

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, ஒட்டுமொத்த உலகமும் வேலை செய்யும் முறையே மாறிவிட்டது. இன்று இந்தியாவின் மூலை முடுக்கெங்கும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் கலாச்சாரம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், வேலை தேடும் இளைஞர்கள் முதல் அனுபவமிக்க நிபுணர்கள் வரை பலரும் தங்களுடைய சொந்த இல்லத்திலிருந்து, நெகிழ்வான நேரங்களில் பணிபுரியவே விரும்புகின்றனர். நீங்களும் அத்தகைய நம்பகமான ஆன்லைன் வேலை வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நற்செய்தி காத்திருக்கிறது.
மத்திய அரசு தனது தேசிய தொழில் சேவை (National Career Service - NCS) இணையதளம் மூலம் வேலை தேடுபவர் களுக்கு, ஆயிரக்கணக்கான வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்புகளை வழங்கி வருகிறது.
தனியார் வேலைவாய்ப்பு இணையதளங்களைப் போலன்றி, இது முற்றிலும் அரசு சார்ந்த, பாதுகாப்பான மற்றும் வெளிப்படையான ஒரு தளமாகும்.
NCS போர்ட்டல் என்றால் என்ன?
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தொடங்கப்பட்ட இந்த என்.சி.எஸ் (NCS) போர்ட்டல் என்பது வேலை தேடுபவர்களையும், பணியமர்த்தும் நிறுவனங்களையும் டிஜிட்டல் முறையில் இணைக்கும் ஒரு பிரம்மாண்டமான பாலமாகும்.
இந்தத் தளம் வெறும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்புகளை மட்டும் வழங்குவதில்லை; அதையும் தாண்டி தனியார் துறை வேலைகள், முழு நேர அலுவலகப் பணிகள், இன்டர்ன்ஷிப்கள், திறன் சார்ந்த வேலைகள் மற்றும் பல்வேறு தொழிற்பயிற்சிகளையும் வழங்குகிறது. இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிக்கும் விண்ணப்பதாரரும், நேரில் எங்கும் பயணிக்காமல் தங்களது வீட்டிலிருந்தே இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்பது இதன் கூடுதல் சிறப்பம்சமாகும்.
ஏன் இந்த போர்ட்டல் இவ்வளவு பிரபலம்?
இணையத்தில் இன்று ஆயிரக்கணக்கான போலி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் உலா வரும் நிலையில், NCS தளம் இளைஞர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ளது. வேலைவாய்ப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, இந்தத் தளத்தில் பட்டியலிடப்படும் நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகள் அனைத்தும் முறையாக சரிபார்க்கப்பட்டவை. இதனால் விண்ணப்ப செயல்முறைகள் பாதுகாப்பாகவும், வெளிப் படைத்தன்மையுடனும் இருக்கின்றன.
மேலும், சுமார் 59 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் இந்தத் தளத்தில் பதிவு செய்துள்ளன.
இந்த NCS போர்ட்டல் தற்போது மற்ற அரசு வேலைவாய்ப்பு அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இ-மிக்ரேட் (E-Migrate), எஸ்.ஐ.டி.ஹெச் (SIDH), மை பாரத் (My Bharat) மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு இணையதளங்கள் இதனுடன் இணைக்கப்படுகின்றன. இந்த ஒருங்கிணைப்பு, இந்திய இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலைவாய்ப்பு வலைப்பின்னலை உருவாக்கிக் கொடுக்கும் என நம்பப்படுகிறது.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
என்.சி.எஸ் போர்ட்டல் மூலம் வேலைகளுக்கு விண்ணப்பிப்பது மிகவும் எளிதானது.
1. முதலில் தேசிய தொழில் சேவை இணையதளத்திற்கு (www.ncs.gov.in) செல்ல வேண்டும்.
2. தளத்தில் உள்ள 'Register' ஆப்ஷனைப் பயன்படுத்தி, உங்களை ஒரு வேலை தேடுபவராக பதிவு செய்து கணக்கைத் தொடங்கவும்.
3. உங்கள் கல்வித் தகுதி, தனித்திறன்கள், பணி அனுபவம் மற்றும் உங்களுடைய விருப்பமான வேலை எது போன்ற விவரங்களைத் துல்லியமாகப் பதிவிடவும். முழுமையான சுயவிவரம் உங்களை நிறுவனங்களின் பார்வையில் எளிதில் கொண்டு சேர்க்கும்.
4. தேடல் பெட்டியில் 'Work From Home' அல்லது 'Remote Jobs' போன்ற முக்கிய வார்த்தைகளை உள்ளிட்டு தேடவும்.
5. நேரடியாக விண்ணப்பித்தல்: உங்கள் தகுதிக்கு ஏற்ற வேலைகளைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பக்கத்திலேயே நேரடியாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்கும் முன் கவனிக்க வேண்டியவை:
NCS போர்ட்டல் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது என்றாலும், விண்ணப்பதாரர்கள் சில பாதுகாப்பு விதிகளையும் பின்பற்ற வேண்டும். உங்கள் சுயவிவரத்தை கவனமாக நிரப்பவும். வேலை விவரங்களை முழுமையாகப் படித்துப் புரிந்து கொண்ட பின் அதிகாரப்பூர்வ வழிகளில் மட்டுமே விண்ணப்பிக்கவும். மிக முக்கியமாக, எந்தவொரு நிறுவனமோ அல்லது நபரோ வேலை தருவதாகக் கூறி முன்பணம் கேட்டாலோ அல்லது வங்கி விவரங்களைக் கேட்டாலோ அதைத் தவிர்க்கவும்.