
பட்ஜெட் போடுவதால் அதாவது நிதி திட்டமிடல் செய்வதால் எண்ணற்ற நன்மைகள் உண்டு. நாட்டிற்கு நிதியமைச்சர் இருப்பது போல் வீட்டினுடைய நிதி அமைச்சர் நீங்கள் தான். எவ்வாறு நாட்டின் நிதி அமைச்சர் நாட்டின் செலவுகளுக்கு நிதி திட்டமிடல் செய்கிறார, அதைப்போலவே வீட்டின் செலவுகளுக்கு நீங்கள் நிதி திட்டமிடல் செய்ய வேண்டும்.
நாட்டின் நிதி அமைச்சர் பட்ஜெட்டின் மூலம் நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை ஒதுக்குகிறார். அதனைப் போலவே வீட்டின் நிதி அமைச்சரான நீங்கள் பட்ஜெட்டின் மூலம் வீட்டின் எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை ஒதுக்க வேண்டும்.
பட்ஜெட் போடுவதால் எண்ணற்ற நன்மைகள் உள்ளன. அவற்றில் பத்து நன்மைகளைப் பார்ப்போம்.
1. பணத்திற்கு வேலை கொடுக்கப்படுகிறது
உங்களுக்கு வருவாயாக வரும் பணம் சும்மா இருக்காமல், அதற்கு வெவ்வேறு வேலைகள் கொடுக்கப்படுகின்றன. அந்த வேலைகளின் மூலம், உங்களது பல்வேறு குறிக்கோள்களை அடைய முடிகிறது.
2. வரவு, செலவுகளைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது
பட்ஜெட் போடாத போது, எப்படி பணம் வரவாகிறது மற்றும் எப்படி பணம் செலவாகிறது என்ற விழிப்புணர்வு இல்லை. பட்ஜெட் போட்டு, ஒவ்வொரு வரவு மற்றும் செலவினை வகைப்படுத்தும் போது, அவற்றைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுகிறது.
3. வரவுகளை அதிகரிக்கவும், செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவரவும் முடிகிறது
வரவுகள் மூலம் பணம் எவ்வாறு வருகிறது, வரவை எங்ஙனம் அதிகரிப்பது, என்று யோசிக்க முடிகிறது. செலவுகள் மூலம் பணம் எவ்வாறு போகிறது. செலவை எங்ஙனம் பட்ஜெட்டிற்குள் வைத்திருப்பது என்று யோசிக்க முடிகிறது. செலவு தாண்டும் போது, செலவுக்கு கடிவாளமிட்டு, செலவினை கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது. சம்பளத்திலிருந்து சம்பளம் (paycheck-to-paycheck) என்கிற அபாயகரமான சுழற்சியிலிருந்து வெளியேறி சேமிக்க, பட்ஜெட் உதவுகிறது. சேமிப்பு மட்டுமன்றி முதலீடு என்று பணத்தைப் பெருக்கவும் பட்ஜெட் உதவுகிறது.
4. நிதி பாதுகாப்பினை அடைய முடிகிறது
அவசர கால நிதி, காப்பீட்டுத் தவணை போன்றவற்றிற்கு பட்ஜெட் போடுவதன் மூலம், நிதி பாதுகாப்பினை அடைய முடிகிறது. கடன் வாங்குதலைத் தவிர்க்க முடிகிறது.
5. நிதிக் குறிக்கோள்களை அடைய முடிகிறது
வருடாந்திர சுற்றுலாவிற்கு, குழந்தைகளின் மேல்படிப்பிற்கு, ஓய்வுகாலத்திற்கு என பல்வேறு நிதிக் குறிக்கோள்களுக்கு பட்ஜெட் போடுவதன் மூலம் பணத்தை ஒதுக்கி அவற்றை அடைய முடிகிறது. சிறு துளி பெரு வெள்ளம் என்பதைப் போல், சிறிது சிறிதாக சேமிக்கும் பணம், பெருமளவில் வளர்ந்து உதவுகிறது. எவ்வாறு கூகிள் மேப்ஸ் ஒரு இடத்தை அடைய வழி காட்டுகிறதோ, அவ்வாறே பட்ஜெட் நமது குறிக்கோளினை அடைய வழி காட்டுகிறது.
6. கடன்களை அடைக்க முடிகிறது
கடன் தவணைகளுக்கு, கடன் அசலினை முன்கூட்டியே அடைப்பதற்கு என பட்ஜெட் போடுவதன் மூலம், கடன் என்னும் எமனிடமிருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடிகிறது.
7. குடும்பத்தின் அமைதியைக் காக்கிறது
குடும்பத்தின் நிதி நிலைமை எவ்வாறு உள்ளது, குடும்பத்தின் எதிர்காலத்தின் நிதி தேவைகளுக்கு எப்படி திட்டமிடுவது என்ற விழிப்புணர்வு பட்ஜெட்டின் மூலம் கிடைக்கிறது. குடும்பத்தில் கவலைகள் ஒழிக்கப்படுகின்றன. குடும்பத்தின் மனஉளைச்சல் தடுக்கப்படுகிறது. குடும்பத்தின் உறுப்பினர்களுக்கு மன நிம்மதி ஏற்படுகிறது. குடும்பத்தின் அமைதி காக்கப்படுகிறது. குடும்ப உறுப்பினர்கள் பாதுகாப்பாக உணர்கின்றனர்.
8. குடும்பத்திற்கு நிதி சார்ந்த தன்னம்பிக்கையைக் கொடுக்கிறது
பட்ஜெட் போடுவதன் மூலம், குடும்பத்தின் நிதி நிலைமையைக் குறித்த தெள்ளத் தெளிவான பார்வை கிட்டுகிறது. இருக்கும் இடமென்ன, அடைய வேண்டிய இடமென்ன என்பதைப் பற்றி தெளிவான பார்வை மட்டுமன்றி, அடைய முடியும் என்ற தன்னம்பிக்கையும் பட்ஜெட் ஊட்டுகிறது.
9. நிதி சுதந்திரத்தை அடைய உதவுகிறது
பட்ஜெட்டின் மூலம், பணத்தை சேமித்து, முதலீடு செய்வதன் மூலம், நிதி சுதந்திரத்தை அடைய முடிகிறது. நிதி சுதந்திரத்தை அடைந்த மனிதனின் வாழ்க்கையில் நிம்மதி வருகிறது.
10. நிதி சார்ந்த பொறுப்புணர்வைக் கூட்டுகிறது
பட்ஜெட் போடும் போது, செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருத்தல், முதலீடு செய்தல் போன்றவற்றில் பொறுப்புணர்ச்சி வருகிறது. நிதி சிக்கல்களைத் தைரியமாக அணுகும் பொறுப்புணர்ச்சியை அளிக்கிறது.
இவ்வாறு பட்ஜெட் என்பது நாட்டிற்கு மட்டுமன்றி வீட்டிற்கும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் ஒரு அருமையானதொரு விஷயம். பட்ஜெட் போட்டு, வாழ்க்கையை வளமாக்கிக் கொள்வோம்.