

பொருளாதாரம் மேலோங்க வேண்டும் என்றால் ஒரு பொருளுக்கு ட்ரேடு மார்க் மிகவும் அவசியம். அதற்கு முன்னோடிகள் என்னென்ன என்பதையும் அவை எல்லாம் சீராக இருந்தால் நாட்டின் பொருளாதாரம் எப்படி மேலோங்கும் என்பதையும் இப்பதில் காண்போம்.
விளம்பரம்:
ஒரு பொருளை விற்பனை செய்ய வேண்டும் என்றால் அதற்கு விளம்பரம் அவசியம். அந்த விளம்பரமும் உண்மையை கூறுவதாக இருக்க வேண்டும். அப்படி நம்பகத் தன்மை இல்லாது பொய்மை நிறைந்ததாக இருந்தால் அதை மக்கள் எளிதில் அடையாளம் கண்டு கொண்டு வாங்க மறுத்து விடுவார்கள். இதனால், உற்பத்தி திறன் பாதிக்கப்படும். உற்பத்தி பாதிக்கப்பட்டால் தரம் தாழ்ந்த பொருள் என்று அதற்கு ஒரு அடையாளம் குத்தப்படும். அதனால், தொழில் நசிவுறும்.
ட்ரெண்டிங்:
ஒரு தொழிற்சாலை ஒரே பொருளை பல ஆண்டுகளாக ஒரே நிலையில் உற்பத்தி செய்யலாம். அந்த வகையில் அது சிறந்ததாக போற்றப்படத்தக்கதே.
ஆயினும், கால வேறுபாடுகளை மனதில் வைத்து காலமாற்றத்துக்கு தகுந்தாற் போல் மக்களின் மனமாற்றத்துக்கு ஏற்ப அப்பொருளை பயன்படுத்தும் முறை மாறுபடுகிறது என்றால் அதற்கு ஏற்ப அந்த பொருளை வித்தியாச முறையில் பெருக்கி விற்பனை செய்ய வேண்டும். உதாரணமாக, ஆடைகளையும் அணிகளையும் கூறலாம். ட்ரெண்டிங் ஆக துணிமணிகளை எடுப்பதை தான் இக்கால மக்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக இளைஞர் இளைஞிகள். அவர்களுக்கு தகுந்த மாதிரி ஆடையை வடிவமைத்தால் உற்பத்தி திறனை பெருக்க முடியும். ஒரு காலத்தில் பள்ளி மாணவிகளின் சீருடை பாவாடை, தாவணி, சட்டையாக இருந்தது. இப்பொழுது அது சுடிதாராக மாற்றம் பெற்று உள்ளது. இப்படி விதவிதமாக ஆடையை உற்பத்தி செய்யும் பொழுது வியாபாரம் மேலோங்கும். மக்களின் வாங்கும் திறன் கூடும்.
தேவை:
ஒவ்வொரு மாநிலம் மற்றும் நாட்டிலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் அங்குள்ள தேவையைப் பொறுத்துதான் அமையும். அதற்கு ஏற்றாற்போல் உற்பத்தி செய்ய வேண்டும். அப்பொழுது தான் அது விற்பனையாகும். இவற்றின் தேவை நாடுதோறும் வேறுபடலாம். உதாரணமாக அடுப்படியில் உணவு தயாரித்து உண்பதற்கு தமிழகத்தில் தேவையான பொருட்கள் வேறு. ஆங்கில நாட்டில் வேறு.
துணைப் பொருட்களின் உற்பத்தி:
அப்படியே வெப்ப நாடுகளின் உடை நிலைக்கும் குளிர் நாடுகளின் உடை நிலைக்கும் வேறுபாடு உண்டு. இப்படித்தான் உற்பத்தியை பெருக்கும் நிலையிலும் வேறுபாடு காணலாம். விவசாய நாட்டில் விவசாயத்துக்கு வேண்டிய பொருள்களை தயார் செய்யும் இயந்திரங்களையும், சாதனங்களையும் உண்டாக்கலாம். உண்டாக்கவும் வேண்டும். மோட்டார் வண்டி தயார் செய்யும் நாட்டில் அதற்கு வேண்டிய துணைப் பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும்.
காட்சி பொருள்களாக கிடைப்பதற்கும் நாடுதோறும் வேறுபாடு காண்கின்றோம். இயற்கையோடு ஒட்டிய வாழ்விற்கு ஏற்ற காட்சி பொருள்களும் வேறு சிலவும் பல்வேறு மக்களின் காட்சி பொருள்களாக அமைகின்றன. பொருளாதார அடிப்படையிலும் அப்படியே மர அகப்பை தொடங்கி தங்க கரண்டி வரையில் நாட்டில் புழக்கத்தில் உண்டு. இவை அனைத்தையும் மனதில் கொண்டு அந்தந்த நிலத்திலே வாழ்ந்து வரும் மக்கள் சமுதாயத்தின் பண்பாடு, பழக்க வழக்கம், செல்வநிலை, மனநிலை இவற்றை அறிந்து அவற்றின் அடிப்படையில் உண்டாக்கும் பொருட்கள் சந்தைகளில் சிறந்த விற்பனை ஆகின்றன. இதை உணர்ந்து இப்பொழுது எல்லா நாடுகளும் உற்பத்தித்திறனை பெருக்க ஆரம்பித்துவிட்டன. இதனால் தான் நாடுகளுக்கு இடையே போட்டிகளும் ஏற்றுமதி இறக்குமதிகளும் அதிகரித்து உள்ளன.
ட்ரேட் மார்க்:
வாணிபத்தில் விற்பவர் வாங்குபவர் இருவருமே முக்கியமானவர். விற்பவருக்கு லாபத்திலே குறிக்கோள். வாங்குபவருக்கும் தான் தரும் பணத்துக்கு ஏற்ற பொருளை பெற வேண்டுமே என்ற சிந்தனை. இந்த இரண்டுக்கும் இடையே உற்பத்தியாளர்கள் இருவர் மனதையும் அறிந்து அதற்கு ஏற்ற வகையில் உற்பத்தியை பெருக்குவார்கள். நாட்டில் வாணிபம் நல்ல வகையில் நடைபெறும் என்பதில் ஐயமில்லை.
எத்தனையோ மாறுபட்ட புதுப்புதுப் பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு வந்தாலும் அவற்றை எல்லாம் விட்டு நல்ல பொருளையே விலை கொடுத்து வாங்கும் வழக்கம் எந்த நாட்டிலும் உள்ளது. அந்த கம்பெனியின் உற்பத்தி சரக்கா? அப்படியா என்று கேட்கவே வேண்டியது இல்லை வாங்கி வாருங்கள் என்றும் மக்கள் கூறி நல்ல பொருட்களுக்கு முத்திரை இட்டு விடுகிறார்கள். அதனாலேயே நாட்டில் உற்பத்தியாளர் தமக்கு தனியாக உள்ள சிறப்பை உலகில் என்றும் நிலை நிறுத்தி காட்ட ஒரு முத்திரையை அமைத்துக் கொள்கிறார்கள். இதையே Trade Mark என்கின்றோம்.
நாள்காட்டி முதல் மருந்து வகை வரையிலும் பலர் தத்தம் உற்பத்தியை அரசாங்கத்திடம் காட்டி தமக்கென தனித்தனி முத்திரையைப் பெற்றுக் கொள்கிறார்கள். பாரின் சாக்லேட்டா, பிரிட்டானியா பிஸ்கட்டா, சங்கு மார்க் லுங்கியா என்று கேட்டு மக்கள் பொருள்களில் சிறந்ததாக சிலவற்றை வாங்குவதை இன்றும் காண்கிறோம். எனவே உற்பத்தியாளர் தான் தொடங்கிய காலத்தில் உற்பத்தி செய்த உயர்ந்த ரக சிறப்பை ஒரு சிறிதும் குறைக்காமல் இருப்பார்கள் ஆயின் விற்பவர் வாங்குபவர் யாருக்கும் தொல்லை இருக்காது.
அத்தகைய பெரும் உற்பத்தி சாலைகள் சில்லறை விற்பனையாளருக்கு தகுந்த விலை தருவதுடன் நாட்டின் எந்த பகுதியிலும் இந்த விலைக்கு மேல் விற்பது கூடாக என்ற கட்டுப்பாடும் செய்து விடுகின்றனர். எனவே பெருநகரங்களில் இருந்து சாதாரண கிராமக் கடைகளில் உள்ளவர்கள் வரை அந்த பெரும் தொழிற்சாலை பொருள்களை விற்று தத்தமக்குரிய பணத்தை லாபமாக பெறுகிறார்கள். அதன்படியே விற்பவர்கள் அந்த முத்திரை உடைய பொருள் எங்கே வாங்கினாலும் ஒன்றே எனவும் ஒரே விலை எனவும் கருதி வாங்கி மனநிறைவு பெறுகிறார்கள். எனவே வியாபாரத்தின் நாணயம் அனைத்துக்கும் உற்பத்தி சாலைகளே அடிப்படைகளாக மாறுகின்றன.
இப்படி முத்திரை பதிப்பது என்பது எவ்வளவு அவசியமான ஒன்று என்பதை இதில் இருந்து தெரிந்து கொள்ளலாம். இதனால்தான் ஒருவரின் அதிகாரப்பூர்வமான முத்திரையை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தும் பொழுது கோர்ட்டுக்கு செல்ல வேண்டிய நிலையும் ஏற்படுகிறது என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.