பொருட்களை மொத்தமாக வாங்குவது புத்திசாலித்தனமானதா அல்லது சில்லரையாக வாங்குவது புத்திசாலித்தனமானதா என்ற ஒரு கேள்வி நமக்கு எழலாம். அதற்கு எளிமையான விடை இதோ. பொருட்களைத் தேவையைச் சார்ந்து வாங்குவது தான் புத்திசாலித்தனம்.
இதனைப் பற்றி விரிவாக பார்ப்போம்.
ஒருவனுக்கு பலாச்சுளை மட்டுமே தேவை என்றால் அதைத்தான் வாங்க வேண்டும். பலாப்பழத்தில் அதிக பலாச்சுளைகள் கிடைக்கின்றன என்று பலாப்பழம் வாங்கிய பின், அவனால் ஒரு சில பலாச்சுளைகளை மட்டுமே சாப்பிட முடிந்தால், மீதமான பலாச்சுளைகள் கெட்டுப் போய் பொருள் வீணாகும். மேலும் பணமும் விரயம் ஆகும்.
எனவே பொருட்களைச் சில்லரையாக வாங்குவதா அல்லது மொத்தமாக வாங்குவதா என்பது பின்வரும் காரணிகளைக் கொண்டு முடிவு செய்யப்பட வேண்டும்.
எனக்கு மொத்தமாக வாங்கும் அளவிற்கு தேவை உள்ளதா?
குடும்பத்தில் நிறைய உறுப்பினர்கள் இருந்து நமக்கு தேவை அதிகமாக இருந்தால் மொத்தமாக வாங்கலாம்.
மொத்தமாக வாங்கிய பொருளைச் சேமித்து வைக்க போதுமான இடம் என்னிடம் உள்ளதா?
வீட்டில் மொத்தமாக பொருட்களைச் சேமித்து வைக்க ஸ்டோர் ரூம் அதாவது காமரா அறை இருந்தால் பொருட்களை வாங்கிச் சேமிக்கலாம்.
மொத்தமாக வாங்கிய பொருளைக் கெட்டுப் போவதற்குள் என்னால் பயன்படுத்திவிட முடியுமா?
உதாரணமாக, சீக்கிரமாக கெட்டுப் போகாத பொருட்களான நோட்டுப் புத்தகங்கள், அரிசி, சோப்பு, தானியங்கள் போன்றவற்றை மொத்தமாக வாங்கலாம். சீக்கிரமாக கெட்டுப் போகும் பொருட்களான பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் போன்றவற்றை மொத்தமாக வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
மொத்தமாக வாங்கிய பொருளை கெட்டுப் போகாமல் பராமரிக்க என்னிடம் போதிய வசதிகள் உள்ளனவா?
மொத்தமாக வாங்கிய பொருளைச் சேமித்துப் பாதுகாக்க வீட்டில் குளிர்பதன பெட்டியில் பெரிய ஃப்ரீசர் அதாவது உறைப்பெட்டி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.
மொத்தமாக வாங்கிய பொருளை அதிகமாக பயன்படுத்துவதால் எனக்கு ஏதேனும் பின் விளைவுகள் வருமா?
உதாரணமாக, மேல்குறிப்பிட்ட பலாப்பழத்தில் தேவைக்கு அதிகமாக பலாச்சுளைகளை உண்டால் வயிற்றுப்போக்கு உண்டாகும்.
மொத்தமாக வாங்குவது என்பது நிஜமாகவே குறைவான விலையா?
இதற்கு பொருளின் அலகு மதிப்பைப் பார்க்க வேண்டும். உதாரணமாக,
பொருளின் அலகு மதிப்பு (cost per unit):
சலவைத்தூள் 100 கிராம் - 20 ரூபாய்
ஒரு கிராமிற்கான அலகின் விலை =
20/100 = .2 அதாவது 20 காசுகள்
சலவைத்தூள் 1 கிலோ - 80 ரூபாய்
ஒரு கிராமிற்கான அலகின் விலை
80/1000 = .08 அதாவது 8 காசுகள்
மொத்தமாக வாங்குவதன் மூலம் ஒரு அலகிற்கு நாம் குறைவாக பணம் கொடுக்கிறோம். எனவே, இந்த விஷயத்தில் மொத்தமாக வாங்குவது சரியாக இருக்கலாம்.
பொருளை மொத்தமாக வாங்கும் அளவிற்கு என்னிடம் பட்ஜெட் அதாவது நிதி திட்டமிடல் உள்ளதா?
அதிகமாக வாங்குகிறேன் பேர்விழி என்று நிதித் திட்டமிடலைத் தாண்டி நாம் செல்லக்கூடாது. அப்போது போதிய பணம் மற்ற விஷயங்களுக்கு இல்லாமல் அவற்றுக்கு கடன் வாங்க நேரலாம்.
இவ்வாறு பல்வேறு கேள்விகளை எழுப்பி ஒரு பொருளை சில்லரையாக வாங்குவதா அல்லது மொத்தமாக வாங்குவதா என்று முடிவு எடுக்க வேண்டும். மிக முக்கியமாக, பொருளின் அலகிற்கான விலையை மட்டும் கணக்கில் கொள்ளாமல், மற்ற எல்லா காரணிகளையும் கணக்கில் கொண்டு பொருளை மொத்தமாக வாங்குவதா சில்லரையாக வாங்குவதா என்று முடிவு எடுக்க வேண்டும். அதன் மூலம் பொருளும் பணமும் வீணாவதை நம்மால் தவிர்க்க முடியும்.