

மாறிவரும் பொருளாதார சூழல்களில் கார் வாங்க வேண்டியது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. குடும்பத்திற்கு ஒரு கார் இன்று கட்டாயத் தேவை. மாதம் ஒன்றிரண்டு முறை வாடகை காரில் வெளியூர் பயணம் செய்வோர்கள், இந்த வாடகைக்கு பதில் ஒரு சொந்த காரை வாங்கினால் பணம் மிச்சமாகும் என்று நினைக்கும் காலமிது. புதிய கார்களின் விளம்பர விலை ஒன்றாக இருந்தாலும், வாங்கும் போது அதன் விலை இரண்டு மடங்காக இருக்கிறது.
இப்போது சாதாரணமான கார்களின் விலை ₹7 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. நடுத்தர வர்க்கத்தினர் குறைந்த பட்ஜெட்டில் செகண்ட் ஹேண்ட் கார் வாங்குவது லாபமாக இருக்கும் என்று நினைக்கின்றனர். அப்படி பயன்படுத்திய காரை வாங்கும்போது, சில விஷயங்களை சோதனை செய்யாவிட்டால் உங்களுக்கு அது அதிக நஷ்டத்தை ஏற்படுத்துவதாக மாறும். அதனால் இதை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
காரின் தோற்றம் மற்றும் வயது:
காருக்கு புற அழகைப் போல, அக அழகும் முக்கியம். இஞ்சின் மட்டும் நல்லா இருந்தா போதும் என்று நினைக்க வேண்டாம். உள்ளே இருக்கும் சீட்டுகளின் தரம் மிக முக்கியம். சீட்டுகளின் கவர் விலையே அதிகம் என்பதால் இந்த சோதனை முக்கியம். சில கார்களின் வெளிப்புற பெயிண்ட் தரமும் முக்கியம். என்னதான் ரீ பெயிண்ட் அடிக்க நினைத்தாலும் ஒரிஜினல் போல வராது. ஏசி திறன் சோதித்து பார்ப்பது நல்லது. நம்மூர் வெயிலுக்கு ஜன்னல் காற்று வாங்கியே போகலாம் என்று நினைக்காதீர்கள்.
காருக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை வயது இருக்கலாம். அதற்கு மேல் பழைய கார் வாங்கினால், வங்கி மற்றும் நிதி நிறுவனத்தின் கடன் ஆதரவு கிடைக்காது; காருக்கு மதிப்பும் இருக்காது. அதுபோல ஒரு உரிமையாளருக்கு மேல் இருந்தாலும், கார் வாங்க கிடைக்கும் கடன் குறையக் கூடும். கார் இன்சூரன்ஸ் தாளில் குறிப்பிடப்படும் காரின் மதிப்பை தான் பெரும்பாலும் வங்கிகள் கவனத்தில் கொள்ளும், அதேநேரம் காரின் தரம் குறைந்தாலும் வாகனத்தின் மீதான கடன் மதிப்பும் குறையும்.
RC மற்றும் இன்சூரன்ஸ்:
ஒரிஜினல் RC இருக்கிறதா என்பதை பாருங்கள். RC இல்லை என்றால் அது வங்கி அல்லது வேறு இடத்தில் அடமானம் இருக்கலாம். தவணையில் கார் வாங்கினால் NOC கட்டாயம் வாங்கிக் கொள்ளுங்கள். கார் தவணையை முந்தைய உரிமையாளர் பெயரில் தொடரும் தவறான வேலையை செய்யாதீர்கள்.
காரின் RC மற்றும் இன்சூரன்ஸ் ஆகியவற்றை உங்கள் பெயரில் மாற்றிக் கொள்ளுங்கள்.
காரின் தரநிலை சோதனைகள்:
குறைந்த பட்சம் காரை 5 கிமீ வரை ஒட்டிப் பாருங்கள். எஞ்சின் சத்தம் , பிரேக்குகள், சஸ்பென்ஷன், கியர் பாக்ஸ், கிளட்ச் பிளேட், எலக்ட்ரானிக்ஸ் யூனிட் மற்றும் டயரின் நிலையை முழுமையாகச் சரிபார்க்கவும். எஞ்சின், கியர், கிளட்ச் ஆகியவற்றில் பிரச்சனை இருந்தால் அது 5,0000, 10,000 ரூபாய் செலவில் இழுத்து விடும் என்பதை மறக்க வேண்டாம்.
மைலேஜ் மிகவும் முக்கியம். 1 லட்சம் கிலோ மீட்டருக்கும் குறைவாக ஓடிய காரை வாங்குங்கள். அதை தாண்டி ஓடி இருந்தால் காரில் பல பாகங்கள் தேய்ந்து போய் அவை மாற்றும் நிலையில் இருக்கலாம். கட்டாயம் நல்ல மெக்கானிக் அல்லது சர்வீஸ் ஷோரூம் சென்று காரை பரிசோதிக்கவும்.
பாதுகாப்பு :
காரில் ABS, ஏர் பேக்குகள் எல்லாம் இருக்கிறதா என்பதை பாருங்கள். ஏர் பேக்குகள் இருந்தால் அது வேலை செய்யும் நிலையில் உள்ளதா? காரின் மற்ற சென்சார்கள் உள்ளனவா? தற்போது அதன் நிலையை அறிந்துக் கொள்ளுங்கள். இவை காரில் பயணம் செய்பவரின் பாதுகாப்பை உறுதி செய்யும்.
காரின் முந்தைய உரிமையாளர் ஏதேனும் குற்றச்செயல்களில் தொடர்பு உள்ளவரா? என்பதை விசாரித்துக் கொள்ளுங்கள். இது காவல்துறையிடம் இருந்து உங்களது பாதுகாப்பை உறுதி செய்ய உதவும்.