

கடன் என்பது தவிர்க்கப்படவேண்டிய தீமையாக கருதப்பட்டு வருகிறது. இதனைக் காலங்காலமாக வழக்கிலுள்ள பழமொழிகள் மற்றும் அறிவுரைகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கடன் சம்பந்தமான பழமொழிகள் (proverbs about debt) மற்றும் அறிவுரைகளைப் பற்றி விரிவாக பார்ப்போம். அவற்றை மூன்றாக பிரித்துக் கொள்ளலாம்.
1. கடன் வரும் முன் காத்துக் கொள்வதைக் குறித்து
2. கடன் வந்த பின் வெளியேறுவது குறித்து
3. கடனை விட்டு வெளியேறிய பின் அடையும் மன அமைதி குறித்து
இந்த மூன்று வகைகளைப் பற்றிப் பார்ப்போம்.
கடன் வரும் முன் காத்துக் கொள்வதைக் குறித்து:
"இரவு உணவில்லாமல் தூங்குவதென்பது காலையில் கடனாளியாக எழுந்திருப்பதை விட மேலானது" - பெஞ்சமின் பிராங்க்ளின்.
பட்டினியில் படுத்தாலும் பரவாயில்லை. ஆனால், கடன் அதை விட மோசமானது. கடன் என்பது நமது அமைதியை குலைக்க வல்லது. கடனைத் தவிர்ப்பது, நமது அமைதியைக் காக்க வல்லது.
"ஒருபோதும் கடன் கொடுப்பவராகவோ அல்லது கடனாளியாகவோ இருக்காதீர்கள்" - வில்லியம் ஷேக்ஸ்பியர். கடன் கொடுத்தால், கடனைத் திரும்ப வாங்குவது கடினம். கடனாளி ஆனால், கடனை அடைப்பது கடினம். எனவே, கடனைத் தவிர்க்க வேண்டும்.
"நீ எப்போது கடன் வாங்குகிறாயோ, அப்போதே அடிமையாகி விடுகிறாய்" - ஆன்ட்ரூ ஜாக்ஸன். கடன் வாங்கினால், கடன்காரனுக்கு நாம் பதில் சொல்ல வேண்டும். நமது சுதந்திரம் பாதிக்கப்படுகிறது.
"நான் உங்களுக்கு சொல்கிறேன். ஒருபோதும் கடனாளி அல்லது பிணையாளி ஆகாதீர்கள்" - ஆன்ட்ரூ ஜாக்ஸன். கடனாளி ஆனால் கடனுக்குப் பதில் சொல்ல வேண்டும். பிணையாளி ஆனால், கடன் வாங்கியவர் கடன் கட்டவில்லையென்றால், பிணையாளி அந்தக் கடனுக்குப் பதில் சொல்ல வேண்டும். எனவே, கடனை எந்த வடிவத்திலும் தவிர்க்க வேண்டும்.
"கடன் அன்பை முறிக்கும்" - பிரபல பழமொழி. கடன் வாங்குவது அன்பான உறவை கெடுக்க வாய்ப்புள்ளது.
"கடனில் விழுவதை விட, பழைய மேலங்கியை அணிந்து கொள்" - அமெரிக்க பழமொழி. கடன் வாங்கி பொருள் வாங்க கூடாது. இருப்பதைக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்.
கடன் வந்த பின் வெளியேறுவது குறித்து:
"கடனிலிருந்து வெளியேற இரண்டு வழிகள் உண்டு. உழைப்பை அதிகரித்து, வருமானத்தை அதிகரிப்பது. பணத்தைச் செலவழிப்பதில் சிக்கனமாக இருப்பது - தாமஸ் கார்லைல்." அதிகமாக பணத்தைச் சம்பாதிப்பது, சம்பாதித்தப் பணத்தைச் சிக்கனமாக வாழ்ந்து சேமிப்பது என்ற இரண்டின் மூலம், அதிக பணத்தைச் சேமிக்க முடியும். அதன் மூலம் கடனை அடைக்க முடியும்.
"எண்ணங்கள் நிரம்பிய நூறு வண்டிகளின் சுமை ஒரு அவுன்ஸ் கடனைப் போக்க முடியாது" - இத்தாலியப் பழமொழி. கடனை அடைக்க வேண்டுமென்று எண்ணினால் மட்டும் போதாது. அதற்கான செயலில் இறங்க வேண்டும். அதன் மூலமே கடனை அடைக்க முடியும்.
"கடினமான காலங்கள் கடனாளியைத்தான் சீரழிக்கின்றன" - ருதர்போர்டு பி. ஹேயஸ். கடினமான காலங்களில், கடன் வாங்கியவன் கடன் கொடுத்தவனுக்கு பதில் சொல்ல வேண்டும். எனவே, கடன் வாங்காதவனை விட கடன் வாங்கியவனை கடினமான காலங்கள் அதிகமாக பாதிக்கின்றன.
"கடன்பட்டார் உள்ளம் போல் கலங்கினான் - இலங்கை வேந்தன் அருணாசல கவிராயர். கடன் பட்டார் உள்ளம் கலக்கம் கொள்ளும். கடனைக் கட்டி முடிப்பதன் மூலம், கலக்கங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
"கடன்களைக் கட்டி முடியுங்கள் அல்லது நண்பர்களை இழந்து விடுங்கள்" - அமெரிக்க பழமொழி. கடன்கள் நட்பைப் பாதிக்க வல்லன.
"பல கடன்களுடன் இருப்பதுதான், மிக மோசமான வறுமை" - இந்தியப் பழமொழி. வறுமையில் இருந்தாலும் கடனில்லை என்றால் சமாளிக்கலாம். ஆனால், பல கடன்களுடன் இருப்பதென்பது வறுமையை விட மோசமானது. எனவே, கடன்களை சீக்கிரமாக கட்டி முடிக்க வேண்டும்.
"மழையில்லாமல், கடன்களிலுள்ள வட்டி வளர்கிறது" - இட்டிஷ் பழமொழி. கடனிலுள்ள வட்டி வளர்ந்து கொண்டே இருக்கும். எனவே, சீக்கிரமாக கடனை கட்டி முடிப்பது நல்லது.
"ஆயிரம் வருத்தங்கள் ஒரு கடனைத் தள்ளுபடி செய்யாது" - துருக்கிய பழமொழி. கடன் வாங்கிய பின்னர் வருந்துவதால் கடன் தள்ளுபடி ஆகாது. கடனைச் செயலின் மூலமே போக்க முடியும்.
"நீங்கள் கடனிடம் ஓடிச் செல்ல முடியும். ஆனால், தவழ்ந்துதான் வெளியேற முடியும்." - அமெரிக்க பழமொழி. கடனில் விழுவது எளிது. வெளியேறுவது கடினம்.
"நோயாளி தூங்குகிறான். ஆனால், கடனாளி தூங்குவதில்லை" - ஸ்பானிய பழமொழி. கடன் தூக்கத்தைத் தொந்தரவு செய்ய வல்லது. எனவே, சீக்கிரமாக கடனைக் கட்டி முடிக்க வேண்டும்.
"கடன் நெருஞ்சி முள்ளைப் போன்றது. அது சிறியதாக இருந்தாலும் ஏற்படுத்தும் வலி அதிகம்" - வேதாத்திரி மகரிஷி. கடன் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அது வலியை ஏற்படுத்தக் கூடியது. கடனை அடைப்பதன் மூலம், வலியைத் தவிர்க்கலாம்.
கடனை விட்டு வெளியேறிய பின் அடையும் மன அமைதி குறித்து:
"கடனிலிருந்து வெளியே. அபாயத்திலிருந்து வெளியே" - பிரபல பழமொழி. கடன் என்பது அபாயகரமானது. அதிலிருந்து வெளியேறினால், அபாயத்தைக் கடந்துவிட்டோம்.
"நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால், இளமையாக உள்ளீர்கள் என்று பொருள். அதேபோல், உங்களுக்கு கடன் இல்லையென்றால், நீங்கள் பணக்காரர் என்று பொருள்." - சிசிலியன் பழமொழி. கடனில்லாமல் இருப்பதே உண்மையில் பணக்காரராக இருப்பது.
"கடனில்லாத மனிதனே மகிழ்ச்சியான மனிதன்" - இலத்தீன் பழமொழி. கடனில்லாமல் இருப்பதன் மூலமே ஒரு மனிதன் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
"கடனிலிருந்து வெளியேறுபவன் தன்னை வளமாக்கிக் கொள்கிறான்" - பிரெஞ்சு பழமொழி. கடனிலிருந்து வெளியேறுவதன் மூலமே பணக்காரனாக முடியும்.
"கடனைக் கட்டி முடிப்பவன், பணத்தை உருவாக்குகிறான் - இத்தாலிய பழமொழி." கடனைக் கட்டி முடிப்பதன் மூலமே பணக்காரனாக முடியும்.
"கடனில்லாத மனிதனே நிம்மதியான மனிதன்" - தமிழ்ப் பழமொழி. கடனில்லாமல் இருப்பதன் மூலமே, மன நிம்மதியை அடைய முடியும்.
இந்தப் பழமொழிகள் (proverbs about debt) நமக்கு பின்வரும் அறிவுரைகளைப் பகிர்கின்றன,
கடனை விழிப்புணர்வுடன் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
ஒருவேளை கடன் வாங்கிவிட்டால், சீக்கிரமாக அடைத்து வெளியேறுவதன் மூலம், நிம்மதியான வாழ்க்கையை அடைய முடியும்.