நாம் எதிர்பாராத நேரத்தில் திடீரென தாக்கும் ஒற்றைத் தலைவலி, நம்மை எந்த வேலையும் செய்யவிடாது. பல காரணங்களால் ஒற்றைத் தலைவலி ஏற்பட்டாலும், நாம் உண்ணும் உணவு என்பது ஒரு முக்கிய காரணியாகும். எதுபோன்ற உணவுகளை சாப்பிடுகிறோம் என்பது நம் உடல் நிலையை பெரிதும் பாதிக்கிறது. எனவே, ஒற்றைத் தலைவலியை குறைக்க எதுபோன்ற உணவுகளை நாம் உண்ண வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். இந்தப் பதிவில் அத்தகைய உணவுகள் என்னென்ன என்பது பற்றி பார்க்கலாம்.
பழங்கள் மற்றும் காய்கறிகள்: பழங்கள் மற்றும் காய்கறிகளில் நிறைந்திருக்கும் விட்டமின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் நாச்சத்துக்கள், ஒற்றைத் தலைவலியை தடுக்க உதவுகின்றன. குறிப்பாக, மக்னீசியம் நிறைந்த பச்சை இலை காய்கறிகள், வாழைப்பழங்கள், ஆப்பிள்கள் போன்றவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை ரத்த நாளங்களைத் தளர்த்தி வலியைக் குறைக்கின்றன. மேலும், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்த பெர்ரி வகைகள் தீவிர வீக்கத்தைக் குறைத்து ஒற்றைத் தலைவலியைத் தடுக்க உதவும்.
முழு தானியங்கள்: முழு தானியங்களில் உள்ள நார்ச்சத்து, ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்துக்கொள்ள உதவுகிறது. ரத்த சர்க்கரை அளவு திடீரென ஏரி இறங்கும்போது, ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். எனவே, பழுப்பு அரிசி, ஓட்ஸ், பார்லி போன்ற முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது.
மீன் மற்றும் நட்ஸ்: மீன் மற்றும் நட்ஸ் நிறைந்துள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் வீக்கத்தை குறைத்து, ரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. இது ஒற்றைத் தலைவலியை தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, சால்மன் மீன், கனாங்கெழுத்தி, வால்நட், பாதாம் போன்ற உணவுகளை உணவில் சேர்ப்பது நல்லது.
நீரேற்றம்: தினசரி போதிய அளவு தண்ணீர் குடிக்காவிட்டால் தலைவலி ஏற்படலாம். எனவே, நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். நீச்சத்து அதிகம் நிறைந்த பழங்கள் காய்கறிகளை கட்டாயம் உட்கொள்ளுங்கள். இது ஒற்றைத் தலைவலி ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.
ஒவ்வொரு நபரின் உடலும் தனித்துவமானது. ஒருவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாத உணவுகள், மற்றொருவருக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். எனவே, என்ன உணவு உங்களுக்கு ஒற்றைத் தலைவலியைத் தூண்டுகிறது என்பதை கவனித்து, அதை உணவில் இருந்து நீக்க வேண்டும். உணவுடன், தூக்கமின்மை மன அழுத்தம் ஹார்மோன் மாற்றங்கள் போன்ற காரணிகளும் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தலாம். எனவே, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது முக்கியம்.