ரூ.5 இலட்ச முதலீட்டை 3 மடங்காக மாற்றும் அஞ்சல் அலுவலகத் திட்டம்!

Time Deposit
Time Deposit
Published on

முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் வரும்போது, நமது பணம் இரண்டு மடங்காக அல்லது மூன்று மடங்காக திரும்ப கிடைக்குமா என்ற கேள்வியும் கூடவே வந்துவிடுகிறது. அனைவருக்கும் தோன்றும் எதார்த்தமான கேள்வி தான் இது. அவ்வகையில் அஞ்சல் அலுவலகத் திட்டத்தின் படி, நமது முதலீட்டை எப்படி 3 மடங்காக மாற்றலாம் என்ற கேள்விக்கு விடையளிக்கிறது இந்தப் பதிவு.

நமது முதலீட்டின் பலனைத் தீர்மானிப்பதில் நாம் தேர்ந்தெடுக்கும் முதலீட்டுத் திட்டமும், முதலீட்டு காலமும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. திட்டத்தின் அடிப்படையில் முதலீட்டு காலம் குறைவாக இருக்கும் போது முதிர்வுத் தொகை குறைவான இலாபத்துடன் திரும்பக் கிடைக்கும். ஆனால், முதலீட்டு காலம் அதிகமாக இருக்கும் போது முதிர்வுத் தொகை அதிக இலாபத்துடன் திரும்பக் கிடைக்கும்.

பொதுவாக வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலகத்தில் பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்குத் தான் அதிக வட்டி கிடைக்கும். ஆகையால், அதிக இலாபம் கிடைக்க வேண்டும் என நினைப்பவர்கள் பிக்சட் டெபாசிட் திட்டங்களைத் தேர்வு செய்வது சிறப்பாக இருக்கும். அஞ்சல் அலுவலகத்தில் பிக்சட் டெபாசிட் திட்டமானது டைம் டெபாசிட் என்ற பெயரில் பொதுமக்களுக்கு சேவையை வழங்கி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் நாம் ஒரே ஒருமுறை மட்டும் முதலீடு செய்தால் போதுமானது. முதலீட்டு காலத்திற்கு ஏற்ப இத்திட்டத்தில் வட்டி விகிதம் மாறுபடும்.

அஞ்சல் அலுவலக டைம் டெபாசிட் திட்டத்தில் ஒரு ஆண்டு கால முதலீட்டிற்கு 6.9% வட்டியும், இரு ஆண்டுகளுக்கு 7.0% வட்டியும், மூன்று ஆண்டுகளுக்கு 7.1% வட்டியும், ஐந்து ஆண்டுகளுக்கு 7.5% வட்டியும் கிடைக்கிறது. நாம் இதில் அதிக வட்டி கிடைக்கும் 5 ஆண்டு கால டைம் டெபாசிட்டைத் தேர்வு செய்து ரூ.5 இலட்சத்தை முதலீடு செய்யலாம். முதலீட்டுக் காலம் முடிந்த பிறகு முதலீட்டுத் தொகையையும் சேர்த்து ரூ.7,24,974 கிடைக்கும். இந்தப் பணத்தை எடுக்காமல் அப்படியே மீண்டும் 5 ஆண்டுகளுக்கு டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து விடுங்கள்.

இதையும் படியுங்கள்:
ஆபத்தில்லாத 4 அஞ்சல் முதலீட்டுத் திட்டங்கள்!
Time Deposit

இரண்டாவது முறை முதலீட்டு காலம் முடிந்ததும் மொத்தமாக ரூ.10,51,175 கிடைக்கும். இந்த முறையும் பணத்தை எடுக்காமல் மூன்றாவது முறையாக 5 ஆண்டுகளுக்கு டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்து விடுங்கள். இப்போது முதலீட்டு காலம் முடிந்ததும் உங்களுக்கு வட்டியுடன் சேர்த்து சுமார் ரூ.15 இலட்சம் கிடைக்கும். மூன்று முறை தொடர்ந்து டைம் டெபாசிட் செய்வதன் மூலம் 15 ஆண்டுகளில் உங்களின் முதலீட்டுத் தொகையான ரூ.5 இலட்சம் மூன்று மடங்கு உயர்ந்து ரூ.15 இலட்சமாக உங்களுக்கு கிடைக்கும்.

அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யும் உங்கள் பணத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. மத்திய அரசின் கீழ் அஞ்சல் அலுவலகம் செயல்படுவதால் நம்பகத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனாலேயே பொதுமக்கள் பலரும் அஞ்சல் அலுவலகத் திட்டங்களை நாடிச் செல்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com