
‘காருக்கு வழக்கமான சர்வீஸ்தானே’ என்று நாம் நமது காரை சர்வீஸ் சென்டரில் கொடுத்து விட்டு வந்துவிடுவோம். ‘சார் உங்க வண்டி சர்வீஸ் முடிந்து விட்டது. சர்வீஸ் சார்ஜ்’ என்று ஒரு பெரிய தொகையை நம் தலையில் கட்டுவார்கள். ஆனால், நம்மில் பல பேர் கார் சர்வீஸ் என்பது ஆயில் மாற்றுவது மட்டுமே என்று நினைக்கிறோம். ஆனால், உண்மையில் இது முழு வாகனத்தையும் சரிபார்க்க ஒரு வாய்ப்பாகும்.
கார் சரியாக சர்வீஸ் செய்யப்படாவிட்டால், அது பாதியிலேயே வேலை செய்வதை நிறுத்தக்கூடும். மேலும், பெரும் செலவுகளுக்கும் கூட காரணமாகலாம். கார் சர்வீஸ் செய்யும்போது, முதலில் என்ஜின் ஆயில் மற்றும் ஃபில்டரை சரிபார்க்க வேண்டும். சரியான நேரத்தில் என்ஜின் ஆயிலை மாற்றாமல் இருந்தால், காரின் எஞ்சின் பலத்த சேதத்தை சந்திக்க நேரிடும்.
பழைய அல்லது அழுக்கான ஆயில் ஃபில்டர் மாற்றப்பட்டுள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளுங்கள். எஞ்சின் ஆயில் மாற்றுவது எஞ்சினின் செயல்திறன் மற்றும் மைலேஜ் நன்றாகக் கொடுக்க உதவும். சர்வீஸ் சென்டரில், நிறுவனத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் தரத்தின்படி புதிய ஆயில் போடப்பட்டுள்ளதா? இல்லையா? என்பதை சரிபாருங்கள்.
கார் சர்வீஸ் செய்யும்போது, பிரேக் பேடுகள், பிரேக் ஆயில் மற்றும் டயர்களின் நிலையை கவனமாக சரிபார்க்க வேண்டியது மிகவும் அவசியம். தேய்ந்துபோன பிரேக் பேடுகளை மாற்றுவது பாதுகாப்பு கண்ணோட்டத்தில் மிகவும் முக்கியமானது. டயரில் காற்று மற்றும் ட்ரெட் நிலை சரியாக இருக்கிறதா என்றும் கவனிக்க வேண்டும். டயரில் குறைவான பிடி இருந்தால் அல்லது விரிசல்கள் இருந்தால், அதை உடனடியாக மாற்ற வேண்டும். அவற்றை சரியான நேரத்தில் சரிபார்ப்பது உங்கள் வாகனத்தை சாலையில் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும்.
காரின் பேட்டரி மற்றும் மின்சார அமைப்பையும் சர்வீஸ் செய்யும்போது முழுமையாகச் சரிபார்க்க வேண்டும். பேட்டரி போதுமான அளவு சார்ஜ் செய்யப்பட்டிருப்பது, டெர்மினல்கள் சுத்தமாக இருப்பது மற்றும் விளக்குகள், ஹாரன், வைப்பர்கள் போன்றவை சரியாக வேலை செய்வது மிகவும் முக்கியம். பேட்டரி பலவீனமாக இருந்தால், நீண்ட பயணத்தின்போது நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
திடீர் கோளாறு காரணமாக கார் வழியில் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, மேலே சொல்லப்பட்டஅனைத்து மின்னணு அம்சங்களும் சர்வீஸ் மையத்தால் சரிபார்க்கப்படுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ‘சர்வீஸ் சென்டரில் வண்டியைக் கொடுத்தோம், பிறகு வாங்கிக்கொண்டு வந்தோம்’ என்று வந்து விடாதீர்கள். சரியான நேரத்தில் இவற்றை எல்லாம் சரிபார்ப்பது உங்கள் வாகனத்தை சாலையில் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும். அப்புறம் என்ன, இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டால் சாலையில் கார் சவாரி என்பது எல்லோருக்கும் சுலபம்தானே.