
மனம் ஒன்றும் குப்பைக் கிடங்கல்ல. தேவையில்லாத நினைவுகள், எதிர்மறை எண்ணங்கள், மனக்கவலைகள் போன்றவற்றால் நிரப்பி ஒழுங்கற்ற நிலையில் வைத்திருப்பது சரியல்ல. தேவையற்ற விஷயங்களை மனதில் சேகரித்து ஒழுங்குபடுத்தாமல் இருந்தால் மன அழுத்தம் உண்டாகும். நம் மனக்கிடங்குகளில் கொட்டி கிடக்கும் தேவையற்ற சிந்தனை குப்பைகளை கிளறி எடுத்து சுத்தம் செய்வது நம் மனநிலையை மேம்படுத்தும்.
எப்பொழுதோ நடந்தவை, நம் மனதில் ஆறாத புண்ணை ஏற்படுத்தியவை, பிறர் நம்மை தூற்றியதை எல்லாம் மனதில் போட்டு அழுத்திக்கொண்டு இருப்பதால் ஒரு பயனும் இல்லை. நடந்தவை எதையும் மாற்ற முடியாது. சிலவற்றிற்கு வேண்டுமானால் பதில் நடவடிக்கைகளை எடுத்து மனதை தேற்றி கொள்ளலாம். எனவே தேவையற்ற எண்ணங்களை மனதில் இருந்து நீக்கி நல்ல நினைவுகளைக்கொண்டு மனதை மகிழ்ச்சியால் நிறைக்க வேண்டும்.
அன்றன்று சேரும் மனக் குப்பைகளை இரவுக்குள் அலசி ஆராய்ந்து சுத்தம் செய்துவிடுவது நல்லது. எப்படி அசுத்தமான இடங்களில் நாம் உண்ணவோ, வசிக்கவோ விரும்ப மாட்டோமோ அதுபோல்தான் அசுத்தமான நம் மனதில் இறைவன் வசிக்க முடியாது. மன சுத்தம் மகிழ்ச்சியையும், அமைதியையும், இறைவனை காணவும் வழிவகுக்கும்.
தேவையற்ற எண்ணங்களை மனதில் இருந்து நீக்க மனதை வேறு நல்ல விஷயங்களை நோக்கி செலுத்துவதும், எதிர்மறை எண்ணங்களை நிராகரிப்பதும், நேர்மறையான சிந்தனைகளைத் தூண்டுவதும் பயனுள்ள வழிகளாகும்.
தியானம், ஆழமான சுவாசம், மூச்சுப்பயிற்சி போன்றவை மனதை அமைதிப்படுத்தி தேவையற்ற எதிர்மறை எண்ணங்களையும், மன குப்பைகளையும் விரட்டியடிக்கும். புதிது புதிதாக புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதும், கற்றதை பிறருக்கு சொல்லிக் கொடுப்பதும், நிகழ்காலத்தில் கவனம் செலுத்துவதும் மனதை தூய்மையாக வைத்துக் கொள்ள உதவும்.
பழைய தேவையற்ற குப்பைகளை கிளறுவதால் மனதில் கோபம், வெறுப்பு, பழிவாங்கும் எண்ணம் போன்றவை தலை தூக்கும். இதனால் நம் மன நிம்மதி தொலையும். மனதில் இருக்கும் தேவையற்ற எண்ணக் குப்பைகளை நீக்குவது கடினமானதுதான்.
ஆனால் நினைத்தால் முடியாதது என்று கிடையாது. மனம் என்று ஒன்றிருந்தால் அதில் பலவிதமான எண்ணங்கள் இருக்கத்தான் செய்யும். தேவையற்ற எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும் போதுதான் நமக்கு கவலையும், மன அழுத்தமும் ஏற்படுகிறது. தியானம் பயிற்சி செய்வதன் மூலம் இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வரலாம்.
நாம் எதனை மறக்க முயல்கிறோமோ அந்த எண்ணமே மனதில் மேலும் மேலும் வளர்ந்து விஸ்வரூபம் எடுக்கும். இது மனதின் இயல்பு. அதிலிருந்து வெளிவருவதற்கான வழி மனதில் வரும் தேவையற்ற எண்ணங்களை பெரிதுபடுத்தாமல், கண்டுகொள்ளாமல் இருப்பதே. அவற்றைப் பற்றி ரொம்பவும் ஆராயாமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது. ஆரம்பத்தில் சிறிது கடினமாக இருந்தாலும் நாட்கள் செல்லச் செல்ல தேவையற்ற எண்ணங்களின் வீரியம் குறைந்துவிடும்.