இன்றைய காலக்கட்டத்தில் வங்கிக் கடன் பெறாதவர்கள் பெரும்பாலும் இருக்க முடியாது. ஒவ்வொருவரின் தகுதிக்கு ஏற்ப அவர்களின் கடனும் உயர்ந்து இருக்கும். கடனில் இருக்கும் ஒரு சிரமமான விஷயம் என்னவென்றால் , நாம் அதற்கு கட்டும் வட்டி தான். சில சமயம் வட்டி அதிகமாக இருந்தால், அது அசல் தொகையையும் தாண்டி சென்றிருக்கும். சில வங்கிகளின் வட்டி விகிதம் , நாம் வாங்கிய அசல் தொகையை போல இன்னொரு மடங்கு சேர்த்து கட்ட வேண்டி இருக்கும் . கடனுக்கான வட்டியைக் குறைக்க சில ட்ரிக்ஸ்கள் உள்ளன, அது என்னவென்று பார்போம்.
1. குறைந்த ஆண்டுகள் (Minimum Tenure):
பல வங்கிகளில் வட்டி விகிதம் நிலையானதாக இருக்கும் , அப்போது வட்டியை குறைக்க இயலாது. ஆனால் , தவனைத் தொகை செலுத்தும் வருடத்தை குறைத்து , கடன் வாங்கினால் லாபமாக இருக்கும். உதாரணத்திற்கு 10 லட்சம் கடனுக்கு ஆண்டு வட்டி 10% ஆக இருந்தால் , தவணைக் காலத்தை 5 வருடங்களாக தேர்தெடுத்தால் மாதத் தவணைத் தொகை ₹21,247 வரை வரும் ,மொத்தமாக அவர் ₹12,74,823 கட்டி முடிக்க வேண்டும். இதில் வட்டி மட்டும் ₹2,74,823 வரை வரும் .
இதே கடனுக்கு நீங்கள் கடன் தவணை செலுத்தும் வருடத்தை 4 ஆண்டுகளாக குறைத்தால் , உங்களின் தவணைத் தொகை சிறிது அதிகரிக்கும். அதாவது தவணைத் தொகை ₹25,363 ஐ கட்டி 4 வருடங்களில் முடித்தால் ,மொத்தமாக ₹12,17,404 கட்டி முடிப்பார்கள் , இதில் வட்டி மட்டும் ₹2,17,404 ஆகும். முந்தைய கடனுடன் ஒப்பிட்டால் ₹57,419 மிச்சப்படுத்தி இருப்பீர்கள்.
2. வங்கி மேலாளருடன் பேச்சுவார்த்தை (Discuss with Manager):
இந்த முறையில் நேரடியாக நீங்கள் வங்கியின் மேனேஜரை அணுகி வட்டி விகிதத்தை குறைக்க முடியும். ஆனால் , அந்த வங்கியின் கொள்கையின் படி, நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச வட்டியில் நீங்கள் கடன் பெற்று இருந்தால் ஒன்றும் செய்ய முடியாது. மற்றவர்களை விட உங்களுக்கான வட்டி விகிதம் அதிகம் இருந்தால், நீங்க நேரடியாக வங்கியை அணுகலாம்.
அதற்கான தகுதியாக நீங்கள் அனைத்து தவணையையும் ஒழுங்காக குறித்த தேதியில் கட்டி இருக்க வேண்டும். இது மட்டுமல்லாது அந்த கடனை வாங்கி 1 வருடம் ஆகி இருக்க வேண்டும் , என்பதும் அவசியம் . "வேறு வங்கியில் கடனை மாற்ற போகிறேன் , இதை விட குறைவான வட்டியில் கடன் தருகிறார்கள் , இந்த கடனை முடிக்க நீங்கள் லோன் ஸ்டேட்மென்ட் தாருங்கள்" என்று மேலாளரிடம் கேட்டால் , அவரே வட்டியை குறைக்க முன்வருவார்.
3. கடனை வேறு வங்கிக்கு மாற்றுதல் (Balance Transfer ):
ஒரு வங்கியில் அல்லது நிதி நிறுவனத்திடம் நீங்கள் கடன் வாங்கி இருந்தால் , ஒரு வருடம் கழித்து அந்தக் கடனை வேறு வங்கிக்கு மாற்றினால் சிறிதளவு வட்டி குறையக் கூடும். குறைந்த பட்சம் இதற்கு கடன் வாங்கி 6 மாதக் காலம் ஆக வேண்டும். அந்த கடனின் தவணைத் தொகையையும் சரிவர கட்டியிருக்க வேண்டும். நிதி நிறுவனத்திடம் கடன் வாங்கியிருந்தால் , அதை வங்கிக்கு மாற்றினால் பெருமளவில் வட்டி குறையும்.
4. முன்கூட்டியே தவணை தொகையை செலுத்துதல் (Prepayment):
முன்கூட்டியே சில தவணைத் தொகைகளை சேர்த்து செலுத்தினால் , உங்களின் அசல் கணக்கில் அவை வரவு வைக்கப்பட்டு , அதற்கான வட்டித் தொகையும் முழுமையாக குறைக்கப்படும். ஆனால் , இதைக் கடன் வாங்கி முதல் 6 மாதத்தில் செய்யக் கூடாது. அதன் பின்னர் வங்கி அதிகாரிகளிடம் கலந்து பேசி விட்டு பணத்தை கட்டுங்கள்.