
1937-ம் ஆண்டு நிறுவப்பட்ட டொயோட்டா நிறுவனம் ஒரு ஜப்பானிய பன்னாட்டு வாகன உற்பத்தி நிறுவனமாகும். உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமான டொயோட்டா கார், பேருந்து, லாரி மற்றும் ரோபோட்கள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் உலகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிறுவனம் கார் தயாரிப்பில் பல புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
தற்போது இந்தியாவில் SUV கார்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனம் ஒருவழியாக ஆறாவது தலைமுறை RAV4 மாடலை தற்போது சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. டொயோட்டா கார் நிறுவனம் அதன் நம்பகத்தன்மை, மைலேஜ் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுக்காக உலகளவில் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனமாக அறியப்படுகிறது.
டொயோட்டா அறிமுகம் செய்துள்ள RAV4 2025 மாடல் பாதுகாப்பு மற்றும் எரிபொருள் திறன் ஆகியவற்றின் சரியான கலவையை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பான தேர்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. டொயோட்டா அறிமுகப்படுத்தியுள்ள RAV4 2025 முதல் பார்வையிலேயே வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வடிவமைப்பை கொண்டுள்ளது.
டொயோட்டா RAV4 2025 பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்சார மோட்டாரின் கலவையில் இயங்கும் ஒரு கலப்பின பவர்டிரெய்னை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் முந்தைய பதிப்புகளுடன் ஒப்பிடும் போது, புதிய RAV4 இன் உட்புறம் டேஷ்போர்டு வடிவமைப்பு முதல் ஸ்டீயரிங் வீல் மற்றும் ஏசி கட்டுப்பாடுகள் வரை கணிசமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மிகப்பெரிய மாற்றம் புதிய 12.9-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் ஆகும். இதில், புதிய ஸ்டைலிங், மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் செயல்திறன் அம்சங்கள் உள்ளன. இதன் மேம்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பம் பாதுகாப்பை மேம்படுத்தவும், சாலை விபத்துகளை தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக டொயோட்டா தெரிவித்துள்ளது.
டொயோட்டா RAV4 பிளக்-இன் ஹைப்ரிட் 22.7 kWh பேட்டரி பேக்கைப் பயன்படுத்துகிறது மற்றும் 320 hp பவர் உற்பத்தி செய்யும் திறன் கொண்டது.
புதிய RAV4 எலெக்ட்ரிக் மோடில் 80 கிலோமீட்டர் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது. இத்துடன் சில வேரியண்ட்களுக்கு DC ஃபாஸ்ட் சார்ஜிங் வழங்குவதாக நிறுவனம் கூறியுள்ளது. RAV4 காரின் உட்புறத்தில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு முனைகளை திரை கட்டுப்பாடுகளுடன் மாற்றியுள்ளது.
மேலும், டொயோட்டா புதிய பதிப்பில் கூடுதல் திரைகளைச் சேர்த்துள்ளது. இப்போது இது 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெற்றுள்ளது. மேலும் டொயோட்டாவின் புதிய அரினெ மென்பொருள் தளத்தால் இயக்கப்படும் 10.5-இன்ச் அல்லது 12.9-இன்ச் டச் ஸ்கிரீன் பெற்றுள்ளது.
இந்த காரில் நகர்ப்புற மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற வகையிலும் பல சிறப்பு தொழில்நுட்பங்கள் செய்யப்பட்டுள்ளது. சொகுசான பயணத்தை வழங்கும் வகையில் காரின் உட்புறம் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்புகள் நீண்ட தூர பயணங்களுக்கு வசதியாக இருப்பதை உறுதி செய்கிறது. மேலும் காற்றோட்டமான இருக்கைகள், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பின்புற இருக்கைகள் சாய்ந்தது கொள்ளும் வகையில் அஜெஸ்மெண்டுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த SUV பயணிகளுக்கு மட்டுமல்ல, சாமான்களை வைக்கவும் போதுமான இடத்தை வழங்குகிறது. டொயோட்டா RAV4 580 லிட்டர் பெரிய பூட் ஸ்பேஸை வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் லக்கேஜ், ஸ்ட்ரோலர்கள் மற்றும் கேம்பிங் கியர் ஆகியவற்றையும் வைக்கும் வகையில் இடவசதி உள்ளது. அதிக இடம் தேவைப்பட்டால், கூடுதல் இடத்தைப் பெற பின்புற இருக்கைகளை மடிக்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பின்புறம் பூட் பகுதியில் ஒரு தட்டையான ஏற்றுதல் தளம் உள்ளது, இது பொருட்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் மிகவும் வசதியாக இருக்கும்.
டொயோட்டா RAV4 ஹைப்ரிட் LE மாடல் இந்தியாவில் ரூ.28.75 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், RAV4 ஹைப்ரிட் XLE மாடல் ரூ.31.20 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், RAV4 ஹைப்ரிட் லிமிடெட் ரூ.34.70 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும், RAV4 AWD TRD மாடல் 37.10 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையிலும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த விலைகள் மாற்றத்திற்கு உட்பட்டவை மற்றும் அதிகாரப்பூர்வ விவரங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட நேரத்தில் வெளியிடப்படும்.