கடனில்லா வாழ்க்கைக்கு 10 நல்ல பழக்கங்கள்: வரவுக்குள் செலவு, சேமிப்பு, திட்டமிட்ட முக்கியம்!

வரவுக்குள் செலவு, நிதி திட்டமிடல், அவசரகால நிதி, காப்பீடு போன்ற 10 நல்ல பழக்கங்கள் மூலம் கடனில்லா, நிம்மதியான வாழ்க்கையை உருவாக்கலாம்
saving-tips
saving-tips
Updated on

ருவன் கடனில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பின்வரும் 10 நல்ல பழக்கங்களைக் கடைபிடிக்க வேண்டும். கடனில்லாத வாழ்க்கை வாழ, இந்த 10 நல்ல பழக்கங்கள் மிகவும் அவசியம். கடனிலிருந்து வெளிவந்தவர்கள் மட்டுமல்ல, இதுவரை கடனே வாங்காதவர்கள் கூட இந்த 10 நல்ல பழக்கங்களைக் கடைபிடிப்பதன் மூலம், கடன் என்ற அபாயகரமான குழியில் விழாமல் தப்பித்துக் கொள்ளலாம்.

வரவுக்குள்ளாக செலவு செய்து, சிக்கனமான வாழ்க்கை நடத்துவது - எந்த ஒரு செலவும் வரவிற்குள்ளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நமது வரவுக்கேற்ற செலவை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். ஏதாவது ஒரு செலவு பெரிய செலவாக இருக்குமானால், அதற்கு மாதா மாதம் நிதி திட்டமிடலில் பணம் சேமித்து, அந்த செலவைச் செய்ய வேண்டும்.‌ ஒவ்வொரு செலவையும் குறைக்க முடியுமா, தவிர்க்க முடியுமா என்று கண்டு சிக்கனமானதொரு வாழ்க்கை நடத்த வேண்டும்.

நிதி திட்டமிடல்(Budget) செய்வது- மாதாமாதம் நிதி திட்டமிடல் செய்து, பணத்தை திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். ஒவ்வொரு ரூபாய்க்கும் வேலை கொடுக்கவேண்டும். பணத்தை சும்மா வைத்திருக்க கூடாது. அவசர கால நிதி, குறுகிய காலக் குறிக்கோள்கள், நடுத்தர கால குறிக்கோள்கள், எதிர்கால குறிக்கோள்கள் என திட்டமிட்டு மாதாமாதம் பணத்தை ஒதுக்க வேண்டும்.

அவசரகால நிதி வைத்திருப்பது - அவசரக்கால நிதியானது திடீர் வேலை இழப்பு, திடீர் வீட்டின் உறுப்பினர் நோய்வாய்படுதல், திடீர் வாகனப் பழுது போன்ற திடீர் செலவுகளைக் கடன் வாங்காமல் கையாள உதவும். முதலில் ரூபாய். 10000 எனத் தொடங்கி, குறைந்த பட்சம் மூன்று முதல் ஆறு மாதங்களுக்கான செலவுகளை அவசரகால நிதியாக வைத்திருக்க வேண்டும்.

காப்பீடுகள் வைத்திருப்பது- மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு, ஆயுள் காப்பீடு, வீட்டு காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்ற தேவை சார்ந்த பல்வேறு காப்பீடுகளை வைத்திருக்கவேண்டும். இந்தக் காப்பீடுகள் வீட்டின் நிதி நிலைமையை காக்க உதவும். பெரும் செலவுகளைக் கடன் வாங்காமல் சமாளிக்க உதவும்.

கடன்களை எந்த ஒரு வடிவத்திலும் தவிர்ப்பது - நேரடியான கடன்களான தனிநபர் கடன்,  கடனட்டை கடன், வாகனக் கடன் போன்றவைகளும், மறைமுகமான கடன்களான இப்பொழுது வாங்கு பின்னர் பணம் செலுத்து (Buy Now Pay Later), தவணை முறையில் பொருட்களை வாங்குவது போன்றவைகளும் தவிர்க்கப்பட வேண்டும். வீட்டுக் கடன் மட்டும் விதி விலக்கு. நமது சம்பாத்தியத்திற்கு ஏற்ற வீட்டினை வாங்கவேண்டும். வீட்டுக்கடனுக்கு வரி விலக்கு உண்டு. வீடு அத்தியாவசிய தேவை. வீட்டுக் கடனைக் கூட, எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அடைத்துவிட வேண்டும்.

இதையும் படியுங்கள்:
லட்சங்களில் செலவு... நிம்மதியான வாழ்வு: வீட்டுக் கடன் மற்றும் கார் கடனைக் குறைப்பது எப்படி?
saving-tips

அதிகமாக பணத்தை ஈட்ட முயல்வது - பகுதி நேரத்தில் வேறு ஒரு வேலையில் ஈடுபடுவது, ஈடுபாடு அற்ற (passive income) முறையில் பணம் ஈட்டுவது, வேலையில் பணி உயர்வு பெறுவது, வீட்டில் மனைவியும் வேலைக்கு செல்வது என பல்வேறு வழிகளில் அதிகமாக பணத்தை ஈட்ட முயலவேண்டும். இவ்வாறு அதிகமாக ஈட்டிய பணம் முதலீட்டின் மூலம் இன்னும் அதிகமாக பெருக்க முடியும். நிதிக் குறிக்கோள்களை சீக்கிரமாக அடைய முடியும்.

நிதி சம்பந்தமான அறிவை வளர்த்துக் கொள்வது - சேமிப்பு, கடன், முதலீடு, காப்பீடு, அவசரகால நிதி போன்ற நிதி அடிப்படைகளை அறிந்துகொள்ள வேண்டும்.‌ அதன் மூலம் குடும்பத்தின் நிதி நிலைமையை காப்பது மற்றும் எதிர்கால குறிக்கோள்களை அடைவது எளிதாகும். இதற்காக நிதி சம்பந்தமான புத்தகங்களைப் படிக்கவேண்டும். அன்றாடம் செய்தித்தாள்களில் நிதி சம்பந்தமான பக்கங்களைப் படிக்க வேண்டும்.

வாழ்க்கைத்தர பண வீக்கத்தை (Life Style Inflation) தவிர்ப்பது- வாழ்க்கைத்தர பண வீக்கம் என்பது சம்பளம் கூடும் பொழுது, வாழ்க்கைத் தரத்தை அதிகரித்துக் கொள்வது.‌ அதன் காரணமாக, எவ்வளவு சம்பளம் வந்தாலும் போதாத நிலை தோன்றும்.  உதாரணமாக, அதிக சம்பளம் வந்தால், விலை உயர்ந்த சிற்றுந்து வாங்குவது, பெரிய வாடகை வீட்டிற்கு குடி பெயர்வது. இவ்வாறு அதிகமாக பணம் வந்த போதிலும் செலவு அதிகமாக இருப்பதால், மறுபடி கடனில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உண்டு. எனவே, அதிகமாக பணம் சம்பாதித்தாலும், சிக்கனமாக வாழ்ந்து, பணத்தைச் சேமித்து முதலீடு செய்ய வேண்டும்.

எந்த ஒரு பொருளையும் சேமித்து வாங்குவது மற்றும் உணர்ச்சி வயப்பட்ட பொருள் வாங்குவதை (Impulse purchase) தவிர்ப்பது- எந்த ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றாலும் அதற்கு நிதி திட்டமிடலில் பணத்தை ஒதுக்கி, சேமித்து வாங்க வேண்டும். உணர்ச்சி வயப்பட்ட பொருள் வாங்குதலின் மூலம் நாம் மிகப்பெரிய கடனில் மாட்டிக் கொள்ள நேரிடும்.‌

இதையும் படியுங்கள்:
கடன் வாங்குவது சுலபம்... திருப்பித் தருவது? கையெழுத்திடும் முன் கவனிக்க வேண்டியவை!
saving-tips

தள்ளிப் போடப்பட்ட அனுபவித்தலை (Delayed Gratification) பழக்கமாக்கிக் கொள்வது - இன்று ஒரு ஜாங்கிரி சாப்பிடுவதற்கு பதிலாக, காத்திருந்தால் பத்து ஜாங்கிரி சாப்பிடமுடியுமெனில், காத்திருக்க பழகிக்கொள்ள வேண்டும். எந்த ஒரு தேவைக்கும் உடனடியாக அவசரப்படாமல், அதற்கு நிதி திட்டமிடல் செய்து பணம் சேமித்து அந்தத் தேவையைப் பூர்த்தி செய்வது தள்ளிப்போடப்பட்ட அனுபவித்தல். எவ்வாறு ஒரு விதை செடியாகி,  மரமாகி கனிகளைக் கொடுக்கும் வரை காத்திருக்கிறோமோ, அவ்வாறே எந்த ஒரு நிதிக் குறிக்கோளுக்கும் முதலீடு செய்து பொறுமையாக  இருந்து காலம் கனியும் வரைக் காத்திருக்க பழகிக்கொள்ள வேண்டும்.

இந்த 10 நல்ல பழக்கங்கள் மூலம் கடனில்லாத வாழ்க்கையைத் தொடரமுடியும்.

logo
Kalki Online
kalkionline.com