

சொத்துக்களின் மதிப்பு முன்பை விட தற்போது பலமடங்கு உயர்ந்து விட்டது. ஆனால் மாதச் சம்பள (Salary) விகிதம் உயர்ந்திருக்கிறதா என்றால், இல்லையென்று பட்டென்று சொல்லி விடலாம். 1980-90 காலகட்டத்தில் ரூ.5,000 சம்பளம் வாங்கினாலே போதுமானதாக இருந்தது. இந்த சம்பளத்திலேயே அனைத்து செலவுகளும் அடங்குவதோடு, சேமிப்புக்கும் ஒரு சிறுதொகையை ஒதுக்கி விடலாம்.
ஆனால் இன்றைய நிலைமை அப்படியே தலைகீழாக மாறி விட்டது. சம்பள விகிதத்தைக் காட்டிலும், சொத்துக்களின் மதிப்பு பலமடங்கு உயர்ந்து விட்டது. இதுமட்டுமின்றி நாளுக்கு நாள் சொத்துக்களின் மதிப்பு ஏறுமுகத்திலேயே இருக்கிறது. சமீப காலமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்வை கவனித்தால், இது உங்களுக்குப் புரிந்து விடும்.
இந்நிலையில் எதிர்காலத்தில் தங்கம், வெள்ளி கூட மிகப்பெரிய சொத்தாகவே கருதப்படும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்
இன்றைய காலகட்டத்தில், குடும்பச் செலவுகளை சமாளிக்கத் திணறும் தனியார் நிறுவன ஊழியர்கள், சொத்துக்களை வாங்குவது என்பது மிகவும் கடினமானது. எவ்வளவு தான் போராடினாலும் கடன் வாங்காமல் சொத்துக்களை வாங்க இயலாது. அந்த அளவிற்கு சொத்துக்களின் மதிப்பு அதிகரித்து விட்டது. அதிலும் சென்னை, ஐதராபாத் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் வீடு மற்றும் மனைகளின் விலையைக் கேட்டால் தலையே சுற்றி விடும்.
1990-களில் ரூ.1.5 லட்சத்திற்கே வீடுகள் கிடைத்தன. ஆனால் இன்று ஒரு வீட்டை வாங்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ரூ.70 முதல் ரூ.80 லட்சம் வரை செலவாகும். இப்படியான சூழலில் சாமானிய மக்களால் சொந்த வீட்டை நனவாக்க முடியுமா என்றால், அதற்கு வங்கிக் கடனைத் தவிர வேறு வழியே இல்லை. ஆனால் வங்கிக் கடனை வாங்கி விட்டு, மாதத் தவணையை செலுத்துவதும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தி விடும்.
ஏன் இந்த விலை உயர்வு? நம்முடைய தாத்தா மற்றும் தந்தை காலத்தில் குறைந்த சம்பளத்திலேயே வீடு வாங்க முடிந்தது. ஆனால் இன்று பலமடங்கு சம்பளம் வாங்கியும் சொத்துக்களை வாங்க முடியவில்லையே! இதை எப்படி புரிந்து கொள்வது என்பது தான் இளைஞர்கள் பலரது மனதிலும் எழும் ஒரே கேள்வியாக உள்ளது.
சொத்துக்களின் மதிப்பு உயர்ந்த அளவிற்கு, சம்பள விகிதம் உயரவில்லை என்பது தான் இதற்கான முக்கிய காரணம்.
கடந்த 35 ஆண்டுகளில் சம்பள விகிதம் 30 முதல் 40 மடங்கு வரை உயர்ந்துள்ளது. ஆனால் சொத்துக்களின் மதிப்பு மட்டும் 100 மடங்குக்கும் மேல் உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதாவது முன்பெல்லாம் ரூ.5,000 சம்பளத்தைப் பெறும் ஒருவர், 40 முதல் 50 மாதச் சம்பளங்களை வைத்தே ஒரு வீட்டை வாங்க முடியும் என்ற சூழல் இருந்தது. ஆனால் தற்போதைய நிலையில் மாதம் ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கினால் கூட, ஒரு ஃபிளாட்டை வாங்க குறைந்தது 70 முதல் 80 மாதச் சம்பளங்கள் தேவைப்படும்.
மியூச்சுவல் ஃபணட், தங்கம் மற்றும் வெள்ளி மட்டும் முதலீடுகள் அல்ல. இன்றைய காலகட்டத்தில் சொத்துக்களை வாங்குவதும் சிறந்த முதலீடாகவே பார்க்கப்படுகிறது. அதிலும் சாலையோரம் இருக்கும் சொத்துக்களுக்கு மதிப்பு அதிகம்.
வங்கிக் கடன் பெற்று சொத்துக்களை வாங்க நினைத்தால், முன்பணம் கொடுக்கும் அளவிற்காவது பணத்தை நாம் சேமித்திருக்க வேண்டும். இல்லையெனில் கடன் தொகை அதிகமாகிவிடும். வீட்டுக் கடனுக்கு வட்டி குறைவாகவே இருந்தாலும், இது நீண்ட கால கடன் என்பதை மறந்திடக் கூடாது