மூளை மூடுபனியை 'அறிவாற்றல் செயலிழப்பு' என்று மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். ‘மூளையை மேகங்கள் சூழ்ந்தது’ போன்ற உணர்வு நோயாளிகளுக்கு இருப்பதால், இதனை மூளை மூடுபனி என்று குறிப்பிட்டு கூறுகிறார்கள். பெரும்பாலான மக்கள் தங்கள் வாழ்வில் மறதியை அனுபவித்து இருப்பார்கள். நமக்கு வயதாகும்போது ஏற்படும் உடலியல் மாற்றங்களால், மூளையின் செயல்பாட்டில் குறைபாடுகள் ஏற்படுகின்றன. இதன் விளைவுகளுள் ஒன்று தான் இந்த மூளை மூடுபனி எனும் அறிவாற்றல் செயலிழப்பு.
மூளை மூடுபனி ஏற்பட காரணங்கள்:
பெரும்பாலும், 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மூளை மூடுபனியால் பாதிக்கப்படுகிறார்கள். ஆனால் மன அழுத்தம் மற்றும் ஹார்மோன்களின் மாற்றத்தினாலும் ஏற்படலாம். மேலும், கணினி, மொபைல் போன்ற மின்காந்த கதிர்வீச்சை வெளிப்படுத்தும் கருவிகளை அதிக நேரம் பயன்படுத்துவதாலும், தூக்கமின்மை, உடற்பயிற்சி இல்லாமை மற்றும் ஊட்டச்சத்து போதிய அளவு இல்லாத உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் மூளை மூடுபனி ஏற்படலாம்.
எவ்வாறு கண்டறியலாம்:
அடர்ந்த மூடுபனியால் மூடப்பட்டிருப்பது போன்ற உணர்வு, ஒரு விசயத்தைக் கற்றுக்கொள்வதற்கும், நினைவுப்படுத்துவதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளுதல், குழப்பம் அல்லது கவனச் சிதறல் போன்ற அறிகுறிகள் மூலமாக மூளை மூடுபனியை கண்டறியலாம். தூக்கமின்மை, தலைவலி, சோர்வு, எரிச்சல், மறதி, மனச்சோர்வு போன்றவையும் இதன் அறிகுறிகளாகும்.
மூளை மூடுபனியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள்:
கணினி மற்றும் கைபேசியில் குறைந்த நேரத்தை செலவிடுதல்.
நேர்மறை சிந்தனையுடன் இருப்பது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொள்ளுதல்.
ஒரு நாளைக்கு 7-8 மணிநேர தூக்கம் அவசியமானது.
உடற்பயிற்சி செய்தல்.
மது அருந்துதல், புகைபிடித்தல், காபி அருந்துதல் போன்றவற்றை தவிர்த்தல்.
மனதுக்கு மகிழ்ச்சி தரும் செயல்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்ளுதல்.
மேலும், இதன் அறிகுறிகள் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமானதாக இருக்கும். சில நபருக்கு மற்றவர்களை விட பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம். மூளை மூடுபனி பார்கின்சன் நோய், நினைவாற்றல் இழப்பு மற்றும் அல்சைமர் நோய் போன்ற நிலைகளுக்கு வழிவகுக்கக்கூடும் என்பதால், இதன் அறிகுறிகளை புறக்கணிக்காமல் உடன் மருத்துவரின் அணுகி, கிசிச்சை எடுத்துக் கொள்வது அவசியமானது.