சுட்டெரிக்கும் கோடை வெயிலில் வெளியே சென்று வீட்டுக்கு வந்தால் மிகவும் களைப்பாக இருக்கும். அதுபோன்ற நேரங்களில் தினசரி உணவையே மருந்தாக உட்கொண்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். கோடை வெயிலுக்கு உகந்த எளிய உணவுக் குறிப்புகள் சிலவற்றை இந்தப் பதிவில் காண்போம்.
கோடை வெயில் வந்து விட்டால் சிலருக்கு அக்கி மற்றும் கொப்பளங்கள் வர ஆரம்பிக்கும். அவர்கள் பசலைக்கீரையை நன்றாக அரைத்து பசு வெண்ணையில் குழைத்துத் தடவினால் அக்கி, கொப்புளங்கள் குணமாகும்.
கோடை வந்துவிட்டாலே வீட்டில் பழங்கள் வாங்கி வைத்திருப்போம். சில நேரங்களில் வயிற்றுப்போக்கு ஏற்படுவது சகஜம். அப்பொழுது சாத்துக்குடி பழச்சாறு குடிக்கலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும். இந்தச் சாறை குழந்தைகளுக்கும் பயமின்றி கொடுக்கலாம். சட்டென்று நோய் அகலும்.
கோடையில் கேழ்வரகு கூழ், களி போன்ற உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்வோம். இது உடலுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். இதை குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். எப்படி என்றால் கேழ்வரகை ஊற வைத்து, அரைத்து பால் எடுத்து அதை நன்றாகக் காய்ச்சி அல்வா பதத்திற்கு வரும்போது இதனுடன் வெல்லம் சேர்த்துக் கிளறி குழந்தைகளுக்கு சத்துணவாகக் கொடுக்கலாம். இதனால் குழந்தைகள் நல்ல புஷ்டியுடன் வளர்வார்கள்.
வெயில் காலத்தில் வயதானவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்னை ஏற்படும். அவர்கள் இரண்டு ஸ்பூன் உலர் திராட்சையை கொதிக்க வைத்து கசக்கிப் பிழிந்து வடிகட்டி மிதமான சூட்டில் குடித்து வந்தால் காலை எழுந்தவுடன் வயிறு சுத்தமாகும்.
கோடையில் பானைத் தண்ணீரில் வில்வம், துளசி இலை, புதினா, எலுமிச்சை சாறு சிறிதளவு என்று இவற்றில் ஏதாவது ஒன்றை பானையில் போட்டு குடித்து வரலாம். இதனால் சளி கட்டாது. இந்த நீரை அடிக்கடி பருகுவதால் உடம்பில் நீர்சத்தை தக்க வைக்கும். கோடையில் சிறுகீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீர் கடுப்பு வராது.
வெயிலின் வெப்பத்தால் குழந்தைகள் நெடுநேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால் தொப்புளைச் சுற்றி வெள்ளரி விதையை இளநீர் விட்டு அரைத்து பற்று போட்டால் நீர் இறங்கும். அதேபோல் குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது அழுது கொண்டு சூடாகப் போனால் தலை உச்சியில் சிறிது விளக்கெண்ணெய் தடவி வந்தால் சூடு தணியும். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் இளஞ்சூடான நீரில் தேன் கலந்து தூங்கும் முன் கொடுத்தால் சரியாகிவிடும். நேந்திரம் பழத்தை வேக வைத்து தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அதிக பலம் சேரும். நோஞ்சான் தன்மை மாறும்.
அலைச்சல், நீண்ட நேரம் கண்விழிப்பதால் உடம்பு உஷ்ணமாகி பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படக்கூடும். பழைய சோற்று நீருடன் உப்பும் மோரும் சேர்த்து தினமும் காலையில் குடித்து வந்தால் வெள்ளைப்படுதல் நிற்கும். மலச்சிக்கல் பிரச்னையும் தீரும்.