

நிதி திட்டமிடலில் அதாவது பட்ஜெட்டில் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று 50/30/20 விகிதாச்சார பட்ஜெட். ஆங்கிலத்தில் 50/30/20 Proportional Budget. அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
50/30/20 விகிதாச்சார பட்ஜெட் என்றால் என்ன?
50/30/20 விகிதாச்சார பட்ஜெட் முறையானது அமெரிக்க செனட்டரான எலிசபெத் வாரன் மற்றும் அவரது மகள் அமிலியா வாரன் தியாகி ஆகியோரால் அவர்களது ஆல் யுவர் வொர்த் (All your worth) என்ற புத்தகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் 50% 30% 20% என்ற விகிதாச்சாரத்தில் பட்ஜெட் போடும் முறை விவரிக்கப்பட்டது. இங்கு 50% என்பது தேவைகளைச் (Needs) சார்ந்தது. 30% என்பது வேண்டல்களைச் (wants) சார்ந்தது. 20% என்பது சேமிப்புகளைச் (savings) சார்ந்தது. இவ்வாறு மாதா மாதம் வரும் வருமானம் விகிதாச்சாரப்படி பிரிக்கப்பட்டு அதற்குள் செலவானது கட்டுக்குள் வைக்கப்படுகிறது.
50/30/20 விகிதாச்சார பட்ஜெட் போடுவது எப்படி?
1. ஒரு மாதத்திற்கான வரவுகளை, வரவு செலவு கணக்கு நோட்டுப் புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்.
2. ஒரு மாதத்திற்கான செலவுகளை, வரவு செலவு கணக்கு நோட்டுப் புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்.
3. படி இரண்டாவதில் எழுதிய செலவுகளை வகைப்படுத்த வேண்டும். வகைகளை தேவைகள், வேண்டல்கள், சேமிப்புகள் என்று வகைப்படுத்த வேண்டும். இந்த விகிதாச்சாரம் 50%, 30%, 20% என்று இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில், எவ்வாறு இந்த விகிதாச்சாரத்தைக் காப்பது என்று பார்க்க வேண்டும். அதற்கேற்றவாறு தேவைகள், வேண்டல்கள், சேமிப்புகள் போன்றவற்றில் உள்ள செலவுகளைத் திருத்தங்கள் செய்து, இந்த விகிதாச்சாரத்திற்கு ஏற்றவாறு வருவாயினை ஒதுக்க வேண்டும். இதுவே அடுத்த மாதத்திற்கான 50/30/20 விகிதாச்சார பட்ஜெட்.
செலவுகளை எவ்வாறு வகைப்படுத்துவதென்பதற்கு பின்வரும் குறிப்புகள் உதவிகரமாக இருக்கும்.
தேவைகள் என்பவை உணவு, உடை, இருப்பிடம், போக்குவரத்து, தொலைதொடர்பு, வீட்டின் பயன்பாடுகள் போன்றவை. இவையன்றி வாழ்க்கையை நடத்துவது கடினம்.
வேண்டல்கள் என்பவை வெளியே உணவருந்துவது, சுற்றுலா செல்வது, திரைப்படம் செல்வது, பொழுதுபோக்குகள் போன்றவை. இவை தேவைகள் அல்ல. இவை வேண்டல்கள் மட்டுமே. இவையன்றி வாழ்க்கையை நடத்த இயலும்.
சேமிப்புகள் என்பவை வருடாந்திர இறுதியில் சுற்றுலா, குழந்தைகள் மேல்படிப்பு, குழந்தைகளின் திருமணம், ஓய்வுகாலம் போன்ற குறுகிய, நடுத்தர, நீண்ட கால குறிக்கோள்களுக்கான சேமிப்புகள்.
4. மாதம் முழுவதும் விழிப்புடன் இருந்து விகிதாசாரத்திற்குள் செலவுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். உதாரணமாக, ஒரு மாதம் வேண்டல்கள் சார்ந்த செலவுகள் செய்யும் போது, வேண்டல்களின் மொத்த ஒதுக்கப்பட்ட பணம் தீர்ந்து விட்டால், அடுத்த மாதம் வரை வேண்டல்கள் சார்ந்த செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.
வேண்டல்களுக்கு ரூபாய் 3000 எனில், திரைப்படம் பார்ப்பது, வெளியே உணவருந்துவற்கு என்று மொத்தமாக ரூபாய். 3000 செலவழிந்து விட்டால், அடுத்த மாதம் வரை வேண்டல்களுக்கான செலவுகளுக்குக் காத்திருக்க வேண்டும்.
5. மாத இறுதியில், விகிதாச்சாரத்திற்கு ஏற்றவாறு செலவுகளைக் கையாண்டோமா என்று பார்க்க வேண்டும். ஒருவேளை, ஏதேனும் தவறுகள் நேர்ந்திருந்தால், அதற்கு ஏற்றவாறு அடுத்த மாதம் திட்டமிட்டு, விகிதாசாரத்தினைக் காக்க வேண்டும். இதனை ஒவ்வொரு மாத இறுதியிலும் செய்ய வேண்டும்.
50/30/20 விகிதாச்சார பட்ஜெட்டின் நிறைகள் யாவை?
1. எளிமையானது - வரி வரியாக பணத்தை ஒதுக்காமல், மூன்று வகைகளுக்குள் பட்ஜெட் போடுவதால், இது எளிமையான முறை.
2. வளைந்து கொடுக்கக் கூடியது - வகைகள் என்ற வகையில் பட்ஜெட் போடுவதால், தனித்தனியாக செலவுகளைக் கண்காணிக்கத் தேவையில்லை. செலவுகள் வகைக்குள் இருக்கும்பட்சத்தில் விகிதாச்சாரம் காக்கப்படுகிறது.
3. வாழ்வின் சமநிலை காக்கப்படுகிறது - தேவைகள், வேண்டல்கள், சேமிப்புகள் என்று எல்லா வகைக்கும் பணம் ஒதுக்கப்படுவதால், வாழ்வின் சமநிலை காக்கப்படுகிறது.
50/30/20 விகிதாச்சார பட்ஜெட்டின் குறைகள் யாவை?
50% 30% 20% என்ற விகிதாச்சாரம் எல்லோருக்கும் பொருந்தாது - விலைவாசி அதிகமாக இருக்கும் இடங்களில், வருமானத்தில் 50% பணத்தை தேவைகளுக்கு ஒதுக்குவதற்கு போதுமான அளவு வருமானம் இருக்க வேண்டும். கடன் உள்ளவர்களுக்கு 20% சேமிப்புகள் என்ற விகிதாச்சாரம் போதாது. அவர்கள் சேமிப்புகள் சார்ந்த விகிதாச்சாரத்தினை அதிகரிக்க வேண்டும்.
50/30/20 விகிதாச்சார பட்ஜெட்டினை எவ்வாறு மேம்படுத்துவது?
50% 30% 20% என்ற விகிதாசாரத்தினை ஒருவரது நிதிக் குறிக்கோள்களுக்கு மற்றும் நிதி நிலைமைக்கு ஏற்ப, விகிதாசாரங்களை மாற்றிக் கொள்ளலாம். கடனில் இருப்பவர்களுக்கு 20% சேமிப்பு போதாதெனில், அதனை 40% என அதிகரித்து, வேண்டல்களைக் குறைத்துக் கொள்ளலாம். அப்போது 50%, 10%, 40% என்ற விகிதாச்சாரம் இருக்கும்.
50/30/20 விகிதாச்சார பட்ஜெட்டைப் பயன்படுத்தி நிதி சுதந்திரத்தை அடைய வாழ்த்துகள்.