
எதிர்காலத் தேவைக்கு இன்றைய முதலீடு இன்றியமையாதது. இதனை மனதில் வைத்து பலரும் முதலீட்டுத் திட்டங்களில் தங்கள் பணத்தை அவ்வப்போது முதலீடு செய்து வருகின்றனர். இருப்பினும் நாம் சேமிக்கும் பணத்தை ஏதோ ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதை விடவும், எந்தத் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும்? எப்படி முதலீடு செய்ய வேண்டும் என சிந்தித்தால், அது நிச்சயமாக நல்ல பலனைத் தரும். அவ்வகையில் தற்போது 8 - 4 - 3 முதலீட்டு உத்தியை உங்களுக்கு எடுத்துரைக்கிறது இந்தப் பதிவு.
இன்றைய காலகட்டத்தில் நம்மில் பலரும் முதலீடு செய்வதை அவசியமாக்கி உள்ளோம். வெறுமனே முதலீடு செய்வதைக் காட்டிலும், எப்படி முதலீடு செய்தால் கூடுதல் இலாபம் கிடைக்கும் என்பதை நீங்கள் ஆராய வேண்டியது அவசியமாகும். ஏனெனில் பல முதலீட்டு வாய்ப்புகள் சந்தையில் கிடைக்கின்றன. இதில் எதைத் தேர்வு செய்வது என்பதிலேயே பாதி பேருக்கு குழப்பம் ஏற்படலாம். இந்நிலையில் நடுத்தர மக்கள் சரியான முதலீட்டு உத்தியை கையாள்வதில் ஆர்வம் காட்டுவார்களா என்பது சந்தேகம் தான். இதற்காகவே உங்களுக்கு உதவுகிறது 8 - 4 - 3 முதலீட்டு உத்தி.
அது என்ன 8 - 4 - 3 முதலீட்டு உத்தி? அப்படியென்றால் என்னவாக இருக்கும் போன்ற கேள்விகள் பொதுவாக பலரது மனதிலும் எழலாம். இது உங்கள் சம்பளத்தைப் பிரித்து முதலீடு செய்யும் யுக்தி அல்ல. மாறாக உங்கள் முதலீட்டை எத்தனை ஆண்டுகள் நீட்டிக்கப் போகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. நீண்ட கால முதலீடுகள் தான் கூடுதல் பலனைத் தரும். அவ்வகையில் தற்போது மிகவும் பிரபலமாக இருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்பவராக நீங்கள் இருந்தால், இந்த உத்தி உங்களுக்கு கைக்கொடுக்கும்.
பல்கிப் பெருகும் முதலீட்டைச் சுட்டிக்காட்டுவதற்கு 8 - 4 - 3 முதலீட்டு உத்தி உதவுகிறது. இதனை “பவர் ஆஃப் காம்புண்டிங்” என்று அழைப்பார்கள். நம்முடைய முதலீடு பெருகுவது கூட்டு வட்டியின் அடிப்படையில் தான். இதனைத் தான் 8 - 4 - 3 உத்தி நமக்கு எடுத்துரைக்கிறது.
உதாரணத்திற்கு ஒருவர் ஏதேனும் ஒரு மியூச்சுவல் ஃபண்டு திட்டத்தில் மாதந்தோறும் ரூ.20,000-ஐ எஸ்ஐபி-யில் முதலீடு செய்து வருகிறார் என வைத்துக் கொள்வோம். இந்த முதலீடு ஒரு வருடத்திற்கு கிட்டத்தட்ட 12% வட்டியை அளிக்கும். இந்த முதலீடு முதல் 8 ஆண்டுகளில் ரூ.32 இலட்சமாக உயர்ந்திருக்கும்.
இந்தப் பணத்தை எடுக்காமல், அப்படியே எஸ்ஐபி முதலீட்டை அடுத்த 4 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால், உங்கள் தொகை இருமடங்காக உயர்ந்து ரூ.64 இலட்சமாக இருக்கும். இப்போதும் பணத்தை எடுக்காமல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு முதலீட்டைத் தொடர்ந்தால், உங்கள் முதலீடு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல் பெருகி விடும். இதனைத் தான் 8 - 4 - 3 விதி என சொல்வார்கள்.
மியூச்சுவல் ஃபண்ட் மட்டுமின்றி, சாதாரண முதலீட்டுத் திட்டங்களில் முதலீடு செய்பவர்களும், உங்கள் முதலீட்டை நீட்டிக்கும் பட்சத்தில் கூடுதல் பலனைப் பெற முடியும். உங்களின் முதல் முதலீடு முதிர்ச்சி அடைந்த பிறகு, அந்தத் தொகையை அப்படியே பிக்சட் டெபாசிட்டில் பல ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.