

கருவேப்பிலை முதல் கணினி வரை ஆன்லைனில் (Online business) கிடைக்கிறது. ஆன்லைன் பிசினஸ் அப்படி பிரம்மாண்டமாக வளர்ந்து விட்டது. அந்த பிரம்மாண்டத்தைப் பார்த்து, ”அட! நாமும் ஆன்லைன் பிசினஸில் இறங்கித்தான் பார்ப்போமே!” என்று காலை விட்டால், சேற்றில் சிக்கி விடலாம். பெரும் முதலைகள் வாயில் அகப்படலாம் அல்லவா? எனவே, அதற்கு முன்னேற்பாடாக சில திறமைகளை வளர்த்து கொண்டு இறங்கினால் பாதுகாப்பானதாகவும், பயனுள்ளதாகவும் இருக்கும். அதற்கு கீழே குறிப்பிடப்பட்டுள்ள டிப்ஸ் உங்களுக்காக...
1. தகவல் பரிமாற்றம் (Communication)
ஆன்லைன் உலகில் பலதரப்பட்ட மக்களை தொடர்பு கொள்ள வேண்டி இருக்கும். சாதாரண மக்கள, ஐ.டியில் பணிபுரிவோர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் அறிவுமிக்க, ஆற்றல் படைத்தோர் என அனைவரையும் சமாளிக்க வேண்டும். ஏராளமான தொலைபேசி அழைப்புகளை எதிர்கொள்ள வேண்டும். இதில் பல ரகங்கள் இருப்பார்கள்.
”ஒருவர், ”இன்னாப்பா! எப்ப டெலிவரி?” என மிரட்டுவார். மற்றொருவர் ”ஸார், இன்னும் டெலிவரி பண்ணலையா, நீங்க டெலிவரி பண்ண பிறகுதான் அந்த கோட்டைப் போட்டுகிட்டு கோட்டையில விருது வாங்கணும்” என்பார்.
அவர்களுக்கு உரிய நேரத்தில் பொருள் அனுப்பி விடுவோம் என நம்பிக்கை ஊட்டவேண்டும். நம்பகமான பேச்சாற்றலும், அதே நேரத்தில் சொன்ன வாக்கை தவறாமல், உரிய நேரத்தில் டெலிவரி செய்தும், தகவல் பரிமாற்ற திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.
2. சந்தைப்படுத்துதல் (Marketing)
எந்த வணிகமென்றாலும், சந்தைப்படுத்துதல் திறமை முக்கியமாகும், அத்தியாவசியமாகும். புதிய வாடிக்கையாளர்களை கவர்தல், வாடிக்கையாளர்கள் வட்டத்தை விரிவுபடுத்துதல் என திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.
ஒரு பேருந்தில், வயதான பெரியவர் நாலு ஆப்பிள் ஐம்பது ரூபாய் என கூவி கூவி விற்கிறார். ஆனால், யாரும் வாங்க முன்வரவில்லை. அதே நேரத்தில், இன்னொரு வாலிபர் ”ஐந்து ஆப்பிள் ஐம்பது ரூபாய்” என ஒரே கூவல்தான். உடனே கூடை ஆப்பிள்கள் விற்று காலியாகி விட்டன. இதைக் கவனிக்கும் ஒருவர், வயதான பெரியவரைக் கூப்பிட்டு ”நீங்க நாலு ஆப்பிள் ஐம்பது ரூபாய்-ன்னு சொன்னீங்க, யாரும் வாங்கல, அந்த பையன் ஐந்து ஆப்பிள் ஐம்பது ரூபாய்ன்னு சொல்லி உங்க வியாபாரத்தைக் கெடுத்துட்டானே, உங்களுக்கு அவன் மேல் கோபம் வரவில்லையா?" கேட்டார்.
”எதுக்கு சாமீ, கோபம் வரணும்? அந்த பையன் என் மகன்தான், வழக்கமா ஒரு பஸ்ல முன்னாடி நான் ஏறி ஆப்பிள் வித்தா, அவன் பின்னாடி ஏறி ஆப்பிள் வித்துடுவான். இது ஒரு சின்ன பிசினஸ் டெக்னிக்தான். இதுவும் என் பையன் சொல்லி கொடுத்த ஐடியதான்!" என்று விளக்கினார். அந்த விளக்கத்தைக் கேட்டவர், 'மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை செய்யறோம். இன்னும் கத்துக்கணும் போல இருக்கே!' என மனதிற்குள் சொல்லிக் கொண்டார்.
3. விற்பனை மேலாண்மை (Sales Management)
வாடிக்கையாளர்களை தன்பக்கம் ஈர்த்து விடும் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும். அதற்கு விற்கும் பொருட்களின் தரம், அதன் உழைப்பு திறன், அதே பொருட்கள் மற்ற நிறுவனங்களின் தரம், உழைக்கும் திறன் ஆகியவற்றை விரிவாக விளக்கும் ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டும்.
அந்த பொருள் பழுதானால், பழுது நீக்கும் சேவை மையம் உள்ளதா? உள்ளது எனில் சேவை மையத்தின் முகவரி, யாரை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது போன்ற விளக்கத்தையும் விவரித்தால்தான் வாடிக்கையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படும். அவர்கள் திருப்தி அடைந்தால், நீங்கள் விற்பனை மேலாண்மையில் முன்னேறி விட்டீர்கள் என்று அர்த்தமாகும்.
4. சமூக வலைத்தள மேலாண்மை (Social Media Management)
தற்போதைய காலக்கட்டத்தில், அது அரசியல் என்றாலும் ஆன்மீகம் என்றாலும், சோஷியல் மீடியாதான் எல்லாவற்றையும் தீர்மானிக்கிறது... எனவே, சமூக வலைத்தளங்களான முகநூல், டிவிட்டர், யூடியுப், லிங்க்ட்இன் மற்றும் இதர சோசியல் வலைத்தளங்களின் விவரங்கள், அதன் செயல்பாடுகளில் கவனம் செலுத்தும் திறமையை வளர்த்து கொண்டு அதனை ஆன்லைன் வர்த்தகத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.
5. வாடிக்கையாளர்களை கையாளுதல் (Dealing with Customers)
பூங்காவில் எல்லா செடிகளும் பார்க்க அழகாய்த்தான் தெரியும். அதில் பூக்கும் பூக்கள் நம்மைக் கவரத்தான் செய்யும். சில செடிகள் முட்கள் நிறைந்ததாக இருக்கும். சில செடிகள் முட்கள் இருக்காது. அது போல வாடிக்கையாளர்களில் பல ரகங்கள் உண்டு. ஒருவர் மிக அன்பாக பேசுவார், மற்றொருவர் ”டேய்!” என அதட்டலாக பேசுவார். இதையெல்லாம் ”பிசினஸ்ல சகஜமப்பா! என்று எடுத்து கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு நடந்து பிசினஸ் முடிக்க வேண்டும்.
சமீபத்தில் உணவு சேவை செய்யும் நிறுவனத்தில், ஊழியர் மேல் ஒரு பெண் தன்னைத் தாக்கியதாக இன்ஸ்டாகிராமில் இன்புளுயன்ஸ் செய்து அது இந்திய அளவில் டிரெண்ட் ஆனது.
அந்த நிறுவனம் வாடிக்கையாளரான அந்த பெண்ணையும் இழக்காமல், அதே நேரத்தில் தன் நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளரின் முந்தைய நல்ல செயற்பாடுகளை கருத்தில் கொண்டு அவரையும் இழக்காமல் நல்ல முறையில் கையாண்டு வெற்றி கண்டது அந்த நிறுவனம்.
6. கணக்கு வழக்கு (Accounting)
'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு' என்பது பழமொழி. எந்த வியாபாரம் என்றாலும், சொத்து, இலாபம், வளர்ச்சியை முன்னோக்கிதான் செல்லும். 'நாம்தான் முதல் போட்டு விட்டோமே' என்று ஹாயாக காற்று வாங்கி கொண்டிருந்தால், 'பார்க்காத பயிரும் பாழ்' என்ற நிலையாகி விடும். அவ்வப்போது கணக்கு வழக்குகளை பார்க்கும் திறமையை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.
7. நேர மேலாண்மை (Time Management)
ஆன்லைன் பிசினஸக்கு நேர மேலாண்மை அவசியமாகும். வாடிக்கையாளர் ஆர்டர், அவை உரிய நேரத்தில் டெலிவரி செய்யப்பட்டதா? என அலசி ஆராய வேண்டும். அதற்கு 24x7 செயல்பாடு அவசியமாகும்.
8. தேடுபொறி சந்தை (Search Engine Optimization Marketing)
ஆன்லைன் வணிகத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த எஸ்இஓ பெரும்பாலான ஆன்லைன் பிசினஸக்கு உதவிகரமாக இருக்கிறது. உங்கள் நிறுவனத்தை இந்த தேடுபொறி பதிவில் முதலிடத்தில் வரவழைத்து விடுவதை திறமையாக செயல்படுத்த வேண்டும். இது போட்டிகள் நிறைந்த உலகப்பமா என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
9. வார்த்தை வடிவமைப்பு (Content Creation)
ஆன்லைன் பிசினஸ்க்கு அவசியமானவை அழகான சொற் பிரயோகம். உதாரணமாக அமேசானின் லோகோவைப் பாருங்கள். அதில் A to Z என்ற எழுத்து இருக்கும். அது என்னவென்றால், ”எந்த பொருள் வேண்டுமென்றாலும்.
அதாவது கருவேப்பிலை முதல் கார் அல்லது கணினி வரை விற்பனை சேவையை நாங்கள் வழங்குகிறோம்" என்ற அர்த்தத்தில் மிக துல்லியமாக அடித்து சொல்கிறார்கள். அந்தளவிற்கு உங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.
10. குழு மேலாண்மை (Team Management)
இது ரொம்பவே முக்கியம். ஒரு திருமணம் என்றால் மாப்பிள்ளை, பெண்ணும் மட்டும் வந்து விட்டால் போதாது. பூ அலங்கரிப்பவர் முதல் மேடை கச்சேரி, வாத்திய தாளம் இசைப்பவர், சமையல், சமைத்த உணவை பரிமாறுபவர், சாப்பிட்ட பின் இலையை எடுப்பவர் என ஒருங்கிணைந்தால் அந்த திருமணம் திருப்தியுடன் நிறைவுற்றதாக அமையும்.
அதே போல குழு மேலாண்மையில் கவனம் செலுத்தி வெற்றி பெற்றால் ஆன்லைன் பிசினஸ் என்ன? அம்பானி, அதானி பிசினஸ்களையும் வசப்படுத்தலாமே!