

தனிமனித நிதியில் நிதி திட்டமிடல் அதாவது பட்ஜெட் போடுவதற்கு பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அவற்றில் ஒன்று பூஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்ட பட்ஜெட். அதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
பூஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்ட பட்ஜெட் என்றால் என்ன?
பூஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்ட நிதி திட்டமிடல் அதாவது பட்ஜெட் ஆங்கிலத்தில் ஜீரோ பேஸ்டு பட்ஜெட்(zero based budget) என்று அழைக்கப்படுகிறது. இது 1970களில் பீட்டர் பைர்( peter pyhrr) அவர்களால் உருவாக்கப்பட்டது. இது நிறுவனங்களின் நிதி திட்டமிடலுக்கு மட்டுமின்றி தனி மனித நிதி திட்டமிடலுக்கும் பெருமளவில் உதவிகரமாக உள்ளது.
இங்கு ஒவ்வொரு மாதமும் மொத்த வருமானமும், மொத்த செலவும் ஒப்பிடப்பட்டு வருமானத்திலிருந்து செலவைக் கழித்தால் பூஜ்ஜியம் வருமாறு பட்ஜெட் போடப்படுகிறது. இங்கு சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வேலை கொடுக்கப்படுகிறது. அந்த ரூபாய் தேவைகள், விருப்பங்கள் மற்றும் சேமிப்புகள் சார்ந்த செலவு வகைகளுக்கு ஒதுக்கப்படுகிறது.
பூஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்ட பட்ஜெட்டைப் போடுவது எப்படி?
1. ஒரு மாதத்திற்கான வரவுகளை வரவு செலவு கணக்கு நோட்டு புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்.
2. ஒரு மாதத்திற்கான செலவுகளை வரவு செலவு கணக்கு நோட்டுப் புத்தகத்தில் பட்டியலிட வேண்டும்.
3. படி இரண்டாவதில் எழுதிய செலவுகளை வகைப்படுத்த வேண்டும். பின்வரும் வகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். உணவு , உடை, இருப்பிடம், வாகனங்கள், பொழுதுபோக்கு, பயன்பாடுகள், குடும்பம், மருத்துவம், கடன், பயணம், சுற்றுலா, காப்பீடு, சுய பராமரிப்பு, பரிசுகள், ஈகை...
4. வருமானங்களைக் கூட்ட வேண்டும். செலவுகளைக் கூட்ட வேண்டும். இப்பொழுது இரண்டிற்குமான வித்தியாசம் பூஜ்ஜியமாக இருக்க வேண்டும்.
இங்கு மூன்று விஷயங்கள் நடக்கலாம்.
i) வருமானமும் செலவும் சமமாக இருப்பது - ஏற்கனவே வருமானமும் செலவும் சமமாக இருக்கின்றன.
செலவுகளை எவ்வாறு குறைப்பது என்று பார்த்து செலவு வகைகளுக்கு குறைவாக பணத்தை ஒதுக்க வேண்டும். மீதமுள்ள பணத்தை நிதிக் குறிக்கோள்களுக்கு ஒதுக்க வேண்டும். இவ்வாறு ஒதுக்கிய பிறகு வருமானமும் செலவும் சமமாக இருக்கும். இரண்டிற்குமான வித்தியாசம் பூஜ்ஜியமாக இருக்கும்.
ii) வருமானம் செலவைவிட அதிகமாக இருப்பது - இப்பொழுது அதிகமாக உள்ள வருமானத்தை நிதி குறிக்கோள்களுக்கு ஒதுக்க வேண்டும். செலவுகளுக்கு பணத்தைக் குறைவாக ஒதுக்கி, மீதமுள்ள பணத்தை நிதிக்குறிக்கோள்களுக்கு ஒதுக்க வேண்டும். இப்பொழுது வருமானமும் செலவும் சமமாக இருக்கும். இரண்டிற்குமான வித்தியாசம் பூஜ்ஜியமாக இருக்கும்.
iii) வருமானத்தை விட செலவு அதிகமாக இருப்பது - செலவு வகைகளுக்குப் பணத்தைக் குறைவாக ஒதுக்கி, மீதமுள்ள பணத்தை நிதிக் குறிக்கோள்களுக்கு ஒதுக்க வேண்டும். இப்பொழுது வருமானமும் செலவும் சமமாக இருக்கும். இரண்டிற்குமான வித்தியாசம் பூஜ்ஜியமாக இருக்கும்.
5. ஒரு மாதம் முடிந்த பிறகு நமது அனுபவத்தைக் கொண்டு அடுத்த மாதத்திற்கு பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
உதாரணமாக ஒரு செலவு வகைக்கு நாம் பணத்தை அதிகமாக ஒதுக்கி இருக்கலாம் அல்லது குறைவாக ஒதுக்கி இருக்கலாம் அதற்கு ஏற்றவாறு நாம் அடுத்த மாத பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். மேலும் நமது நிதி குறிக்கோள்களுக்கு ஏற்றவாறு பட்ஜெட்டில் மாற்றங்களைச் செய்ய வேண்டும். கடன்களைக் கட்டி முடித்த பின், மீதமுள்ள பணத்தை முதலீடுகளுக்கு ஒதுக்க வேண்டும்.
பூஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்ட பட்ஜெட்டின் நிறைகள் :
* ஒவ்வொரு ரூபாய்க்கும் வேலை கொடுக்கப்படுவதால் நிதி குறிக்கோள்களை அடைவது எளிதாகிறது
* மேலோட்டமாக இல்லாமல் ஆழமாக உள்ளதால் பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் தெளிவாகின்றன.
* மாதாமாதம் அந்தந்த நிதிக்குறிக்கோள்களுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்வது எளிதாகிறது.
* பொறுப்புணர்வு அதிகமாகிறது- வரி வரியாக செலவுகளை வகைப்படுத்தி அதற்கு பட்ஜெட் போடுவதால் பொறுப்புணர்வு அதிகரிக்கிறது.
பூஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்ட பட்ஜெட்டின் குறைகள் :
* தொடக்கத்தில் வரி வரியாக செலவுகளை வகைப்படுத்தி அதற்கு ஏற்றவாறு பட்ஜெட் தயார் செய்வதால் அதிக மெனக்கெடல் தேவைப்படுகிறது.
* மாதாமாதம் பட்ஜெட்டில் மாறுதல்கள் செய்வதால் ஒவ்வொரு மாதமும் அதிக மெனக்கெடல் தேவைப்படுகிறது
பூஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்ட பட்ஜெட் வழிமுறையைப் பயன்படுத்தி நிதிக்குறிக்கோள்களை அடைய வாழ்த்துகள்...