

'உங்கள் பணப்பையிலிருந்து பணத்தை வெளியே எடுக்கும் எந்தவொரு பொருளும் சொத்தாகாது; அது பொறுப்பு' - என்பது ராபர்ட் கியோசாகி போன்ற நிதி ஆலோசகர்களின் கூற்றாகும்.
இன்றைய வேகமான பொருளாதார உலகில், நிதி சுதந்திரம் என்பது அனைவரின் இலக்காக உள்ளது. இதற்காகப் பலர் முதலீடுகளில் ஈடுபடுகிறார்கள். அவர்களில் பெரும்பாலோனோர் 'சொத்துக்கள்' என்ற பெயரில் சில பொருட்களை வாங்குகிறார்கள். ஆனால், உண்மையில் அவை சொத்துக்களாக இல்லாமல் 'பொறுப்புகளாக' (Liabilities) மாறி, காலப்போக்கில் அவர்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்துகின்றன. அத்தகைய 4 முக்கிய முதலீடுகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.
1. பிளாட் அல்லது அபார்ட்மெண்ட்:
சொந்த வீடு என்பது உணர்வுபூர்வமான விஷயமாக இருக்கலாம். குறிப்பாக, சொந்தமாக வீடு வாங்குவது நல்ல விஷயம்தான். இருப்பினும், முதலீடு என்ற நோக்கில் இவற்றை வாங்குவது பெரும்பாலும் பொறுப்பாகவே மாறுகிறது. உதாரணமாக, நீங்கள் ஒரு கோடி ரூபாய்க்கு ஒரு பிளாட் வாங்குகிறீர்கள் என்றால், அதற்கு குறைந்தது 5% வாடகை வருமானம் வரவேண்டும்.
ஒருவேளை அது கிடைக்கவில்லை என்றால், அந்த முதலீடு லாபகரமானதாக இருக்காது. மேலும், பழைய பிளாட்களின் மதிப்பு காலப்போக்கில் குறைய வாய்ப்புள்ளது. எனவே, பிளாட்களை வாங்குவதற்கு முன் நன்கு யோசித்து முதலீடு செய்யவேண்டும்.
2. விலையுயர்ந்த ஃபர்னிச்சர்கள்:
வீட்டின் அழகிற்காகப் பல லட்சங்களைச் செலவழித்து ஃபர்னிச்சர்களை வாங்குவது ஒரு தேவையற்ற செலவாகும். இவை 'தேய்மானம் அடையும் சொத்துக்கள்' பிரிவில் வரும். பர்னிச்சர்கள் தேவை என்றாலும், அதிக விலைக்கு அவற்றை வாங்குவது உங்கள் நிதி நிலையைப் பாதிக்கும்.
3. விலையுயர்ந்த கார்:
கார் என்பது இன்றைய காலத்தில் ஒரு தேவையாக இருந்தாலும், முதலீட்டு பார்வையில் அது மிகப்பெரிய பொறுப்பாகும். ஒரு புதிய காரை ஷோரூமிலிருந்து வெளியே எடுக்கும்போதே, அதன் மதிப்பு சுமார் 10% முதல் 15% வரை குறைந்துவிடும். தொழில் தேவைக்காக அல்லது குடும்பப் போக்குவரத்துக்காகக் கார் வாங்குவது சரியானது. ஆனால் அந்தஸ்து அல்லது கௌரவத்திற்காக கார் வாங்குவது கூடுதல் சுமையை மட்டுமே ஏற்படுத்தும்.
4. எலக்ட்ரானிக் பொருட்கள்:
பண்டிகைக் கால ஆஃபர்களைப் பார்த்து, புதிய மொபைல் அல்லது ஏர் கூலர் போன்ற தேவையற்ற எலக்ட்ரானிக் பொருட்களை வாங்குவதும் ஒரு தேவையற்ற செலவாகும். ஏனெனில், இவை தேயமானம் அடையும் பொருட்கள், இவற்றை மீண்டும் விற்க முயற்சிக்கும்போது எதிர்பார்த்த விலை கிடைக்காது. வாங்குவதற்கு முன், அது உங்களது தேவையா அல்லது ஆசையா என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டு செயல்படுங்கள்.
இறுதியாக, நிதி சுதந்திரம் என்பது நீங்கள் எவ்வளவு சம்பாதிக்கிறீர்கள் என்பதில் இல்லை; எவ்வளவு சேமிக்கிறீர்கள் மற்றும் அந்தப் பணத்தை எப்படிச் சரியான சொத்துக்களில் முதலீடு செய்கிறீர்கள் என்பதில்தான் உள்ளது.
ஒரு முதலீட்டைச் செய்வதற்கு முன்னால், அது உங்கள் பாக்கெட்டிற்குப் பணத்தைக் கொண்டு வருகிறதா அல்லது உங்கள் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துச் செல்கிறதா என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதேசமயம், எந்தவொரு பொருளை வாங்குவதற்கு முன்பும், அது உங்கள் செல்வத்தை அதிகரிக்கிறதா அல்லது குறைத்து கடனாளியாக்குகிறதா என்பதையும் யோசிக்க வேண்டும்.
எது உங்கள் செல்வத்தை வளர்க்கிறதோ அதுவே உண்மையான சொத்து. ஆடம்பரத்திற்கும், தேவையற்ற நுகர்வுக்கும் செலவழிப்பதைத் தவிர்த்து, வருமானம் தரும் திட்டங்களில் முதலீடு செய்வதே உங்களைச் சிறந்த முதலீட்டாளராக மாற்றும்.
Reference: What Is an Asset? Definition, Types, and Examples, Assets vs liabilities