
இன்றைய நவீன உலகில் சேமிப்பும், முதலீடும் அவசியத் தேவைகளில் ஒன்றாகி விட்டது. பங்குச்சந்தை, எஸ்ஐபி மற்றும் பிக்சட் டெபாசிட் உள்ளிட்ட பல முதலீட்டுத் திட்டங்கள் இன்று சந்தையில் இருக்கின்றன. பல முதலீட்டாளர்கள் பரவலாக முதலீடு செய்து அதிக இலாபம் ஈட்டுகின்றனர். இவர்களுக்கு மத்தியில் புதிதாக முதலீட்டை நோக்கி நகரும் இளம் தலைமுறையினரும் சிறந்த முதலீட்டாளராக உருவெடுக்க முடியும். இதற்கு 4 முக்கியமான குணங்கள் அவசியம் தேவை.
இளம் தலைமுறையினர் மத்தியில் முதலீடு தொடர்பான விழிப்புணர்வு தற்போது அதிகரித்துள்ளது. இருப்பினும் எந்த முதலீட்டுத் திட்டத்தைத் தேர்வு செய்வது என்பதில் குழப்பமாகவே உள்ளனர். இவர்கள் முதலில் முதலீட்டை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு முதலீட்டுத் திட்டத்தையும் ஒப்பிட்டு பார்த்து, எந்தத் திட்டம் சிறந்தது என்ற தெளிவான முடிவுக்கு வரலாம். முதலீட்டைத் தொடங்கிய பிறகும் கூட, பரவலான முதலீட்டில் கவனம் செலுத்துவது நல்லது. மிகச்சிறந்த முதலீட்டாளராக நீங்கள் வலம்வர வேண்டும் என்றால், உங்களுக்குள் இருக்கும் முதலீட்டு குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
1. பொறுமை:
எந்தவொரு முதலீடும் உடனேயே இலாபத்தைக் கொடுத்து விடாது. நாட்கள் அதிகரிக்க அதிகரிக்கும் முதலீடும் இரட்டிப்பாகும். ஆகையால் முதலீடு செய்த பின் பொறுமையாக காத்திருத்தல் வேண்டும். அடிப்படையான முதலீட்டுக் குணங்களில் பொறுமை தான் மிகமிக முக்கியம். ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’ என்நதற்கு ஏற்ப பொறுமையுடன் காத்திருப்பவர் முதலீட்டின் பலனை முழுமையாக அனுபவிக்கலாம்.
2. முதலீட்டில் தனித்து இருங்கள்:
ஏதோ ஓர் முதலீட்டுத் திட்டத்தில் எல்லோரும் முதலீடு செய்கிறார்கள் என்பதற்காக நீங்களும் முதலீடு செய்யக் கூடாது. அந்தத் திட்டத்தின் சாதக, பாதகங்களை ஆராய்ந்த பிறகே முதலீடு செய்யலாமா அல்லது வேண்டாமா என்பதைப் பற்றி முடிவெடுக்க வேண்டும். கூட்டத்தில் ஒருவராய் இருப்பதைக் காட்டிலும், உங்களுக்கு நன்றாகத் தெரிந்த திட்டங்களில் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானது.
3. கற்றுக் கொள்ளுங்கள்:
பொருளாதாரம், பணவீக்கம், சேமிப்பு, முதலீடு மற்றும் கூட்டு வட்டி உள்ளிட்ட பல தகவல்களை கற்றுக் கொள்வது நல்லது. நாம் எவ்வளவு கற்றுக் கொள்கிறோமோ அவ்வளவு நன்மை கிடைக்கும். தினசரி சந்தை நிலவரங்கள், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள், ரெப்போ வட்டி விகித ஏற்ற இறக்கம் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளைத் தெரிந்து கொள்ள கற்றல் அவசியமாகிறது. “நீங்கள் எவ்வளவு அதிகமாக கற்றுக் கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு அதிகமாக வருமானம் ஈட்டலாம்” என பங்குச்சந்தை வெற்றியாளரான வாரன் பஃபெட் கூறியிருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கை முழுக்க நாம் கற்றுக் கொண்டே தான் இருக்க வேண்டும். அதிலும் முதலீட்டுத் துறைக்கு கற்றல் இன்றியமையாத ஒன்றாகும்.
4. ஒழுக்கம்:
முதலீடு செய்த பிறகு, பாதியிலேயே முதலீட்டை நிறுத்துவதும், சந்தை சரியும் போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை முடித்துக் கொள்வதும் சிறந்த முதலீட்டாளருக்கு நல்லதல்ல. முதலீட்டைத் தொடங்கிய பிறகு ஒழுக்கமாய் தொடர்வதும் அவசியம். நிதி சிக்கல்கள் இன்றி வருங்காலத்தை வளமாக வாழ்வதற்கு முதலீடு அவசியம் என்பதால், அதற்கென்று மாதந்தோறும் ஒரு தொகையை ஒதுக்கி சரியாகத் திட்டமிடுவதும் அவசியம்.
மேற்கண்ட நான்கு முதலீட்டுக் குணங்களைத் தெடர்ந்தே கடைபிடித்து வந்தால், நிச்சயம் நீங்களும் சிறந்த முதலீட்டாளராக வரலாம்.