சிபில் ஸ்கோர் குறைய 6 காரணங்கள்! - வீட்டுக் கடன் நிராகரிக்கப்படுகிறதா?

வங்கி கடன் மறுக்கப்பட காரணங்கள் மற்றும் உங்களின் சிபில் ஸ்கோரை 750-க்கு மேல் உயர்த்துவது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
சிபில் ஸ்கோர் (CIBIL Score) - Loan Rejection Reasons
சிபில் ஸ்கோர் (CIBIL Score) - Loan Rejection Reasons
Updated on

ன்றைய நுகர்வுச் சூழலில், சொந்த வீடு வாங்குவது முதல் அவசரத் தேவைக்கான தனிநபர் கடன் வரை, எல்லாவற்றிற்கும் வங்கிகளையே அதிகம் நம்பியிருக்கிறோம். வங்கி மேலாளரை நேரில் சந்தித்து, அவரிடம் பேசி, நம் வருமானச் சான்றுகளைக் காட்டிக் கடன் பெற்ற காலம் போய்விட்டது.

இன்று, நீங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கும் முன், வங்கித்துறை உங்களின் நிதி ஒழுக்கத்தை அறிய ஒரு ‘டிஜிட்டல் ஜன்னல்’ வழியாகப் பார்க்கிறது. அந்த ஜன்னலின் பெயர்தான் ‘சிபில் ஸ்கோர்’ (CIBIL Score).

நிதித் துறையின் மதிப்பெண் சான்றிதழ்

CIBIL ஸ்கோர் மற்றும் அறிக்கை ஆகியவை ஒரு நிதிசார் 'மதிப்பெண் அட்டை' போன்றவை. இது 300 முதல் 900 வரை உள்ள எண்ணாகும். இது ஒரு நபர் கடன் விஷயத்தில் எவ்வளவு பொறுப்புடன் செயல்பட்டுள்ளார் என்பதைக் கடன் வழங்குநர்களுக்குத் தெரிவிக்கிறது. இதை 'நம்பகத்தன்மை அளவீடு' எனலாம். ஒருவர் கடன் வாங்கி அதைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தும்போது அவர் நம்பிக்கையை உருவாக்குகிறார்; அதற்குரிய ஸ்கோர்கள் பெறுகிறார். ஸ்கோர் அதிகமாக இருந்தால் கடன் வழங்குநர்களின் பார்வையில் அவர் அதிக கடன் தகுதிகொண்டவர்.

TransUnion CIBIL என்ற அமைப்பு, இந்திய வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து தரவுகளைப் பெற்று, ஒவ்வொரு நபருக்கும் 300 முதல் 900 வரையிலான 3 இலக்க எண்ணாக இந்த ஸ்கோரைக் கணக்கிடுகிறது.

இது டிஜிட்டல் அறிக்கையாக உருவாக்கப்படுவது. மேலும், வாடிக்கையாளர்களின் மாதாந்திர நிதிச் செயல் பாடுகளுக்கு ஏற்ப ஒவ்வொரு 30 நாட்களுக்கும் மாறிக்கொண்டே இருக்கிற இயங்குதன்மை (Dynamic) கொண்டது.

ஸ்கோர் அளவுகளும் வங்கி முடிவுகளும்

அனைத்து விதமான கடன்களுக்கும் ஒரே மாதிரியான ஸ்கோர் தேவைப்படுவதில்லை. 750-க்கு மேல் இருந்தால் அது மிகவும் சிறப்பான நிலையாகக் கருதப்பட்டு, குறைந்த வட்டியில் எளிதாகக் கடன் ஒப்புதல் கிடைக்கும். 750-க்கு கீழ் குறையும்போது சிக்கல்கள் ஏற்படுகின்றன.

சிபில் ஸ்கோர் (CIBIL Score) - Loan Rejection Reasons
சிபில் ஸ்கோர் (CIBIL Score) - Loan Rejection Reasons

வீட்டுக்கடன் (Home Loan) மற்றும் தனிநபர் கடன் (Personal Loan) போன்ற பெரிய அல்லது ஈட்டுறுதி இல்லாத (Unsecured) கடன்களுக்கு வங்கிகள் கண்டிப்பாக 750+ ஸ்கோரை எதிர்பார்க்கின்றன. அதேநேரம், வாகனக் கடன் அல்லது சொத்துப் பிணையக் கடன் போன்ற பாதுகாக்கப்பட்ட கடன்களுக்கு 650 முதல் 700 வரை இருந்தால்கூட சில வங்கிகள் கடனைப் பரிசீலிக்கும். ஆனால், அதற்கு அவர்கள் விதிக்கும் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.

750-க்கு கீழ் இருந்தால் என்ன நடக்கும்?

உங்கள் ஸ்கோர் 750-க்கு கீழ் சென்றால் கடன் கிடைக்கவே கிடைக்காது என்று அர்த்தமில்லை. ஆனால், வங்கியின் அணுகுமுறை முற்றிலும் மாறிவிடும்:

அதிக வட்டி விகிதம்: குறைந்த வட்டிக்குக் கடன் கிடைக்காது. அபாயக் காரணியைக் காரணம் காட்டி அதிக வட்டி விதிப்பார்கள்.

கூடுதல் நிபந்தனைகள்: கூடுதல் பிணையம் (Collateral) அல்லது அதிக வருமானம் உள்ள ஒருவரை இணை விண்ணப்பதாரராக (Co-applicant) சேர்க்குமாறு வற்புறுத்துவார்கள்.

நிராகரிப்பு: வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (NBFCs) சில நிபந்தனைகளுடன் கடன் தந்தாலும், முன்னணிப் பொதுத்துறை வங்கிகள் விண்ணப்பத்தை உடனடியாக நிராகரிக்கக் கூடும்.

இதையும் படியுங்கள்:
சிபில் மதிப்பெண் என்றால் என்ன? அதனை எவ்வாறு அதிகரிப்பது?
சிபில் ஸ்கோர் (CIBIL Score) - Loan Rejection Reasons

கடன் மறுக்கப்படுவதற்கான 6 முதன்மைக் காரணங்கள்;

ஒருவரின் சிபில் ஸ்கோர் குறைவதற்கும், அதைத் தொடர்ந்து கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதற்கும் பின்னணியில் உள்ள முக்கியமான 6 காரணங்கள் பின்வருமாறு:

1. தாமதமான அல்லது தவறவிட்ட தவணைகள்: நீங்கள் எடுத்த கடனுக்கான தவணையை (EMI) அல்லது கிரெடிட் கார்டு கட்டணத்தைக் குறித்த தேதியில் செலுத்தத் தவறுவதுதான் ஸ்கோரை வேகமாக வீழ்த்தும் முதல் காரணி. ஒருமுறை தவணையைத் தவறவிட்டாலும், அது உங்கள் அறிக்கையில் பதிவு செய்யப்பட்டு, உங்கள் நிதிப் பொறுப்பற்ற தன்மையைக் காட்டிவிடும்.

2. அதிகக் கடன் பயன்பாட்டு விகிதம்: உங்களிடம் ரூ.1 லட்சம் வரம்பு கொண்ட கிரெடிட் கார்டு இருக்கிறது என்பதற்காக, அதில் ரூ.90,000 வரை தொடர்ந்து செலவு செய்து வந்தால், நீங்கள் "நிதி நெருக்கடியில் இருக்கிறீர்கள்" என்று வங்கிகள் கணிக்கும். உங்களின் மொத்தக் கடன் வரம்பில் 30%-க்கும் குறைவாகப் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.

3. ஒரே நேரத்தில் பல கடன்களுக்கு விண்ணப்பிப்பது: குறுகிய காலத்தில் அடுத்தடுத்துப் பல வங்கிகளில் கடன் கேட்டு விண்ணப்பித்தால், ஒவ்வொரு வங்கியும் உங்கள் சிபில் அறிக்கையைச் சரிபார்க்கும். இதை நிதித் துறையில் 'Hard Inquiry' என்பார்கள். இது உங்களைக் "கடன் பசியில் உள்ள நபர்" (Credit Hungry) எனக் காட்டி, ஸ்கோரைக் கணிசமாகக் குறைத்துவிடும்.

4. பாதுகாப்பற்ற கடன்களின் ஆதிக்கம்: வீட்டுக்கடன் அல்லது வாகனக் கடன் போன்ற சொத்து சார்ந்த பாதுகாக்கப்பட்ட கடன்களும், கிரெடிட் கார்டு மற்றும் தனிநபர் கடன் போன்ற பாதுகாப்பற்ற கடன்களும் சரியான விகிதத்தில் இருக்க வேண்டும். பாதுகாப்பற்ற கடன்கள் அதிகமாக இருந்தால் வங்கியின் நம்பிக்கை குறையும்.

5. பிறர் கடனுக்கு ஜாமீன் கையெழுத்திடுதல்: நண்பர் களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ கடன் பெற நீங்கள் 'ஜாமீன்' கையெழுத்திட்டிருந்தால், அவர்கள் கடனைச் சரியாகச் செலுத்தாதபோது அந்தப் பழியும், அதற்கான ஸ்கோர் குறைப்பும் உங்களையே சேரும்.

6. சிபில் அறிக்கையில் நிகழும் பிழைகள்: நீங்கள் கடனை முழுமையாக அடைத்த பிறகும், வங்கி அதைச் சரியாக சிபில் அமைப்பிற்குப் புதுப்பிக்காமல் விட்டிருக்கலாம். அல்லது பெயர் குழப்பத்தினால் வேறொருவரின் கடன் தவறு உங்களின் அறிக்கையில் ஏறியிருக்கலாம். இத்தகைய பிழைகளைக் கவனிக்காமல்விடுவதும் கடன் மறுப்பிற்கு வழிவகுக்கும்.

நிதி ஆரோக்கியத்தைப் பேண வழிகள்: நமது உடல், மன ஆரோக்கியங்களைப் பேணுவது போலவே நிதி வாழ்க்கையிலும் அடிப்படை ஆரோக்கியத்தைப் பராமரிப்பது அவசியம். குறிப்பாக, நிதிப் பரிவர்த்தனைகள் பதிவு செய்யப்படுகிற வங்கிக் கடன், கிரெடிட் கார்டு போன்றவற்றில் உரிய முறைப்படி நிதி மேலாண்மையைக் கடைபிடிப்பது சிபில் ஸ்கோரை மேலானதாக வைத்திருப்பதற்குக் கட்டாயத் தேவை என்றே சொல்லலாம்.

சிபில் ஸ்கோர் (CIBIL Score) - Loan Rejection Reasons
சிபில் ஸ்கோர் (CIBIL Score) - Loan Rejection Reasons

ஆண்டிற்கு ஒருமுறை இலவசமாகக் கிடைக்கிற சிபில் அறிக்கையைப் பதிவிறக்கம் செய்து, அதில் ஏதேனும் தவறுகள் இருக்கிறதா என்று பரிசீலிப்பது நல்ல நிதிப் பழக்கமாகும்.

உங்கள் ஸ்கோர் 750-க்கு கீழ் இருந்தால், புதிய கடன்களுக்கு விண்ணப்பிப்பதைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, நிலுவையில் உள்ள கட்டணங்களைச் சீராகச் செலுத்தி, சில மாதங்களில் ஸ்கோரை உயர்த்திய பிறகே மீண்டும் வங்கிகளை அணுகுவது கடன் ஒப்புதலை உறுதி செய்யும்.

logo
Kalki Online
kalkionline.com