அமைத்து விடு. மறந்து விடு பட்ஜெட் என்றால் என்ன?
அமைத்து விடு. மறந்து விடு பட்ஜெட் முறை ஆங்கிலத்தில் Set it Forget it Budget என்று அழைக்கப்படுகிறது. பட்ஜெட் போடும் போது, அதிக மெனக்கெடல் தேவைப்படுகிறது. செலவுகளை வரி வரியாக பட்டியலிட்டு, அவற்றை வகைப்படுத்த மெனக்கெடல் தேவைப்படுகிறது. அமைத்து விடு, மறந்து விடு பட்ஜெட் முறையில் தானியங்கி முறையில், சம்பளம் வந்தவுடன் மாதாந்திரம் செலுத்த வேண்டிய ரசீதுகள், நிதிக்குறிக்கோள்களுக்கான முதலீடுகள், பொழுதுபோக்கிற்காக ஒதுக்கப்பட்ட பணம் போன்றவற்றிற்கு, தனித்தனியாக கணக்கு தொடங்கி பணம் தானியங்கி முறையில் ஒதுக்கப்படுகிறது.
அதன் மூலம், அந்தந்த நிதிக் குறிக்கோள்களை அடைவது எளிதாகிறது. எல்லா மாதாந்திர ரசீதுகளும் நேரத்தில் செலுத்தப்படுகின்றன. தாமதக்கட்டணங்கள் தவிர்க்கப்படுகின்றன. பொழுதுபோக்கிற்கான பணம், பொழுதுபோக்கினைத் தாண்டி செலவாகாமல் கட்டுக்குள் இருக்கிறது. இங்கு முக்கியமாக கவனிக்க வேண்டியது தானியங்கி முறை, சம்பளப்பணம் வங்கியில் சும்மா இருக்காமல், உடனே தானியங்கி முறையில், பிரித்து வைக்கப்பட்டு விடுகிறது.
எனவே, நிதி குறிக்கோள்களைச் சார்ந்து வாழ்க்கையை அமைத்துக் கொள்வது எளிதாகிறது.
அமைத்து விடு. மறந்து விடு பட்ஜெட் போடுவது எப்படி?
1. ஒரு மாதத்திற்கான வரவுகளை, வரவு செலவு கணக்கு நோட்டுப் புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்.
2. ஒரு மாதத்திற்கான செலவுகளை, வரவு செலவு கணக்கு நோட்டுப் புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்
3. படி இரண்டாவதில் எழுதிய செலவுகளை வகைப்படுத்த வேண்டும். பின்வரும் வகைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உணவு , உடை, இருப்பிடம், வாகனங்கள், பொழுதுபோக்கு, பயன்பாடுகள், குடும்பம், மருத்துவம், கடன், பயணம், சுற்றுலா, காப்பீடு, சுய பராமரிப்பு, பரிசுகள், ஈகை.
அடுத்தபடியாக, நிதிக்குறிக்கோள்களைப் பட்டியலிட வேண்டும்.
4. சம்பளத்தேதியின் அடுத்தநாள் அன்று பணத்தைத் தானியங்கி முறையில் ஒதுக்கி விட வேண்டும். எல்லா மாதாந்திர ரசீதுகளுக்கான பணத்தைத் தானியங்கி முறையில் செலுத்தி விட வேண்டும். உதாரணமாக, மின்சார கட்டணம், தொலைக்காட்சி கட்டணம், இணையக் கட்டணம் போன்றவை. இப்போது சில சேமிப்புக் கணக்குகள் துவங்க வேண்டும். அவை பொழுதுபோக்கு, நிதிக் குறிக்கோள்களுக்காக தொடங்கப்பட வேண்டும். பொழுதுபோக்கிற்கான பணம் தானியங்கி முறையில், பொழுதுபோக்கு கணக்கிற்கு ஒதுக்கப்படவேண்டும்.
நிதிக் குறிக்கோள்களான வருடாந்திர சுற்றுலா, குழந்தைகளின் மேல்படிப்பு, அவசரகால நிதி, ஓய்வுகாலத்திற்கான முதலீடு, கடன்கள் போன்றவற்றிற்கு தனித்தனியே கணக்குகள் ஒதுக்கப்பட வேண்டும்.
வருடாந்திர சுற்றுலாவிற்கு, தொடர்வைப்பு நிதிக் கணக்கு தொடங்க வேண்டும். அவசர கால நிதிக்கு சேமிப்புக் கணக்கு தொடங்க வேண்டும். குழந்தைகளின் எதிர்கால படிப்பு, திருமணத்திற்கு பொது சேமநல நிதி, சுகன்யா சம்ருத்தி திட்டம் போன்ற கணக்குகளைத் தொடங்க வேண்டும்.
ஓய்வுகால முதலீட்டிற்கு சேமிப்புக் கணக்கு தொடங்கி, அதிலிருந்து பரஸ்பர நிதிகள் போன்ற முதலீடுகளைத் தானியங்கி முறையில் செய்ய வேண்டும். அதற்கு முறைசார்ந்த முதலீட்டுத் திட்டத்தைப் (Systematic Investment Plan- SIP) பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது மாதாந்திரம் அதிலிருந்து நாமே செய்யலாம். பொழுதுபோக்கிற்காக ஒதுக்கிய பணத்திலிருந்து மட்டுமே பொழுதுபோக்கு செலவுகளான வெளியே உணவருந்துதல், திரைப்படம் பார்த்தல் போன்ற செலவுகளைச் செய்ய வேண்டும். பொழுதுபோக்கிற்கு ஒதுக்கிய பணம், பொழுதுபோக்கு கணக்கில் தீர்ந்து விட்டால், அடுத்த மாதம் அந்தக் கணக்கிற்கு, தானியங்கி முறையில் பணம் வரும் வரை காத்திருக்க வேண்டும்.
5. மாத இறுதியில் ஏதேனும் பட்ஜெட்டை மீறி தவறு நடந்திருந்தால் அதற்கு ஏற்றவாறு அடுத்த மாத பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். தானியங்கி முறையில் ஒதுக்கப்படும் பணத்தை மாற்ற வேண்டும். நிதிக்குறிக்கோள்களை அடைந்த பிறகு, அதற்கு ஏற்றவாறு பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். உதாரணத்திற்கு, குறுகிய காலக் குறிக்கோளான கார் வாங்குவதற்கு தனியாக தொடர் வைப்பு நிதி கணக்கு தொடங்கி பணத்தை ஒதுக்கி இருந்தால், அதனை அடைந்த பிறகு, அந்தக் கணக்கை மூடி விடலாம். அந்தப் பணத்தை மற்றொரு குறிக்கோளுக்கு தானியங்கி முறையில் பயன்படுத்தலாம்.
அமைத்து விடு. மறந்து விடு பட்ஜெட்டின் நிறைகள் யாவை?
தானியங்கி முறை - சம்பளம் வந்தவுடனேயே தானியங்கி முறையில் ஒதுக்கப்படுவதால், பட்ஜெட் எளிமைப்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் தனித்தனியாக மெனக்கெடல் தேவையில்லை.
செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது எளிதாகிறது - பணம் ஏற்கனவே சேமிப்புகளுக்கு ஒதுக்கப்பட்டு, செலவுகளுக்கு தனியாக ஒதுக்கப்படுவதால், செலவுகள் கட்டுக்குள் வருகின்றன.
நிதிக்குறிக்கோள்களை அடைவது எளிதாகிறது - நிதிக்குறிக்கோள்களை அடைவதற்கு பணம் ஒதுக்கப்பட்டு, எளிமையாக நிதிக் குறிக்கோள்களை அடைய முடிகிறது.
அமைத்து விடு. மறந்து விடு பட்ஜெட்டின் குறைகள் யாவை?
தொடக்கத்தில் அதிக மெனக்கெடல் தேவைப்படுகிறது - தனித்தனியாக சேமிப்புக் கணக்குகள் தொடங்கி, அதற்கு தானியங்கி முறையில் பணம் ஒதுக்க, தொடக்கத்தில் அதிக மெனக்கெடல் தேவைப்படுகிறது.
மேலோட்டமானது - செலவு வகைகளுக்கு தனித்தனியாக நிதி ஒதுக்கி திட்டமிடாததால், தனிப்பட்ட செலவுகளைக் கட்டுப்படுத்துவது கடினமாகிறது.
அமைத்து விடு. மறந்து விடு பட்ஜெட்டினை மேம்படுத்துவது எப்படி?
பொழுதுபோக்கிற்கான செலவுகளுக்கும் தனித்தனியாக கணக்குகளை வைத்திருப்பதன் மூலம், அதனை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.தனித்தனியாக கணக்கு வைத்திருப்பது கடினமெனில், யூபிஐ வாலட் போன்றவற்றில் பணத்தை நிரப்பி, எளிமையாக செலவுகளைக் கையாள முடியும்.
அமைத்து விடு. மறந்து விடு பட்ஜெட்டைப் பயன்படுத்தி நிதி சுதந்திரத்தை அடைய வாழ்த்துகள்.