச்சு விட உதவுகிறது.
இத்தனை நன்மைகள் அடங்கிய ஃபென்னல் டீயை நாமும் தொடர்ந்து அருந்தி ஆரோக்கியம் பெறுவோம்.