அட்சய திருதியை ஒரு பண்டிகையும் அல்ல, கோவில் திருவிழாவும் அல்ல. இருந்தாலும் அந்த நாளின் ஆன்மீக விசேஷங்கள் கருதி அதை சமீப காலமாகக் கொண்டாட ஆரம்பித்திருக்கிறார்கள். அட்சய என்ற சொல்லுக்கு 'அள்ள அள்ளக் குறையாமல் பெருகுவது' என்று பொருள். இந்த நாளில் வாங்கப்படும் பொருட்கள், செய்யப்படும் தான தர்மங்கள் பல மடங்காகப் பெருகும்.
மொத்தம் 15 திதிகளில் மூன்றாவது வரும் திதி தான் திருதியை திதி. சித்திரை மாதம் வரும் வளர்பிறை திருதியை தினத்தை அட்சய திருதியை தினமாகக் கொண்டாடுகிறார்கள். 3ஆம் எண்ணுக்கு அதிபதி குரு. இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே இவருக்கு பொன்னன் என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. அட்சய திருதியை குருவிற்கும் உகந்த நாளாகக் கருதப்படுவதால் அன்று பொன் வாங்கும் வழக்கம் ஆரம்பித்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.
ஆனால், அட்சய திருதியை பல ஆன்மிக சிறப்புகளைக் கொண்ட நாளாகத்தான் கருதப்படுகிறது. அட்சய திருதியை திருநாளின் விசேஷங்களை 'பவிஷ்யோத்திர புராணம்' விளக்குகிறது.
*பகீரதன் தவம் செய்து பூமிக்கு புனித நதியான கங்கையை வரவழைத்தது இந்த நாளில் தான் என்று கூறப்படுகிறது. மேலும்,
*காசியில் அன்னபூரணி தாயாரிடமிருந்து சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றது,
*பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் 'அட்சய' என்று சொல்லி அவளுடைய ஆடையை வளரச் செய்தது,
*வேதவியாசர் சொல்ல ஸ்ரீ கணபதி மஹாபாரதத்தை எழுதியதும் இந்த நாளில் தான்.
இந்த நாளில் செய்யும் ஜெபம், யாகம், பித்ரு-தர்ப்பணம், தான தர்மங்கள் போன்ற ஆன்மீக செயல்கள் என்றென்றும் நமக்கு நற்பலன்களை அள்ளித் தரும். அது மட்டுமல்ல. இந்த நாளில் புதுத் தொழில் தொடங்கலாம். புதிதாக ஏதாவது கலையை கற்க ஆரம்பிக்கலாம். வீடு மனை வாங்கலாம். எந்த காரியம் செய்தாலும் அது பெருகி நம் வாழ்வில் செல்வ வளங்களை சேர்க்கும். முக்கியமாக அன்று லட்சுமி குபேர பூஜை செய்தால் அது நமக்கு சகல சௌபாக்கியங்களையும் அளிக்கும். வெள்ளை நிறத்தில் பால் பாயசம், தயிர் சாதம் நைவேத்தியம் வைத்து, வெள்ளை மல்லிகை மலர்களால் மகாலட்சுமி போற்றிகள் சொல்லி அர்ச்சித்து வழிபட வேண்டும்.
அட்சய திருதியை அன்று செய்யும் தானங்கள் பல ஆயிரம் மடங்காக ஆகி நமக்கு நற்பலன்களை விளைவிக்கும். அன்ன தானம், வஸ்திர தானம், போன்றவை நம் வீட்டுக்கு ஐஸ்வர்ய லட்சுமியை அழைத்து வரும் என்று கூறப்படுகிறது.
மகாலட்சுமி தாயார் பாற்கடலில் வாசம் செய்கிறாள். அதனால் உப்பு, சர்க்கரை போன்ற வெள்ளை நிறமுள்ள பொருட்களை அன்று தானம் கொடுப்பது நமக்கு எல்லா வளங்களையும் கொடுக்கும். நம் வீட்டுக்கும் கல் உப்பு, கற்பூரம் போன்ற மங்கலப் பொருட்களை வாங்கலாம்.
இந்த ஆண்டு அட்சய திருதியை ஏப்ரல் 30ஆம் தேதி (புதன்கிழமை) அன்று கொண்டாடப்படுகிறது. பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அதனாலேயே சிலர் அன்று நிச்சயம் பொன் வாங்க விரும்புவார்கள். அது மட்டுமல்ல ரோகிணி நட்சத்திரமும் அன்று சேர்ந்து வருவது கூடுதல் விசேஷமாகக் கருதப்படுகிறது. ஏப்ரல் 29 ஆம் தேதி இரவு 08.49 மணிக்கு ஆரம்பிக்கும் அட்சய திருதியை திதி ஏப்ரல் 30 ஆம் தேதி மாலை 06.41 வரை இருக்கிறது. அன்று புனிதத் தலங்களுக்கு செல்லலாம், புனித நதிகளில் நீராடலாம். அன்று செய்யும் எல்லா புனிதமான காரியங்களுமே செழித்து வளரும்.