இளம் தலைமுறையினருக்கு, எந்தப் பிரச்னையும் இன்றி உடல் ஆரோக்கியமாக இருக்கும்போது ஹெல்த் இன்சூரன்ஸ் (Health Insurance) ஒரு தேவையில்லாத செலவாகத் தோன்றலாம். ஆனால், இளம் வயதிலேயே சரியான ஹெல்த் இன்சூரன்ஸில் முதலீடு செய்வது, எதிர்பாராத மருத்துவச் செலவுகளில் இருந்தும், சேமிப்பை குறைக்காமலும் உங்களைப் பாதுகாக்கும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் மருத்துவமனையில் தங்குவது, மருத்துவரிடம் ஆலோசனை மேற்கொள்வது, அறுவை சிகிச்சைகள் மற்றும் மருந்துகள் போன்ற செலவுகளுக்கு உதவுகிறது. ஹெல்த் இன்சூரன்ஸில் இதுபோன்ற மருத்துவச் செலவுகளை நேரடியாக செலுத்துவதற்குப் பதிலாக, நீங்கள் மாதந்தோறும் அல்லது வருடந்தோறும் ஒரு சிறிய தொகையை பிரீமியமாக செலுத்துவீர்கள். மேலும், உங்களுக்கு மருத்துவ உதவி தேவைப்படும்போது ஏற்படும் பெரிய செலவுகளை இன்சூரன்ஸ் நிறுவனம் பார்த்துக்கொள்ளும்.
ஹெல்த் இன்சூரன்ஸின் வகைகள்:
ஹெல்த் இன்சூரன்ஸில் பொதுவாக மூன்று வகையான கவரேஜ் பாலிசிகள் உள்ளன. அவை,
தனிநபர் ஹெல்த் இன்சூரன்ஸ் (Individual Health Insurance): இதில் உங்கள் ஒருவரின் மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் அளிக்கப்படும்.
ஃபேமிலி ஃப்ளோட்டர் திட்டம் (Family Floater Plan): இந்த திட்டத்தில் உங்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆகும் மருத்துவச் செலவுகளை இன்சூரன்ஸ் நிறுவனம் பார்த்துக்கொள்ளும்.
குரூப் ஹெல்த் இன்சூரன்ஸ் (Group Health Insurance): இந்த வகையான ஹெல்த் இன்சூரன்ஸ் பொதுவாக தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், அங்கு வேலை செய்யும் பணியாளர்களுக்குக் கொடுக்கும இன்சூரன்ஸ் பாலிசி ஆகும்.
Gen Z ஏன் இப்போதே இன்சூரன்ஸ் எடுக்க வேண்டும்?
நீங்கள் இளமையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்போது, இன்சூரன்ஸ் நிறுவனங்கள் குறைவான பிரீமியங்களை வசூலிக்கின்றன. சீக்கிரமாக எடுக்கும்போது, இந்த குறைந்த தொகையை நீண்ட காலத்திற்குப் பெறலாம்.
விபத்துகளோ அல்லது நோய்களோ எப்போது வேண்டுமானாலும் வரலாம். இன்சூரன்ஸ் உங்கள் சேமிப்பை காலி செய்யக்கூடிய திடீர் மருத்துவச் செலவுகளில் இருந்து உங்களை பாதுகாக்கிறது.
இன்சூரன்ஸ் இருப்பது, சிறந்த மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை முறைகளைத் தேர்ந்தெடுக்க உதவும்.
ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியங்கள் இந்தியாவில் வருமான வரிச் சட்டம் பிரிவு 80D-யின் கீழ் வரி விலக்கு பெற தகுதியானவை.
ஒரு பாதுகாப்பு வலை இருப்பது, உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்.
ஒரு நல்ல ஹெல்த் இன்சூரன்ஸ் திட்டத்தை எப்படி தேர்வு செய்வது?
கவரேஜ் தொகை (Sum Insured): ஒரு மருத்துவ அவசரநிலையை சமாளிக்கக்கூடிய கவரேஜ் தொகையைத் தேர்ந்தெடுக்கவும். ₹5 லட்சம் அல்லது அதற்கு மேல் இருப்பது ஒரு நல்ல தொடக்கம்.
காத்திருப்பு காலம் (Waiting Period): சில நோய்களுக்கு கவரேஜ் தொடங்குவதற்கு முன் ஒரு குறிப்பிட்ட காத்திருப்பு காலம் இருக்கும். குறைந்த காத்திருப்பு காலம் உள்ள திட்டங்களைத் தேர்ந்தெடுக்கவும்.
நெட்வொர்க் மருத்துவமனைகள் (Network Hospitals): நீங்கள் அடிக்கடி செல்ல விரும்பும் மருத்துவமனைகள் நீங்கள் தேர்ந்தெடுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைப்பில் இருக்கிறதா என சரிபார்த்துக் கொள்ளவும்.
கூடுதல் பலன்கள்: வருடாந்திர மருத்துவ பரிசோதனைகள் போன்ற கூடுதல் வசதிகள் உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.
Gen Z-க்கு ஹெல்த் இன்சூரன்ஸ் ஒரு தேவையற்ற செலவு போல் தோன்றலாம். ஆனால், இது உங்கள் ஆரோக்கியத்திற்கும், உங்கள் எதிர்காலத்திற்கும் ஒரு முக்கியமான முதலீடு.
முக்கியமாக வெவ்வேறு இன்சூரன்ஸ் கம்பெனிகள் வெவ்வேறு பாலிசி விதிமுறைகளை வைத்திருக்கும். தேர்ச்சிபெற்ற இன்சூரன்ஸ் நிபுணர்களின் ஆலோசையைப் பெற்று இன்சூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது!