
நீர் நிலைகளைச் சார்ந்திருக்கும் வாத்தினை ஒத்த உடலளவுடைய பறவையினமான இராக்கொக்கு பறவை (Black-crowned Night Heron) பகல் முழுதும் ஏதாவதொரு மரக்கிளையிலோ புதர்களிலோ ஓய்வெடுத்துவிட்டு, மாலைப் பொழுதுகளிலும் இரவிலும் கூட்டங்களாக வேட்டையாடக் கிளம்புகின்றன.
இப்பறவைகள், மூன்று முதல் எட்டு முட்டைகள் வரை இடுகின்றன. இளம் பறவைகள் பழுப்பும், இளஞ்சிவப்பும் கலந்த உருவையும், பல இடங்களில் வெளிரிப்போன புள்ளிகளையும் கொண்டுள்ளன. அடிப்பகுதிகள் வெளுத்துப் போயிருக்கின்றன. கண்கள் இளஞ்சிவப்பு நிறத்திலும், கால்கள் பச்சை - மஞ்சள் நிறங்களும் கொண்டிருக்கின்றன. இவற்றின் ஒலி காகம் கரைவதைப் போலிருப்பதாலும், இரவில் வேட்டையாடுவதாலும், இதற்கு 'இரவின் காகம்' என்று பொருள் தரும் Nycticorax என்று பெயரிட்டிருக்கின்றனர்.
இராக்கொக்கு பறவை உலகம் முழுதும் பரவி இருக்கின்றன என்றாலும், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினி மற்றும் இவற்றுக்கு அருகேயுள்ள பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுகளையும் கொண்ட ஆஸ்திரலேசியா போன்ற மிகுந்த குளிருள்ள பிரதேசங்களைத் தவிர்க்கின்றன. இப்பகுதிகளில் சில இளஞ்சிவப்பு இராக்கொக்குகள் இருக்கின்றன. உலகில் பல்வேறு வாழ்விடங்களில் வலசை வரக்கூடிய தன்மை கொண்டுள்ள இராக்கொக்கு பறவை, பல இடங்களில் தங்கும் உள்ளூர்ப் பறவைகளாகவே இருக்கின்றன. வட அமெரிக்காவிலுள்ள பறவைகள் மெக்சிகோ, தென் அமேரிக்கா, மத்திய அமேரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு வலசை வருகின்றன. பழைய உலகப் பறவைகள் ஆப்பிரிக்காவிற்கும், தெற்கு ஆசியாவிற்கும் வலசை வருகின்றன.
இப்பறவைகளுக்குக் கருப்பு நிறத்தில் தொப்பியினைப் போன்ற அமைப்பு தலையின் மீது இருக்கிறது. மேலும், வெள்ளையாகவோ, பழுப்பாகவோ உடல் உள்ளது. சிவந்த கண்கள், குட்டையான மஞ்சள் நிறக்கால்கள் இருக்கின்றன. கருத்த நிறத்திலும், மஞ்சள் கலந்த நிறத்திலும் அலகு இருக்கிறது. அல்லது மூன்று இறகுகள் மட்டும் தலையின் பின்புறம் இனவிருத்திக் காலங்களில் நீண்டிருக்கின்றன. இரு பாலினமும் ஒன்றாயிருப்பினும், ஆண் பறவைகள் பெரியதாக இருப்பதைக் காணலாம். இவை மற்ற நாரைகள் அல்லது கொக்குகள் போன்றில்லாமல் சற்றே தடித்த உடல் வாகுடனும் நீளம் குறைந்த அலகினையும், கால்களும், கழுத்தும் கொண்டுள்ளன. கூனல் பொட்டது போன்று அமர்ந்திருப்பது இதன் சிறப்பம்சம். இவ்வகைக் கொக்கு சுமார் 64 செ. மீட்டர் நீளம் வரையும், 800 கிராம் வரை எடையும் கொண்டிருக்கின்றன.
வேட்டையின் போது மட்டும் கழுத்தை நீட்டுவதால், இராக்கொக்கை நீரில் மேய்ந்துண்ணும் பறவைகளோடு ஒப்பிடலாம். மற்ற மீனுண்ணும் பறவைகள் பகலில் வேட்டையாட, இவை மட்டும் இரவில் வேட்டையாடுகின்றன. நீரின் கரையருகே இரவிலும், அதிகாலையிலும் அசையாது தன் இரையின் அசைவுகளைப் பார்த்திருந்து, தருணம் சரியாய் அமையும் வேளையில் இவை கொத்திப் பிடித்து உண்ணுகின்றன. சிறிய மீன்கள், தவளைகள், தேரைகள், பூச்சிகள், ஓடுடைய நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் சிறிய பாலூட்டிகள் இவற்றின் முதன்மை உணவுகளாக இருக்கின்றன.