ஜப்பானிலுள்ள டொயோடா மோட்டார் கூட்டு நிறுவனத்தின் நிறுவனர் சகிச்ஹி டொயோடா, அவரது மகன் கிசிரோ டொயொடா மற்றும் அந்நிறுவனத்தின் பொறியாளர் டாயிசி ஒஹ்னோ என்பவர்கள் இணைந்து, டொயோடா உற்பத்தி முறைமை (Toyota Production System) ஒன்றை உருவாக்கினர்.
இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் இம்முறைமை உருவாக்கப்பட்டாலும், 1973 ஆம் ஆண்டில் ஏற்பட்ட எரிபொருள் தட்டுப்பாட்டின் போதுதான் இதனுடைய முக்கியத்துவம் உணரப்பட்டது. இது டொயோடா நிறுவனத்தின் மேலாண்மை தத்துவம் மற்றும் செயல்முறையினை உள்ளடக்கியதாகும். இதனுடைய முந்தய பெயர் தகுந்த நேர (Just-in-Time) முறைமை என்று அழைக்கப்பட்டது. இம்முறைமையின் முக்கிய நோக்கம் விரயங்களை நீக்குதல், முரண்களை தவிர்த்தல், நடைமுறைகளின் மீது திணிக்கப்படும் அதிகப்படியான சுமைகளை நீக்குதல் என்ற மூன்று நோக்கங்களாகும்.
பொருட்கள் உற்பத்தி செய்யப்படும்போது, பலவகையான செய்முறைகள் மற்றும் இணைப்புகளால் அவற்றின் மதிப்பு கூட்டப்படுகிறது. இவ்வாறு மதிப்பு கூட்டப்படும் போது பலவகையான வளங்களும், விரயங்களும் நுகரப்படுகின்றன. இதனால் செலவுகள் அதிகமாகின்றன. நிறுவனங்கள் இச்செலவுகளை ஈடு செய்ய அதிக விலைக்கு வாடிக்கையாளர்களுக்குப் பொருள்களை விற்க முனையும், ஆனால், சந்தையில் உள்ள போட்டியினால் அவ்வாறு செய்யக்கூடிய பொருட்கள் விற்பனையாகாமல் தேங்கிவிடும் அல்லது முதலீட்டை விடக் குறைந்த விலைக்கு விற்கும் போது அந்நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பை ஏற்கக் கூடும்.
இதை தவிர்ப்பதற்காக, விரயங்கள் அடையாளம் காணப்பட்டு நீக்கப்படுகின்றன. இவ்விரயங்கள் ஏழு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை;
அதிகப்படியான உற்பத்தி
அதிகப்படியான நகர்வு (இயந்திரத்தினுடைய அல்லது இயந்திர இயக்குனருடைய)
காத்திருப்பு (இயந்திரத்தினுடைய அல்லது இயந்திர இயக்குனருடைய)
தேவையற்ற ஊர்வு (செயல்களுக்கு இடையில் பொருள்களின் தேவையற்ற ஊர்வு)
அதிகப்படியான செயல் முறை
அதிகப்படியான இருப்பு (உற்பத்திக்கான மூலப்பொருள் அல்லது உற்பத்தியில் முழுமையடைந்த பொருள்)
திருத்தம் (மறு சீர் செய்தல்)
இந்த ஏழு விரயங்களை நீக்கிவிட்டால் போதும், எந்தவொரு நிறுவனமும் பெரிய இழப்பைச் சந்திக்காது என்கின்றனர்.