பெண்கள் இதய நோய்க்கு ஆளாவதற்கான வாய்ப்புகள் 30 வயதுக்குப் பிறகு அதிகரிக்கிறது. ஏனெனில் அப்போதுதான் பெண்கள் உடல் மற்றும் ஹார்மோன் மாற்றங்களை அனுபவிக்கத் தொடங்குகின்றனர். இதனால் இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கிறது. இந்தப் பதிவில் 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மாரடைப்பைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
மாரடைப்பு என்றால் என்ன? மாரடைப்பு என்பது இதயத்திற்கு போதுமான ஆக்சிஜன் செல்லாத ஒரு நிலையாகும். இது பொதுவாக இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் தமனிகளில் அடைப்புகள் உருவாவதால் ஏற்படுகிறது. இந்த அடைப்பினால் ரத்த உறைவு ஏற்பட்டு இதயத்திற்குத் தேவையான ரத்த ஓட்டம் கிடைக்காமல் மாரடைப்புக்கு வழிவகுக்கும்.
30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் கடைபிடிக்க வேண்டியவை:
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் மெலிந்த புரதங்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் உப்பு நிறைந்த உணவுகளைக் குறைக்கவும்.
வாரத்தில் குறைந்தது 150 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சி அல்லது 75 நிமிடங்கள் அதிதீவிர உடற்பயிற்சி செய்யுங்கள்.
புகைப்பழக்கம் மாரடைப்பு அபாயத்தை கணிசமாக அதிகரிக்கிறது. ஒருவேளை உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதை உடனடியாக நிறுத்துவது நல்லது. அதேபோல மதுவையும் மிதமாகவே அருந்துவது மாரடைப்பின் அபாயத்தை குறைக்கக் கூடும்.
நீங்கள் அதிக எடையுடன் இருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக அதை குறைக்க முயற்சி செய்யுங்கள். உங்களது BMI 25க்கு கீழ் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
மன அழுத்தம் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கும். எனவே அதை குறைப்பதற்கு யோகா, தியானம் அல்லது ஆழமான சுவாச பயிற்சிகள் போன்றவற்றை பயிற்சி செய்யுங்கள். நீங்கள் எந்த அழுத்தமும் இன்றி நிம்மதியாக இருந்தாலே எந்த நோயும் உங்களை நெருங்காது.
மருத்துவ கவனிப்பு: வருடத்திற்கு ஒரு முறையாவது உங்கள் கொலஸ்ட்ரால், ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகளை கண்காணிக்கவும். உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால் அல்லது நீரிழிவு நோய் இருந்தால், அவற்றுக்கு சிகிச்சை அளிக்க வேண்டியது அவசியம். உங்களுக்கு இதய நோய் அபாயம் அதிகமாக இருந்தால் உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஆஸ்பிரின் அல்லது ஸ்டேடின்கள் போன்ற மருந்துகளை பரிந்துரைப்பார். அவற்றை முறையாக உட்கொண்டு வந்தால் மரடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.
30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், மாரடைப்பை தடுக்கவும் மேலே குறிப்பிட்ட விஷயங்களை பின்பற்ற வேண்டும். இவ்வாறு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் இதயத்தை என்றும் ஆரோக்கியமாக வைத்திருந்து நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழலாம்.