ஒரு மனிதனுக்கு காலை உணவு என்பது மிகவும் முக்கியமானதாகும். அன்றைய நாள் பொழுதை ஆற்றல்மிக்கதாக மாற்றுவதே காலை உணவுதான். இதனாலேயே காலை உணவை ஒருபோதும் தவற விடக்கூடாது என பலர் அறிவுறுத்துகின்றனர். ஆனால். இன்றைய அவசர உலகில் காலை உணவை சமைப்பதற்கு யாருக்கும் நேரம் கிடைப்பதில்லை. இதனாலேயே உடனடியாகக் கிடைக்கக்கூடிய துரித உணவை காலை நேரங்களில் சாப்பிடுகிறார்கள். ஆனால், இவற்றில் பல்வேறு உடல் ஆரோக்கிய சீர்கேடுகள் இருக்கிறதென்பது யாருக்கும் தெரிவதில்லை.
காலை நேரத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள்:
பிரட்: பிரட் காலை உணவுக்கு சிறந்ததாக இருந்தாலும், அதில் மைதா மாவு சேர்க்கப்படுவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடும். பெரும்பாலான மக்களின் காலை உணவாக பிரட் மாறி வருகிறது. சிலர் காலையில் டிபன் சாப்பிடுவதற்கு பதிலாக வெறும் டீ, பன் சாப்பிடுபவர்களாக உள்ளனர். ஆனால், இத்தகைய மைதா உணவுகளை காலையில் சாப்பிடக்கூடாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அதிக சக்கரை மிக்க உணவுகள்: காலை எழுந்ததுமே வெறும் வயிற்றில் சர்க்கரை அதிகம் உள்ள உணவுகளைச் சாப்பிட்டால், அது ஒருவரின் ரத்தத்தின் சர்க்கரை அளவை மேலும் அதிகரிக்கும். இதனால் நீரிழிவு நோய் ஏற்படலாம். எனவே, காலை நேரங்களில் சர்க்கரை உணவுகளைத் தவிர்ப்பது நலம்.
சிட்ரஸ் பழங்கள்: காலையில் பழங்கள் சாப்பிடுவது நல்லது எனக் கூறப்பட்டாலும், அதில் வைட்டமின் சி அதிகம் உள்ள பழங்களைச் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். இதனால் வாயுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படலாம்.
கேனில் அடைக்கப்பட்ட உணவுகள்: வேலைக்குச் செல்பவர்களுக்கு காலையில் சமைக்க நேரமில்லை என்பதால் அவர்கள் ஏற்கெனவே கேனில் அடைக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்ட உணவுகளைச் சாப்பிடுகிறார்கள். இதில் பல ரசாயனங்களும், சோடியத்தின் அளவும் அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதை தொடர்ச்சியாக உண்ணும்போது இதய பாதிப்புகள் ஏற்படலாம்.
தயிர்: என்னதான் தயிரில் ஏராளமான சத்துக்கள் இருந்தாலும் அதை காலை நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். ஏனென்றால், வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடுவது உடலில் அதிக சளி உற்பத்தியைத் தூண்டுகிறது. எனவே, காலைப்பொழுதில் இனி தயிர் எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்போம்.