

சிபில் மதிப்பெண் என்பது 300-900 வரையிலான கடன் நம்பகத்தன்மை மதிப்பீடு; 750-க்கு மேல் இருந்தால் வங்கிகளில் விரைவான கடன் ஒப்புதல், குறைந்த வட்டி, குறைந்த ஆவணப் பணி, பல சலுகைகள் கிடைக்கும். கடன் செயலகங்கள் சேகரிக்கும் கடன், வருமான வரி, பயன்பாட்டு ரசீது தகவல்களின் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்படுகிறது; அவசர காலங்களில் நிதி உதவி பெற இது முக்கியம்.
கடன் செயலகங்கள்(Credit Bureau) என்பவை யாவை?
கடன் செயலகங்கள் தனிநபர் மற்றும் நிறுவனங்கள் வாங்கும் கடன் சார்ந்த பரிவர்த்தனைகளைச் சேகரித்து அவற்றை அலசி தகவல்களைத் தயாரிக்கின்றன. கடன் வாங்குவது, கடன் அட்டைகள் பயன்பாடு, மிகை எடுப்பு(over draft), கடன்களைத் திருப்பி செலுத்துவது என பல்வேறு விஷயங்களைக் கவனிக்கின்றன.
இவை மட்டுமன்றி வருமான வரி செலுத்துதல், பயன்பாட்டு ரசீதுகளைச்(Utility bills) செலுத்துதல் போன்றவைகளும் கூட இத்தகைய அலசல்களில் கணக்கில் கொள்ளப்படுகின்றன. இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்கள் இத்தகைய தகவல்களை இந்த கடன் செயலகங்களுக்கு தொடர்ந்து அளித்து வருகின்றன. இந்தியாவில் இத்தகைய கடன் செயலகங்கள் நான்கு உள்ளன.
1) டிரான்ஸ் யூனியன் கடன் தகவல் செயலகம் (இந்தியா) நிறுவனம் (TransUnion Credit Information Bureau (India) Limited)
2) எக்ஸ்பீரியன்(Experian)
3) சிஆர்ஐஎஃப் ஹை மார்க் (CRIF High Mark)
4) ஈக்விஃபேக்ஸ் (Equifax)
இந்த நான்கு நிறுவனங்களில் ட்ரான்ஸ் யூனியன் கடன் தகவல் செயலகம்(இந்தியா) நிறுவனம் மிகவும் பிரபலமானது. அது வழங்கும் சிபில் மதிப்பெண் மிகவும் பிரபலமானது. இந்த சிபில் மதிப்பெண் வங்கிகள், நிதி நிறுவனங்கள் கடன்களைக் கொடுக்கும் முன் சரிபார்க்கப்படுகிறது.
சிபில் மதிப்பெண் அதிகமாக இருந்தால் என்ன இலாபம்?
சிபில் மதிப்பெண் 300 முதல் 900 வரை இருக்கலாம். நல்ல சிபில் மதிப்பெண் என்பது 750 முதல் 900 வரை இருக்கும். இத்தகைய நல்ல மதிப்பெண் உடையவர்களுக்கு வங்கிகள் பின்வரும் ஆதாயங்களை அளிக்கும். ஏனென்றால் இத்தகைய நபர்கள் கடன்கள் திருப்பி செலுத்துவதில் நம்பகமானவர்கள்.
கடன்களை உடனடியாக ஒப்புதல் அளிக்கும்.
அதிகமாக கடன்களை தாராளமாக வழங்கும்.
குறைந்த வட்டியில் கடன்களை வழங்கும்.
குறைந்த நேரம் மட்டுமே எடுத்துக் கொண்டு கடன்களை வழங்கி விடும்.
கடன்கள் சார்ந்த படிவங்கள் சார்ந்த வேலைகள் குறைவாக இருக்கும்.
கடன்களை திருப்பி செலுத்துவதற்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்படும்.
நமது சிபில் மதிப்பெண் மூலம் நாம் என்ன அறியலாம் ?
சிபில் தகவல் அறிக்கையானது கடன் தகவல் அறிக்கை (Credit Information Report) என்று கூறப்படுகிறது. அதில் ஒருவருடைய கடந்த கால கடன்கள் மற்றும் திருப்பி செலுத்துதல் சம்பந்தமான விபரங்கள் இருக்கும். இதனைக் கொண்டும் மேலும் பல்வேறு காரணிகளைக் கொண்டும் சிபில் மதிப்பெண் வழங்கப்படுகிறது. இந்த தகவல் அறிக்கை நமது பரீட்சைக்கான விடைத்தாளினைப் போன்றது. சிபில் மதிப்பெண் என்பது பரிட்சையில் நாம் பெறும் மதிப்பெண்ணைப் போன்றது.
பரீட்சையில் 35 தேர்ச்சி மதிப்பெண் போன்று இந்த சிபில் மதிப்பெண்ணிற்கும் நல்ல மதிப்பெண் போன்ற மதிப்பீடுகள் உண்டு அவற்றைப் பற்றி பார்ப்போம்
NA/NH -நாட் அப்ளிகபிள் அல்லது நோ ஹிஸ்டரி என்று பொருள். அதாவது பொருந்தாது அல்லது கடந்த கால வரலாறு இல்லை என்று பொருள். ஒரு நபர் இதுவரை கடன் வாங்கவில்லை என்று பொருள்
350-549 - மோசமான மதிப்பெண். இந்த நபர் கடன்களை திருப்பி செலுத்துவதில் சரியாக நேரத்தை கடைப் பிடிப்பதில்லை. இவருக்கு கடன் கிடைப்பது கடினமாக இருக்கும்.
550-649 - சுமாரான மதிப்பெண். இந்த நபர் கடன்களை மிகவும் கடினப்பட்டு சற்று தாமதமாக செலுத்தி வந்துள்ளார். இவருக்கு சில நிதி நிறுவனங்கள் கடன் அளிக்கலாம். ஆனால் இவருக்கு கடன் வட்டி விகிதம் அதிகமாக இருக்கும்.
650-749 - நல்ல மதிப்பெண். இவர் கடன்களை ஓரளவுக்கு சரியாக செலுத்தி வந்துள்ளார். இவருக்கு வங்கிகள் கடன் கொடுக்க தயாராக இருக்கும். ஆனாலும் கூட இவருக்கு பல்வேறு சலுகைகள் கிடைக்காது.
750-900 - மிக நல்ல மதிப்பெண். இவர் கடன்களைத் திருப்பி செலுத்துவதில் சிறப்பானவர். இவருக்கு வங்கிகள் கடன் கொடுப்பதற்கும், பல்வேறு சலுகைகள் அளிப்பதற்கும் தயாராக இருக்கும்.
சிபில் மதிப்பெண்ணை சரி பார்ப்பது எப்படி ?
1. சிபில் இணையதளத்திற்கு (https://www.cibil.com/) செல்ல வேண்டும்
2. இலவச சிபில் மதிப்பெண் மற்றும் தகவல் அறிக்கையை பெறுவதற்கு சுட்டியை சொடுக்க வேண்டும்
3. நமது பெயர், மின்னஞ்சல் முகவரி, கடவுச்சொல், அடையாள அட்டை விபரங்கள் போன்றவற்றைக் கொடுத்து நமக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (One time password) உள்ளீடு செய்வதன் மூலம், நாம் நமது சிபில் மதிப்பெண்ணை அறிய முடியும்.
சிபில் மதிப்பெண்ணை அதிகரிப்பது எப்படி ?
சிபில் மதிப்பெண் கணக்கிடப்படும் பொழுது இந்த நான்கு காரணிகள் கணக்கில் உள்ளன. இந்தக் காரணிகளை நாம் அதிகரிப்பதன் மூலம் நமது சிபில் மதிப்பெண்ணை அதிகரிக்க முடியும்.
கடன்கள் செலுத்திய வரலாறு (Payment History) - 30%
கடனட்டை தவணை, கடன் தவணைகளை சரியான நேரத்தில் செலுத்தி விட வேண்டும். தாமதமாக செலுத்தும் பட்சத்தில் நமது மதிப்பெண் அடி வாங்கி விடும். 30 நாட்கள் கடன் தவணையை தாமதமாக செலுத்தினால் கூட, 100 மதிப்பெண் பட்டென்று இறங்கி விடும். கடன் பாக்கி வைத்திருக்காமல் இருப்பது, மேலும் கடன்களை தாமதமாக செலுத்தாமல் இருப்பது முக்கியம்.
கடன் பயன்பாட்டு விகிதம்(Credit Utilization Ratio)- 25%
நமக்கு கடன் வழங்கப்பட்ட தொகையில் 30% மிகாமல் மட்டுமே கடன் தொகையைப் பயன்படுத்த வேண்டும். அதற்கு அதிகமாக கடன் தொகையைப் பயன்படுத்தும் பொழுது நாம் அதிகமாக கடன் வாங்குகிறோம். நமக்கு அதிகமாக பணம் தேவைப்படுகிறது என்ற எண்ணம் உருவாக்கி சிபில் மதிப்பெண் குறைந்து விடும். மேலும், கடன் தவணைகளை முழுவதுமாக செலுத்தி விட வேண்டும்.
கடன் விதங்கள் மற்றும் காலங்கள் (Credit Type and Duration)- 25%
நீண்ட கால கடன் சம்பந்தமான வரலாற்றை நாம் கொண்டிருக்கும் பொழுது, அது நமக்கு நல்ல மதிப்பெண்ணைக் கொடுக்கும். அடமானம் சார்ந்த கடன்கள் (Secured loans), அடமானம் அற்ற கடன்கள் (Unsecured loans) என்று பல்வேறு விதமான கடன்களை நாம் வாங்கி அவற்றை நாம் சரியாக செலுத்தும் பட்சத்தில் நாம் கடனை சரியாக செலுத்துபவர் என்ற எண்ணம் உருவாகி, அது நமது சிபில் மதிப்பெண்ணை அதிகரிக்கும். வரலாறு முக்கியம் அமைச்சரே என்பது நமக்கு இதில் தெரிய வருகிறது.
மற்ற காரணிகள்(Other Factors) - 20%
ஒருவரைப் பற்றிய சிபில் தகவல் அறிக்கையை வங்கிகள் கேட்பது, அவரது மதிப்பெண்ணைப் பார்ப்பது போன்ற கோரிக்கைகள் வரும்பொழுது சிபில் மதிப்பெண் குறையும். ஏனென்றால் அவர் அடிக்கடி கடன் வாங்குகிறார், அவருக்கு கடன் தேவை உள்ளது, அவர் கடனை அடைப்பது கடினம் என்ற எண்ணம் உருவாவதால் அதன் காரணமாக சிபில் மதிப்பெண் குறைகிறது. கடனை அரிதாக வாங்குவதன் மூலம், இந்த மதிப்பெண்ணை நாம் அதிகரித்துக்கொள்ள முடியும்.
இவ்வாறு கடன்களை தேவைக்கேற்றபடி மட்டும் வாங்க வேண்டும். அவற்றையும் அடமானக் கடனாக வாங்க வேண்டும். அடமான கடன்களையும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அடைத்து விட வேண்டும். கடனட்டைப் பயன்படுத்தினால் குறைவாக பயன்படுத்தி, அதனை முழுவதுமாக செலுத்தி விடவேண்டும்.
இத்தகைய நல்ல நிதி சம்பந்தமான பழக்கங்களைக் கடைபிடிப்பதன் மூலம் நமது சிபில் மதிப்பெண் அதிகமாக இருக்கும். கடன்களே இல்லாத பட்சத்தில் கூட நமது கடந்த கால வருமான வரி செலுத்தல், பயன்பாட்டு சம்பந்தமான ரசீதுகளைச் செலுத்துதல் போன்றவை சரியாக இருந்தால் அதனையும் கூட நாம் வங்கியிடம் கொடுத்து கடன் வாங்க முடியும்.
சிபில் மதிப்பெண்ணை மிக நல்ல நிலையில் வைத்துக் கொள்வது அவசியம். அது அவசர காலத்தில் நமக்கு கடன் தேவைப்படும்போது சீக்கிரமாக கடனைப் பெற உதவும்.
இந்த வழிகாட்டியைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் நிதி நிலையை மேம்படுத்தி, சிபில் மதிப்பெண்ணை 750க்கும் மேல் உயர்த்தி, எதிர்காலத்தில் எந்தவொரு வங்கியிலும் குறைந்த வட்டி விகிதத்தில் சிரமமின்றி விரைவாகக் கடன் ஒப்புதல் பெற முடியும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே; இவை தொழில்முறை நிதி அல்லது முதலீட்டு ஆலோசனைக்கு மாற்றாகாது. அனைத்து முதலீடுகளும் அபாயத்திற்கு உட்பட்டவை. எந்தவொரு நிதி முடிவையும் எடுக்கும் முன், உரிமம் பெற்ற நிபுணர்களை அணுகி ஆலோசிக்கவும்.
Reference: