அண்டை வீட்டுக்காரர் ஒரு செலவைச் செய்கிறார் என்பதற்காக நாமும் அந்தச் செலவைச் செய்யக்கூடாது. ஒவ்வொருவருடைய நிதிநிலைமை மாறுபடும். நம்முடைய செலவுகள் நமது நிதி நிலைமையைப் பொருத்தே அமைய வேண்டும். இதனைத் தமிழில் அழகாக 'விரலுக்கேத்த வீக்கம்' என்று கூறுவார்கள். கைகளில் உள்ள ஒவ்வொரு விரல்களும் ஒவ்வொரு வீக்கத்தில் உள்ளன. கட்டைவிரலைப் பார்த்து சுண்டு விரல் தானும் அதே போல் வீங்க வேண்டும் என்று நினைத்தால் சுண்டு விரலால் கட்டைவிரலைப் போல செயல்பட இயலாது. நமது செலவுகள் நமது வரவுக்கு ஏற்றபடி அமைய வேண்டும்.
இதனைக் குறித்த ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்:
அது ஒரு பரந்த புல்வெளி. அங்கு செம்மறி ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. இடையன் அருகில் உள்ள ஒரு மர நிழலில் ஆழ்ந்து தூங்கி கொண்டிருந்தான். அப்பொழுது வானில் ஒரு கழுகு தனது இரைக்காக வட்டமிட்டு கொண்டிருந்தது. அதன் கண்களில் ஒரு சிறிய செம்மறி ஆட்டுக்குட்டி பட, விரைந்து பாய்ந்து அந்த ஆட்டுக்குட்டியைத் தனது கால்களினால் இறுகப்பற்றித் தூக்கிக் கொண்டு பறந்து சென்றது. ஒரு மலை உச்சிக்கு அந்த செம்மறி ஆட்டுக்குட்டியைத் தூக்கிச் சென்று கழுகு உண்ணத் தொடங்கியது.
இந்தக் காட்சியை அருகில் இருந்த ஒரு மரத்தின் மீது அமர்ந்த காகம் கண்டது. தானும் கழுகினைப் போல் செம்மறி ஆட்டுக்குட்டியைச் சுமந்து சென்று உண்ண வேண்டும் என்று முடிவு செய்தது. உடனே விர்ரென்று வேகமாகப் பாய்ந்து ஒரு செம்மறி ஆட்டுக்குட்டியின் மீது அமர்ந்தது. அதன் கால்களால் செம்மறி ஆட்டுக்குட்டியைப் பிடிக்க முடியவில்லை. எனவே கால்களை நன்றாக ரோமங்களுக்கு இடையில் செலுத்திப் பிடித்து செம்மறி ஆட்டுக்குட்டியைத் தூக்க முயற்சித்தது. ஆனால் காகத்தினால் செம்மறி ஆட்டுக்குட்டியைத் தூக்க முடியவில்லை. தனது முயற்சியைக் கைவிட்டு மறுபடியும் தான் பறந்து சென்று விடலாம் என்று நினைத்துக் கால்களைக் காகம் விடுவிக்க முயன்றது. அந்தோ! காகத்தின் கால்கள் செம்மறி ஆட்டுக்குட்டியின் ரோமங்களில் நன்றாக சிக்கிக் கொண்டிருந்தன. காகத்தினால் தனது கால்களை விடுவிக்க முடியவில்லை. காகம் தனது கால்களை விடுவிக்க முயற்சித்த போது செம்மறி ஆட்டின் தோலில் காகத்தின் கால்களின் நகங்கள் கீறி காயங்கள் ஏற்பட்டன. செம்மறி ஆட்டுக்குட்டி வலியில் கத்தியது. அந்த ஆட்டு மந்தையில் ஒரு செம்மறி ஆட்டுக்குட்டி கத்தியவுடன் மற்ற ஆடுகள் பயந்து கத்த ஆரம்பித்தன. செம்மறி ஆட்டு மந்தையின் சத்தத்தில் தூங்கி கொண்டிருந்த இடையன் விழித்துக் கொண்டான். என்ன சத்தம் என்று கவனித்த பொழுது ஒரு காகம் செம்மறி ஆட்டுக்குட்டியின் மீது அமர்ந்து தனது கால்களினால் செம்மறி ஆட்டுக்குட்டிக்குக் காயம் ஏற்படுத்துவதைக் கண்டான். தடியை எடுத்துக் கொண்டு ஓடி வசமாக சிக்கிக் கொண்டிருந்த காகத்தைத் தடியால் அடித்துக் கொன்றான்.
கழுகைப் பார்த்து தனது சக்திக்கு மீறிய செயலைச் செய்ய முயற்சித்த காகமானது தனது உயிரைப் பரிதாபமாக இழந்தது.
இந்தக் கதையில் காகமானது நடுத்தர வர்க்க நபரைப் போன்றது. கழுகானது பணக்கார அண்டை வீட்டுக்காரரைப் போன்றது. கழுகு தனது அதிக பலத்தால் செய்ததைப் போல், பணக்கார அண்டை வீட்டுக்காரர் தனது அதிக பணத்தால் செய்யும் காரியத்தை, இங்கு காகம் கழுகைப் பார்த்து செய்ததைப் போல், நடுத்தர வர்க்க நபரும் செய்ய முயற்சித்தால், பெரும் கடன் சுமையில் மாட்டிக் கொள்ள நேரிடும். உதாரணமாக, அண்டை வீட்டுக்காரர் ஆடம்பரமாக திருமணத்தை நடத்தினால், அதைப்போல் குறைவாக சம்பாதிப்பவரும் திருமணத்தினை நடத்த முயற்சித்தால் பெரும் கடன் சுமையில் மாட்டிக் கொள்வார்.
எனவே, மற்ற நபர்களோடு ஒப்பிடாமல், நாம் நமது செலவுகளை வரவுக்குள் வைத்திருப்பதென்பது நமது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வைத்திருக்கும். வரவு செலவு கணக்கு எழுதுவோம். அதன் மூலம் நமது பணம் எப்படி செலவாகிறது என்பது தெளிவாகும். மாதக் கடைசியில் செலவினங்களை எவ்வாறு தவிர்க்கலாம் அல்லது குறைக்கலாம் என்று திட்டமிட்டுப் பணத்தைச் சேமிக்க முயல வேண்டும். சேமிப்பது மட்டுமின்றி முதலீட்டிற்கும் பணத்தை ஒதுக்க வேண்டும். முதலீட்டின் மூலமே நம்மால் பணவீக்கத்தினை வெல்ல முடியும்.
மற்றவர்களோடு ஒப்பிட்டாமல், நமது வரவிற்கேற்ற செலவினை செய்வோம்.