
அலசி ஆராயாமல் நாம் தேர்ந்தெடுக்கும் ஒரு பங்கு, பங்குச் சந்தையின் உச்சகட்ட வளர்ச்சி காலத்தில் பிரம்மாண்ட வளர்ச்சியைப் பெறலாம். ஆனால், அதனைக் கண்டு நாம் பங்குகளைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் தேர்ந்தவர்கள் என நினைப்பது தவறு. பலமான பங்கினைக் கொண்டுள்ளோம் என்று தவறாக எண்ணினால், முதலுக்கே மோசமாகலாம். நாம் தேர்ந்தெடுத்த அந்தப் பங்கு, பங்குச்சந்தையிலிருந்தே வெளியேறவும் நேரலாம் அல்லது விலை மிகவும் குறையலாம்.
இதை நன்கு புரிந்துகொள்ள ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்:
ஒரு ஓநாய் மலைகளில் சுற்றி திரிந்து கொண்டிருந்தது. அப்போது மாலை மங்கும் நேரம். சூரியன் மேற்கில் அஸ்தமித்துக் கொண்டிருந்தது. சூரியனின் வெளிச்சம் ஓநாயின் மீது விழ, ஓநாயின் நிழல் அருகில் இருந்த பாறையில் பிரம்மாண்டமாகத் தெரிந்தது.
அதைக் கண்ட ஓநாய் அதிர்ச்சி அடைந்தது. தான் இவ்வளவு பெரிதாக இருக்கிறோமா என்று தன்னை நினைத்து அது கர்வம் கொண்டது. இத்தனை நாள் மற்றவர்களுக்கு அஞ்சி இருந்து விட்டோமே, இனி யாருக்கும் அஞ்ச வேண்டாம் என்று முடிவு எடுத்தது.
அது நடந்து சென்ற போது எதிரில் பல்வேறு மிருகங்கள் வந்த பொழுது அவற்றையெல்லாம் கண்டு கொள்ளாமல் அது வீறு நடை போட்டது. அப்போது அதன் எதிரே ஒரு சிங்கம் வந்தது. அந்தச் சிங்கத்தைக் கண்டும் அந்த ஓநாய் அலட்சியம் செய்தது. அருகில் வந்த சிங்கம் ஓநாயின் மீது ஒரே பாய்ச்சலாக பாய்ந்து அதனை கொன்று தின்றது.
ஓநாய் தன்னைக் குறித்த தவறான மதிப்பீட்டால் தனது உயிரை இழந்தது.
இதனைப் போலவே நாம் பங்குச்சந்தையில் தேர்ந்தெடுக்கும் சிறிய நிறுவனப் பங்குகள் பங்குச்சந்தை வீறு கொண்டு உச்சத்தை நோக்கிச் செல்லும்போது, அதிக விலையைப் பெறலாம். பெரிய நிறுவனங்களைப் போல் தோற்றமளிக்கலாம். அது ஒரு மாயமான தோற்றமே. ஆனால், பங்குச்சந்தை தன்னை சரி செய்து கொண்ட (Correction) பின்னர், அந்தச் சிறிய பங்கு நிறுவனங்கள் மற்ற ஜாம்பவான் பங்குகளை விட மதிப்பில் குறைவாக இருக்கும். அதே துறையில் இருக்கும் ஜாம்பவான் நிறுவனங்கள் அந்தச் சிறிய நிறுவனங்களை எளிதில் தோற்கடித்து விடலாம். அப்போது, அந்த சிறிய நிறுவனத்தில் இருக்கும் நமது முதலீடு முதலுக்கே மோசமாகலாம். அதனால் அந்தச் சிறிய நிறுவனம் பங்கு சந்தையில் இல்லாமல் போய்விடலாம் அல்லது விலை மிகவும் குறைந்து விடலாம்.
எனவே நாம் ஒரு பங்கினை தேர்ந்தெடுக்கும் போது அதன் உண்மையான மதிப்பை உணர்ந்து தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு ஆங்கிலத்தில் Fundamental Analysis, அதாவது அடிப்படை அலசுதல் என்று கூறுவார்கள். அதன் மூலம் அந்தப் பங்கின் உண்மையான மதிப்பை உணர முடியும்.
சூரிய கதிர்களின் கோணம் காரணமாக எவ்வாறு ஓநாயின் நிழலானது பெரிதாக தோற்றம் அளித்ததோ, அவ்வாறே பங்குச்சந்தை உச்சத்தில் இருக்கும்போது சிறிய நிறுவன பங்குகள் கூட பிரம்மாண்ட அளவில் தோற்றமளிக்கும். அதனைக் கண்டு அந்தப் பங்கினை நாம் வாங்கினால், எதிர்காலத்தில் அந்தச் சிறிய நிறுவனம் ஓநாயினைப் போல் காணாமல் போய்விடலாம் அல்லது விலை குறைந்துவிடலாம். எனவே தான் பங்கின் உண்மையான மதிப்பினை அறிந்து கொண்ட பின்னர், அந்தப் பங்கினை வாங்க வேண்டும்.
இதனைத் தான் வாரன் பபெட் போன்ற நிதி வல்லுநர்களும் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த கோ ப்ரோ (Go Pro), ஃபிட் பிட் (Fitbit) போன்ற சிறிய நிறுவனங்கள், பெரிய சந்தைப் போட்டியினால், பெரும் வீழ்ச்சியைப் பங்குச்சந்தையில் சந்தித்துள்ளன.
குறிப்பிட்ட ஒரு பங்கினைத் தேர்ந்தெடுக்க விரும்பினால், அதன் உண்மையான மதிப்பினை அடிப்படை அலசுதல் மூலம் அறிந்து முதலீடு செய்வோம்.