எவ்வாறு தூண்டிலில் மீனைப் பிடிப்பதற்கு இரை வைக்கப்படுகிறதோ, அதனைப் போலவே நம்மை நிதி சிக்கல்களில் சிக்க வைப்பதற்கு பல்வேறு விதங்களில் தூண்டில்களில் இரை வைக்கப்படுகிறது. இத்தகைய மோசடிகளைத் தூண்டில் இரை மற்றும் மாற்றுதல் நிதி மோசடி (Bait and Switch Financial Scam) என்று குறிப்பிடுகின்றனர்.
இத்தகைய தூண்டில் இரை மற்றும் மாற்றுதல் நிதி மோசடிகள் பல்வேறு விதங்களில் நடக்கலாம். சில உதாரணங்களைப் பார்ப்போம்.
ஒரு தரமான பொருளை விளம்பரப்படுத்திவிட்டு, கடைக்குச் சென்ற பிறகு அந்தத் தரமான பொருள் கடையில் தீர்ந்துவிட்டது என்று சொல்லி, அதற்கு மாற்றாக அதே பொருளின் மற்ற தினுசுகளை அதிகமான விலையில் விற்பது,
ஒரு தரமான பொருளை விளம்பரப்படுத்தி விட்டு, கடைக்குச் சென்ற பிறகு அதே பொருளின் தரக்குறைவான தினுசினை அதே விலைக்கு விற்பது,
ஒரு பொருளை விளம்பரப்படுத்திவிட்டு கடைக்குச் சென்ற பின், அதன் விலையில் மறைமுகமாக பல்வேறு விலைகளை ஏற்றி விலையை அதிகரித்து விற்பது,
இத்தகைய தூண்டில் இரை மற்றும் மாற்றுதல் நிதி மோசடிகள் பல்வேறு நாடுகளில் குற்றமாகக் கருதப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா, ஆஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளில் இந்த மோசடிகளுக்கு கடும் தண்டனைகள் உள்ளன.
இதனைக் குறித்த ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்.
ஒரு சிறிய மீன் தண்ணீரில் நீந்தி கொண்டிருந்தது. அப்போது அதன் அருகே ஒரு ஈ இருந்தது. சிறிய மீன் உடனே அதை உண்பதற்கு வேகமாக அதை நோக்கிச் செல்லத் தொடங்கியது. அதனைக் கண்ட அந்தச் சிறிய மீனின் தாய் மீன் அதனை உடனே தடுத்து நிறுத்தியது. 'ஏனம்மா, என்னை நிறுத்துகிறீர்கள்! அந்த ஈ நமது இரையல்லவா?' என்றது சிறிய மீன்.
'அது சாதாரண ஈயாக இருந்தால், நீ வருவதைக் கண்டவுடன் உன்னைத் தாக்குவதற்கு வந்திருக்கும். ஆனால், அது சலனமின்றி உள்ளது. அது ஒரு தூண்டிலில் உள்ள இரையாக இருக்கலாம். எனவே, எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால், அதோடு சேர்ந்து நாமும் மீனவனுக்கு இரையாக நேரிடும்' என்றது தாய் மீன்.
அப்போது அந்த ஈயைப் பிடிக்க ஒரு பெரிய மீன் அங்குச் சென்றபோது, அந்தத் தூண்டிலில் அந்தப் பெரிய மீன் சிக்கிக் கொண்டது. தனது தாயிடம் தன்னைக் காப்பாற்றியதற்கு சிறிய மீன் நன்றி கூறியது.
'எதையும் ஆராயாமல் செய்யக்கூடாது! இந்த அறிவுரையை நினைவில் வைத்திரு' என்றது பெரிய மீன்.
இதனைப் போலவே, நாமும் இத்தகைய தூண்டில் இரை மற்றும் மாற்றுதல் நிதி மோசடிகளில் மாட்டிக் கொள்ளக் கூடாது. நாம் ஏதேனும் ஒரு விளம்பரத்தைப் பார்க்கும் பொழுது, அது நம்புவதற்கு கடினமாக இருக்கிறது என்றால் அது மோசடியாக இருப்பதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதற்கு ஆங்கிலத்தில் Too good to be true என்பார்கள். இத்தகைய விளம்பரங்களில் நாம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
மே 2024 இல் ஹைதராபாத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு 517 முதலீட்டாளர்கள் 200 கோடிகளுக்கு மேல் பணத்தை இழந்தனர். அவர்கள் ஸ்ரீ பிரியங்கா எண்டர்பிரைசஸ் என்கிற தனியார் நிதி நிறுவனத்தில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை முதலீடு செய்து பணத்தை இழந்தனர். அந்த தனியார் நிதி நிறுவனம் திடீரென்று ஒரு நாள் காணாமல் போனது. எனவே, நாம் பேராசை பட்டு நிதி மோசடிகளில் சிக்காமல் இருக்க, தூண்டில் இரை மற்றும் மாற்றுதல் நிதி மோசடிகளைப் பற்றி அறிந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.