இன்றைய சூழலில் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய அவசியமான ஒன்றாக கிரெடிட் கார்டு உள்ளது . அந்த வகையில் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்களை தவிர்க்கவும், அதிலிருந்து பயனடைய உதவும் எளிமையான வழிமுறைகள் குறித்தும் இப்பதிவில் காண்போம் .
1. கிரெடிட் கார்டின் லிமிட்டைத் தெரிந்து கொண்டு அதில் 30% அளவுக்கு மட்டும் பயன்படுத்துவது தான் சிறந்தது . ஏனெனில் கிரெடிட் கார்டு லிமிட்டில் 30% அளவுக்கு மட்டும் பயன்படுத்தி, முழு பில் தொகையையும் சரியான தேதியில் கட்டிவந்தால் சிபில் ஸ்கோர் அதிகரிக்கும்.
2. கிரெடிட் கார்டில் கேஷ் வித்ட்ராவல் செய்யாமல் பொருளாக வாங்கினால் 45 நாட்களுக்கு வட்டி இல்லை. பணமாக எடுத்தால் எடுத்த அன்றே ஒரு கட்டணம் பிடிக்கப்பட்டு அன்றிலிருந்தே வட்டி, ஜி.எஸ்.டி உண்டு என்பதால் கேஷ் வித்ட்ராவல் வேண்டவே வேண்டாம்.
3. வங்கிகள் வழங்கும் ரெகுலர், பிரீமியம், பிசினஸ், கேஷ்பேக் என்ற கிரெடிட் கார்டு வகைகளில் நமது தேவைக்கேற்ப தேர்ந்தெடுக்க வேண்டும்.
4. கிரெடிட் ஸ்கோர் பாதிக்காமல் இருக்க கிரெடிட் கார்டின் பில் தொகையை அந்த மாத இறுதிக்குள் முழுமையாக செலுத்தி விட வேண்டும். மாதத்தின் முதல் நாள் கிரெடிட் ரிப்போர்ட் சிபிலில் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
5. நுழைவுக் கட்டணம், ஆண்டு பராமரிப்புக் கட்டணம், பில் தேதி தவறினால் வரும் தாமதக் கட்டணம், வட்டி எவ்வளவு, ஜி.எஸ்.டி எவ்வளவு என்பது போன்ற அனைத்து விதிமுறைகளையும் தெரிந்து கொண்டு கிரெடிட் கார்டைப் பயன்படுத்துங்கள்.
6. ரிவார்டு பாயின்ட்ஸ், கேஷ்பேக், டிராவல் மற்றும் ஏர்போர்ட் லவுஞ்ச் போன்ற பலன்கள் உள்ள கிரெடிட் கார்டுகளுக்கு ஆண்டுக் கட்டணம் இருக்க அதிக வாய்ப்புள்ளதால் ,லைஃப் டைம் ஃப்ரீ கார்டு என்ற ஆசை வார்த்தையை நம்ப வேண்டாம்.
7. கிரெடிட் கார்டு கொண்டு கடைகளில் பொருட்கள் வாங்கும் போது கிரெடிட் கார்டுக்கு 2% கூடுதல் சார்ஜ் பிடிக்கப்படும் சமயத்தில் அதற்குப் பதில் யு.பி.ஐ மூலம் பணம் செலுத்தவும். ரூபே கிரெடிட் கார்டை மட்டும்தான் யு.பி.ஐ உடன் இணைக்க முடியும். விசா, மாஸ்டர் கார்டுகளில் அந்த வசதி இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
8. பலர் கிரெடிட் கார்டில் மினிமம் கட்டணம் செலுத்துவோருக்கு 35%-க்கும் அதிகமான வட்டி, வட்டிக்கு வட்டி, ஜி.எஸ்.டி மற்றும் கெடு தேதியைத் தாண்டினால் தாமதக் கட்டணம் எனப் பெரும் தொகை உங்கள் கிரெடிட் கார்டு பில்லில் சேர்ந்துவரும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.
9. குறைந்த கட்டணம் அல்லது இஎம்ஐ எதுவாக இருந்தாலும், அதில் வட்டி, ஜிஎஸ்டி, புராசஸிங் கட்டணம் என எல்லாமே உண்டு என்பதால் மினிமம் கட்டணம், இஎம்ஐ ஆப்ஷனைத் தவிர்த்து முடிந்தவரை பில் தொகையை முழுமையாகக் கட்டிவிடுவதே நல்லது.
10. ஷாப்பிங் செய்தால் ரிவார்ட் பாயின்ட் கிடைக்கும் என்பதால் பலர் கையில் காசு இருந்தாலும் கிரெடிட் கார்டில் பொருள்களை வாங்குவார்கள். ஆனால், சில கார்டுகளில் ரிவார்ட் பாயின்ட்டைப் பயன்படுத்தி வவுச்சர் வாங்குவதற்கும் ஒரு கட்டணம் கட்ட வேண்டியிருக்கும் என்பதால் அதனை அறிந்து வாங்க வேண்டும்.
கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும் போது கவனமாக இருப்பது ஒரு புறம் இருந்தாலும் விரலுக்கு ஏற்ற வீக்கமாக நம் வருமானத்திற்குள் செலவை செய்வதே எப்போதும் நன்மை பயக்கும்.