
பொருளாதாரம் படிப்பது பல நன்மைகளைத் தரும் ஒரு படிப்பு என்பதில் சிறிதும் ஐயம் வேண்டாம். இது தனி நபர்களுக்கு மட்டும் இல்லாமல் நாட்டின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும். ஒருவர் பொருளாதார அறிவைப் பெறுவதன் மூலம் உலக பொருளாதாரத்தின் போக்குகளை தெரிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும், சரியான முடிவுகளை எடுக்கவும் முடியும். அத்துடன் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு பெறுவது பல்வேறு தொழில் வாய்ப்புகளையும் வழங்கும். வர்த்தகம், வறுமை மற்றும் மேம்பாடு போன்ற உலகளாவிய பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்வதற்கும், சர்வதேச உறவுகள் மற்றும் உலகளாவிய சந்தைகள் பற்றிய ஆழமான புரிதலை வளர்த்துக் கொள்வதற்கும் பொருளாதாரம் பற்றிய படிப்பு மிகவும் அவசியம்.
பொருளாதார படிப்பு என்பது நிஜ உலக பிரச்னைகளை கையாள்வதற்கு பெரிதும் உதவும். இதன் மூலம் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரப் பிரச்னைகளை பகுப்பாய்வு செய்ய கற்றுக் கொள்கிறோம். இதனால் சிக்கலான சூழ்நிலைகளை பகுப்பாய்வு செய்து நம்மால் எளிதில் தீர்வு காணவும் முடியும். பொருளாதாரம் பற்றிய அறிவு அரசாங்க செலவுகள், வரிவிதிப்பு மற்றும் அன்றாட வாழ்வில் பொருளாதார நிகழ்வுகளின் தாக்கத்தை புரிந்து கொள்ள உதவும்.
பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு, மேற்படிப்பு படித்தவர்களுக்கு பல துறைகளில் குறிப்பாக வங்கி, நிதி, அரசுத்துறை, தனியார் நிறுவனங்கள் என்று பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகம் கொட்டி கிடக்கின்றன. அத்துடன் சிறந்த பொருளாதார நிபுணர்களாகவும், ஆலோசர்களாகவும் கூட பணி புரிய முடியும்.
பொருளாதார அறிவைப் பெறுவதன் மூலம் வணிகங்கள், அரசியல் அமைப்புகள், தனிநபர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் எடுக்கும் முடிவுகளின் சாத்தியமான விளைவுகளைப் புரிந்து கொள்ள உதவுவதால், சிறந்த முடிவுகளை எடுக்கும் திறன் அதிகரிக்கும். பொருளாதாரம் நிதி அமைப்புகளை பற்றிய புரிதலை மேம்படுத்தும். சிறந்த தனிப்பட்ட நிதி மேலாண்மை மற்றும் முதலீட்டு முடிவுகளை செயல்படுத்த உதவும்.
பொருளாதாரம் படிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகளை உருவாக்கவும், செயல்படுத்தவும் முடியும். வறுமை, வேலையில்லா திண்டாட்டங்கள் போன்ற சமூகப் பிரச்னைகளை புரிந்து கொள்வதற்கு மட்டுமின்றி அவற்றை தீர்ப்பதற்குமான வழியும் கிடைக்கும். மொத்தத்தில் பொருளாதார அறிவைப் பெறுவதன் மூலம் புதிய சவால்களை எதிர்கொள்ளவும், தரவுகளை பகுப்பாய்வு செய்யவும், புள்ளி விவரங்களை புரிந்து கொள்ளவும் முடியும். இது பல்வேறு துறைகளில் பயனுள்ளதாக இருக்கும்.
மொத்தத்தில் பொருளாதாரம் படிப்பதால் சிக்கலான பிரச்னைகளை தீர்க்கும் திறன் அதிகரிப்பதுடன், பொருளாதாரம் பற்றிய உலகளாவிய புரிதல் ஏற்படவும் வழிவகுக்கும். இதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கவும், சமூகப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும் முடியும். இது தனி நபர்கள் மற்றும் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும்.