
குறிக்கோளுக்கான முதலீட்டுக் கலவையை அவசியமின்றி மாற்றி அமைக்காதீர்கள். முதலீட்டுக் கலவையின் மூலக்கூறுகளை அடிக்கடி மாற்றுவதால் முதலீட்டுக் கலவையால் குறிக்கோளினை அடைவது பாதிக்கப்படலாம். ஒரு குறிக்கோளுக்காக உருவாக்கப்பட்ட முதலீட்டுக் கலவை குறிக்கோளின் காலவரையறை அவசியமின்றி மாற்றப்படக்கூடாது. அரிதான சமயங்களில் மட்டுமே முதலீட்டுக் கலவையில் மாற்றத்தினைக் கொண்டு வரலாம். அவைகளும் திட்டமிட்டபடியே அமைய வேண்டும். வேறு ஏதாவதொரு முதலீட்டில் இன்னும் அதிகமாக பணம் கிடைக்கும் என்று அடிக்கடி முதலீட்டுக் கலவையை மாற்றியமைத்துக் கொண்டிருந்தால் முதலுக்கே மோசம் ஏற்படலாம்.
இதனைக் குறித்த ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்.
ஒரு காட்டில் ஒரு சிங்கம் கடும் பசியில் இருந்தது. அலைந்து திரிந்த சிங்கத்திற்கு சரியான இரை கிடைக்கவில்லை. அப்பொழுது அதன் கண்களில் ஒரு முயல் தென்பட்டது. அந்த முயலைப் பிடிப்பதற்காக சிங்கம் அதனைத் துரத்த ஆரம்பித்தது. முயலைத் துரத்திக் கொண்டிருக்கும் பொழுது அருகில் ஒரு யானைக்குட்டி கண்களில் தென்பட, முயலைப் பிடிக்கும் முயற்சியைக் கைவிட்டு யானைக் குட்டியைப் பிடிக்கும் முயற்சியில் சிங்கமானது இறங்கியது. யானைக் குட்டியும் வெகு விரைவாக ஓடத் தொடங்கியது. சற்று நேரம் யானைக் குட்டியைத் துரத்திச் சென்ற சிங்கம், அருகில் ஒரு காட்டெருமையைக் கண்டது. காட்டெருமையைப் பிடிக்கும் எண்ணத்துடன் யானைக் குட்டியைத் துரத்துவதை சிங்கம் விட்டு விட்டது.
காட்டெருமையைச் சிங்கம் துரத்திக் கொண்டிருந்த பொழுது காட்டெருமை ஓடி ஒரு நதியில் இறங்கி நீந்தி அடுத்த கரைக்குச் சென்று விட்டது. சிங்கம் உடனே அருகில் இருந்த ஒரு புள்ளி மானைக் கண்டது. உடனே புள்ளிமானைச் சிங்கமானது துரத்தத் தொடங்கியது. சிங்கமானது ஒரு மிருகத்தை விட்டு ஒரு மிருகத்தை மாற்றி மாற்றி துரத்திய காரணத்தினால் ஏற்கனவே பசியிலிருந்த சிங்கமானது மிகவும் சோர்வடைந்து விட்டது. அதனால் புள்ளிமானைத் துரத்த முடியவில்லை. முதலில் தான் கண்ட முயலினையே தான் பிடித்துக் கொண்டிருந்தால் ஓரளவுக்காவது தனது பசி தீர்ந்திருக்கும் என்று நினைத்த சிங்கம், ஒரு குறிக்கோளை விட்டு மற்றொரு குறிக்கோளுக்கு மாறிச் சென்ற தனது செயலை நினைத்து வருந்தியது. மிகவும் சோர்வடைந்த சிங்கம் பசியில் தரையில் விழுந்தது. இறுதியில் பசியிலேயே உயிரை விட்டது.
இந்தக் கதையில் சிங்கத்திற்கு குறிக்கோள் என்பது பசியைப் போக்குவது. அந்தக் குறிக்கோளுக்கு சிங்கத்திற்கு தனது உடல் பலம் என்பது முதலீடு. தனது உடல் பலத்தைக் குறிக்கோளை நோக்கி சரியாக பயன்படுத்தி இருந்தால், அது தனது குறிக்கோளை அடைந்து தனது பசியைப் போக்கிக் கொண்டிருக்கும். ஆனால் சிங்கமானது பசியைத் தீர்ப்பது என்ற குறிக்கோளை அடைய தனது முதலீட்டை வெவ்வேறு விதமாக மாற்றிக் கொண்டே இருந்தது. முதலில் முயலை நோக்கி, அந்த முதலீடு செய்யப்பட்டது.
பின்னர் அந்த முதலீடானது சிறிது நேரம் செயல்பட்ட பிறகு, யானைக்குட்டியை நோக்கி அந்த முதலீடு செய்யப்பட்டது. பின்னர் அந்த முதலீடானது காட்டெருமையை நோக்கிச் செய்யப்பட்டது. இறுதியில் அந்த முதலீடானது புள்ளி மானை நோக்கி செய்யப்பட்டு முதலீட்டின் அளவு குறைந்து கொண்டு இறுதியில் முதலீடு அளவில் குறைந்து, முதலுக்கு மோசம் ஏற்பட்டு விட்டது. இறுதியில் உடல் பலம் என்கிற முதல் இல்லாமல் சிங்கமானது குறிக்கோளை அடையாமல் உயிரை விட நேர்ந்தது.
நாமும் நமது முதலீட்டுக் கலவையை நமது குறிக்கோளுக்கு ஏற்றபடி அமைக்க வேண்டும். முதலீட்டுக் கலவையை அவசியமின்றி மாற்றியமைக்கக் கூடாது. உதாரணமாக, குறுகிய காலக் குறிக்கோள்களுக்கு வைப்பு நிதி சிறப்பானது. வைப்பு நிதியில் பணம் குறைவாக வளர்கிறது என்று எண்ணி, பங்குகள் நன்றாக வளர்கின்றன என்று முதலீட்டை எடுத்தால், வட்டி இழப்பு என்ற வகையில் முதலீட்டின் வளர்ச்சி குறைவாக இருக்கும்.
பங்குகளில் முதலீடு செய்து பங்குகள் வீழ்ச்சி அடைகின்றன என்று எண்ணி, கடன் பத்திரங்களுக்கு முதலீட்டை மாற்றினால் பங்குகளில் செய்த முதலீட்டிற்கு நஷ்டம் ஏற்படலாம்.
கடன்பத்திரங்களில் செய்த முதலீடு , தங்கம் வளர்கிறது என்று மறுபடியும் எடுத்து தங்கத்தில் முதலீடு செய்தால், பங்குகள் மறுபடி வளர்ச்சி அடைவதன் காரணமாக தங்கத்தின் முதலீடு குறையலாம்.
இறுதியில் நமது முதலீடானது அளவில் மிகவும் குறைந்து விடலாம் அல்லது முதலுக்கே மோசம் ஏற்படலாம்.
எனவே, நமது குறிக்கோள்களை முதலில் வரையறுத்துக் கொள்ள வேண்டும். குறுகிய காலக் குறிக்கோள்கள் (< 5 ஆண்டுகள்), நடுத்தரக் கால குறிக்கோள்கள் (5 முதல் 10 ஆண்டுகள்), நீண்ட காலக் குறிக்கோள்கள் ( > 10 ஆண்டுகள்) என குறிக்கோள்களின் காலவரையறைக்கு ஏற்றபடி சரியான முதலீட்டுக் கலவையை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்தக் கலவையை நாம் சரியானபடி பராமரிக்க வேண்டும். ஒரு குறிக்கோளுக்கான முதலீட்டுக் கலவையை அவசியமின்றி மாற்றியமைத்துக் கொண்டு இருந்தால், நம்மால் முதலீட்டுக் குறிக்கோளினை அடைவது கடினம்.