
சர்வதேச முதலீட்டாளர்கள் சமீபகாலமாக தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்து வருவதால், சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக போர் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால், தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்ந்த நிலையில், இந்த மாத தொடக்கத்தில் இருந்து மேலும் அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்தால் அடுத்த நாளே ரூ.300 வரை உயருகிறது. முடிவே இல்லாமல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வந்த நிலையில் வரலாற்றில் முதல் முறையாக கடந்த 12-ந்தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.70 ஆயிரத்தை தாண்டி ரூ.70,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தற்போதைய நிலவரப்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.9,005-ம், சவரனுக்கு ரூ.72,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து இதுவரை இல்லாத வகையில் மின்னல் வேகத்தில் உயர்ந்து உச்சத்தை எட்டி உள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் பணக்காரர்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லை. ஆனால் தற்போது இந்த விலை ஏற்றம் ஏழைகளுக்கு எட்டாத கனியாக மாறி உள்ளது.
தற்போது குடும்ப பெண்களும், வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பணத்தை தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். நகைக்கடைகளில் தங்க சீட்டு போடுவது, தங்க நாணயங்கள், தங்க பத்திரம் போன்றவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். அந்த வகையில் தங்க நாணயம், தங்க நகைகள் எதில் முதலீடு செய்தால் எதிர்காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்று அறிந்து கொள்ளலாம்.
முதலீட்டைப் பொறுத்தவரை, தங்க நாணயங்கள் அவற்றின் அசல் மதிப்பை அதிகமாகத் தக்கவைத்துக்கொள்வதால் அவை ஒரு சிறந்த தேர்வாகும். இருப்பினும், நகைகள் கலாச்சார மற்றும் உணர்வுபூர்வமான மதிப்பைக் கொண்டிருப்பதால், இதை சுபநிகழ்ச்சிகளில் அணியவும், சமூக அந்தஸ்தை காட்டவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. திருமணமாக இருந்தாலும் சரி, குழந்தையின் பிறப்பு என்றாலும் சரி, நம் அன்பை வெளிப்படுத்த இந்த மஞ்சள் உலோகத்தை பரிசளிப்பது இந்தியர்களாகிய நம்மிடையே பாரம்பரியமாக காலம்காலமாக வேரூன்றிய கலாச்சாரமாகும். நாணயங்கள் நிதி ரீதியாக மிகவும் மதிப்புமிக்கவை என்றாலும், நகைகளின் மதிப்பு வெறும் பண மதிப்பைத் தாண்டி நீண்டுள்ளது. தங்க நகைகளின் உரிமையாளர் பெருமையுடன் அவற்றை அணியலாம் என்றாலும், அது சிறந்த முதலீட்டுத் தேர்வல்ல.
தங்க நாணயங்கள் மற்றும் கட்டிகள் தூய்மையான தங்கத்தால் ஆனவை. அவை பொதுவாக முதலீட்டு நோக்கங்களுக்காக வாங்கப்படுகின்றன. மேலும் இவற்றை எதிர்காலத்தில் நகைகளாக மாற்றலாம் அல்லது நிதித் தேவைகளுக்கு பணத்தை ஈட்ட விற்கலாம். தங்க நாணய நன்மைகளில் அதிக மறுவிற்பனை மதிப்பு மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை அடங்கும்.
நீங்கள் தங்க நாணயங்களை மறு விற்பனை செய்யும் போது அன்றைய நாளில் தங்கம் விலை எவ்வளவோ அந்த விலையைக் கொடுத்து கடைக்காரர் வாங்கிக் கொள்வார். தங்க நகைகளை பொருத்தவரையில் அப்படி செய்ய முடியாது. அதன் மதிப்பு மறு விற்பனையின் போது குறையலாம்.
முதலீட்டின் அடிப்படையில் பார்க்கும்போது நகைகளுடன் ஒப்பிடுகையில் நாணயங்களை வாங்குவது சிறந்த தேர்வாக இருக்கும். ஏனெனில் நாணயங்கள் 24 கேரட் தங்கத்திலும் செய்யப்படும். 24 கேரட் தங்கம் என்பது 99.9% தூய தங்கத்தை கொண்டது.
ஆனால் நகைகளாக வாங்கினால் அவற்றின் மதிப்பு குறையலாம். ஏனெனில் நகைகள் 22 கேரட் தங்கத்தில் செய்யப்படும். இதில் 91.6 சதவீதம் தான் தூய தங்கம் இருக்கும். அதிக மறுவிற்பனை மதிப்பு இருக்க வேண்டும், எதிர்காலத்தில் அதிக பணம் கிடைக்கவேண்டும் என்றால், அதற்கு தங்க நாணயங்களில் முதலீடு செய்வது லாபம் மற்றும் புத்திசாலித்தனமாகும்.
இதற்கிடையே, வரும் 30-ந் தேதி அட்சய திருதியை வருகிறது. அட்சய திருதியை அன்று பொதுமக்கள் ஒரு கிராம் தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்று விரும்புவார்கள். இதனால், நகைக் கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால், அதிகரித்து வரும் தங்கத்தின் விலை பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.