செக் பவுன்ஸ் ஆனால் 2 மடங்கு அபராதமா? சட்டம் சொல்வது என்ன?

Cheque bounce legal consequences in focus
Cheque bounce legal consequences in focusImg credit: AI Image
Updated on

டன் வாங்கும்போதோ அல்லது பணப் பரிவர்த்தனைக்காக நாம் வழங்கும் காசோலை, வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாத சூழலில் திரும்பப் பெறப்படும்போது அதை 'காசோலைத் திரும்புதல்' (Bounced Cheque) என்கிறோம். இந்தியாவில் இது ஒரு கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. 1881-ஆம் ஆண்டின் மாற்றுச் சீட்டுச் சட்டத்தின் (Negotiable Instruments Act) 138-வது பிரிவு, காசோலை மோசடிகளைத் தடுக்கவும், வணிக நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும் கடுமையான விதிகளை வகுத்துள்ளது. வாருங்கள் அது குறித்து அறிந்துகொள்வோம்.

காசோலை திரும்புவதற்கான காரணங்கள்:

ஒரு காசோலை திரும்புவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இல்லாமை, கையொப்பம் மாறுபடுதல், தேதியில் பிழை அல்லது பணம் செலுத்துவதை நிறுத்தச் சொல்லி வாடிக்கையாளர் வங்கிக்கு உத்தரவிடுவது போன்றவை இதில் அடங்கும். இருப்பினும், சட்டப்பிரிவு 138-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனில், அந்த காசோலை ஒரு கடனைத் தீர்ப்பதற்காகவோ அல்லது சட்டப் பூர்வமான பொறுப்பை நிறைவேற்றுவதற்காகவோ வழங்கப்பட்டிருக்க வேண்டும். பரிசாக வழங்கப்பட்ட காசோலைகள் இந்தச் சட்டத்தின் கீழ் வராது.

சட்டப்பிரிவு 138 நிபந்தனைகள்:

பிரிவு 138-ன் கீழ் ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர சில முக்கிய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

1. RBI விதிமுறையின்படி, காசோலை வழங்கப்பட்ட 3 மாத காலத்திற்குள் வங்கியில் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

2. வங்கி அந்தக் காசோலையைத் திருப்பி அனுப்பியதற்கான 'Memo' வழங்கிய 30 நாட்களுக்குள், காசோலை வழங்கியவருக்கு ஒரு வழக்கறிஞர் மூலம் 'சட்டப்பூர்வ அறிவிப்பு' அனுப்பப்பட வேண்டும்.

3. அந்த அறிவிப்பைப் பெற்ற 15 நாட்களுக்குள் அவர் பணத்தைச் செலுத்தத் தவறினால் மட்டுமே, அடுத்த 30 நாட்களுக்குள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர முடியும்.

இதையும் படியுங்கள்:
கடன் இல்லாத வாழ்வே நிம்மதி: உங்கள் கடன்களைத் தீர்க்க 4 மேஜிக் சூத்திரங்கள்!
Cheque bounce legal consequences in focus

சிறைத்தண்டனை மற்றும் அபராதம்:

காசோலை மோசடி வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சட்டம் மிகக் கடுமையான தண்டனைகளை வழங்குகிறது. நீதிமன்றம் குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க அதிகாரம் கொண்டுள்ளது. மேலும், காசோலையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகையைப் போல இரண்டு மடங்கு (Double the amount) அபராதமாக விதிக்கப்படலாம். சில நேரங்களில் சிறைத்தண்டனை மற்றும் அபராதம் ஆகிய இரண்டுமே சேர்த்தும் வழங்கப்பட வாய்ப்புள்ளது. இது ஒரு 'பிணையில் வெளிவரக்கூடிய' (Bailable) குற்றம் என்றாலும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகத் தவறினால் பிணையில் வரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்படலாம்.

வழக்கு பல ஆண்டுகள் நீண்டு கொண்டே செல்வதைத் தவிர்க்க, 2018-ல் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது (பிரிவு 143A). இதன்படி, வழக்கு விசாரணையில் இருக்கும்போதே, காசோலை வழங்கியவர் அந்தத் தொகையில் 20 சதவீதத்தை இடைக்கால இழப்பீடாகப் புகார் அளித்தவருக்கு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிடலாம். ஒருவேளை குற்றம் சாட்டப்பட்டவர் இறுதியில் நிரபராதி எனத் தெரிந்தால், அந்தத் தொகை வட்டியுடன் திருப்பித் தரப்படும்.

இதையும் படியுங்கள்:
உங்களுக்குப் பின் உங்கள் பணம் யாருக்கு? - நாமினிதான் முடிவு செய்வார்!
Cheque bounce legal consequences in focus

நிறுவனங்கள் மீதான நடவடிக்கை:

ஒரு நிறுவனம் வழங்கிய காசோலை திரும்பினால், அந்த நிறுவனத்தின் பெயரில் வழக்குத் தொடரப்படுவதுடன், அந்த நேரத்தில் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குப் பொறுப்பான இயக்குநர்கள் மற்றும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தங்களுக்குத் தெரியாமல் இது நடந்தது என்றோ அல்லது அதைத் தடுக்கத் தகுந்த நடவடிக்கை எடுத்தோம் என்றோ நிரூபிக்காத வரை தண்டனைக்கு உள்ளாவார்கள்.

காசோலையைத் தவறாகப் பயன்படுத்துவது ஒருவரின் நற்பெயரைக் கெடுப்பதுடன், நிதி சார்ந்த எதிர்காலத்தையும் (CIBIL Score) பாதிக்கும் . எனவே, வங்கிக் கணக்கில் போதிய இருப்பு இருப்பதை உறுதி செய்த பின்பே காசோலைகளை வழங்குவது பாதுகாப்பானது.

logo
Kalki Online
kalkionline.com