
இந்திய நிதியமைச்சரால் இவ்வருடம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் பல அம்சங்கள் இருந்தாலும், வள்ளுவர் ஊழைப் பற்றிப் பேசுகையில் ‘தான் முந்துறும்!’ என்று சொன்னதைப்போல,12 லட்சம் எல்லாவற்றுக்கும் முன்பாகதுருத்திக் கொண்டு நிற்கிறது!
இது நடுத்தர வருவாய் ப்ராக்கட்டில் உள்ள கோடிக் கணக்கோரின் பல வருட எதிர்பார்ப்பாகும்! ஒவ்வொரு ஆண்டும் நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டதும், வருமான வரியில், எதிர்பார்த்த அளவுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருந்து வந்த நிலையில், இந்த வருடம் அப்படியே உல்டாவாக, எதிர்பார்த்ததோ 10 லட்சம், அறிவிக்கப்பட்டதோ 12 லட்சம் என்ற ரீதியில், ஆச்சரியகரக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
நமது நாட்டில், காலம் காலமாக ஆளும் கட்சி எவ்வளவு நல்ல திட்டங்களை பட்ஜெட்டில் அறிவித்தாலும், எதிர்க்கட்சிகள் அவற்றைக் குறை கூறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளன. இதற்கு எந்தக் கட்சியும் விதிவிலக்கல்ல; இந்தப் பட்ஜெட்டும் விதிவிலக்கல்ல!
வழக்கம்போலவே பிரதமர் தொடங்கி, ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் அனைவரும், ‘அனைவரின் வளர்ச்சியையும் உள்ளடக்கிய உயர்ந்த பட்ஜெட் இது!’ என்று புகழாரம் சூட்ட, எதிர்க்கட்சிகளோ ‘எதற்கும் உதவாதது இது!’ என்கின்றன. குறிப்பாக வருமான வரியைச் சுட்டிக்காட்டிப் பேசிய முன்னாள் நிதியமைச்சர், ’இதற்குப் பதிலாக ஜிஎஸ்டி-யில் மாற்றம் கொண்டு வந்திருந்தால் பலருக்கும் பயனுள்ளதாக அமைந்திருக்கும்!’ என்று கருத்து சொல்லியிருக்கிறார்.
இந்தியாவின் தற்போதைய மக்கட்தொகை ஏறத்தாழ 145 கோடியென்றும், அதில் வாக்களிக்கும் மக்களில் 2.2 விழுக்காட்டினர் மட்டுமே வரி செலுத்துவோர் என்றும், அதன்படி 2021-22ல் 20.9 மில்லியன் அதாவது 2 கோடிக்கும் சற்று அதிகமானோரே வரி செலுத்தியுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய நிலையில் 3 கோடி பேர் வரி செலுத்துவதாகவும், அதில் ‘இந்தப் பன்னிரண்டு லட்சம் வரை வருமானம் ஈட்டுவோர் வருமான வரி கட்ட வேண்டியதில்லை என்ற அறிவிப்பால் ஒரு கோடி பேர்தான் பயனடைவார்கள்’ என்றும் மற்றொரு விபரக் குறிப்பு தெரிவிக்கிறது.
நமது நாட்டில் வாக்களிப்போரின் எண்ணிக்கையில் 2.2 விழுக்காட்டினர் மட்டுமே வரி செலுத்துகையில், அமெரிக்காவில் அந்த சதவீதம், மூக்கில் விரலை வைக்காதீர்கள்.... 50 விழுக்காடாம்! அது பணக்கார நாடாக இருப்பதன் காரணம் இப்பொழுது தெரிகிறதா?
கடல் என்றால் அலை வற்றாது என்பது போல, அரசியல் என்றால் ஒரு சாரார் ஆளும் கட்சியைப் போற்றுவதும் எதிர் சாரார் தூற்றுவதும் என்பது வழிவழியாக வரும் நடைமுறைதான்!
அரசியலைப் புறந்தள்ளி விட்டுப் பட்ஜெட்டைப்பார்த்தால், பல வருடங்களாக நடுத்தர வர்க்கத்தினர் எதிர்பார்த்த வருமானவரிச் சலுகை இவ்வாண்டு தாராளமாகவே கிடைத்திருப்பதை உணரலாம். ஆனாலும் நாம் கட்டுகின்ற வரிதான் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவுகிறது என்பதையும், அதை முறையாகச் செலுத்த வேண்டுமென்பதையும் நம்மில் பெரும்பாலானோர் இன்னும் புரிந்து கொள்ளாதது வருத்தமளிப்பதாகவே உள்ளது.
மேலை நாடுகளில் உள்ள மக்கள் ‘வரியை உயர்த்துங்கள்! வளத்தைப் பெருக்குங்கள்!’ என்று கேட்பதாகவே, மீடியாக்கள் தெரிவிக்கின்றன.
சரி! நம்முடைய நாட்டின் தற்போதைய வருமான வரி அடுக்கு (tax slab) நாம் அறிந்ததே! இன்று லட்சங்களில் பேசப்படும் வருமான வரி அடுக்கு, நாம் சுதந்திரம் பெறுமுன் எவ்வாறு இருந்தது என்பதைக் கண்டால், நமக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நீங்களே பாருங்களேன்!