

கடனில் மாட்டிக்கொண்டால், அதனை விட்டு வெளியேறுவதற்கு மானின் தீவிரம் வேண்டுமென்கிறார் அமெரிக்காவின் பிரபல நிதி மேலாண்மை நிபுணர் டேவ் ராம்சே (Dave Ramsey).
மானின் தீவிரம் (gazelle intensity):
கடன்களை அடைப்பதற்கு, எவ்வளவு அதிகம் சேமிக்க முடியுமோ சேமித்து எவ்வளவு சீக்கிரம் அடைக்க முடியுமோ அடைத்து முடிக்க முயலவேண்டும். இதனை டேவ் ராம்சே அவர்கள் gazzelle intensity (மானின் தீவிரம்) என்று கூறுகிறார்கள். தன்னை துரத்தும் சிங்கத்திடம் இருந்து தப்பிக்க ஒரு மான் எவ்வாறு அதிகபட்ச வேகத்தில் ஓடி தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்கிறதோ, அவ்வளவு தீவிரமாக கடனில் மாட்டிக்கொண்ட மனிதன் முயன்று தன் கடனிலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும்.
கடனில் மாட்டிக்கொண்ட பின் தப்பித்துக் கொள்வதற்கு 4 வழிமுறைகளைப் பார்ப்போம்.
கடன் பனிப்பந்து (debt snowball) முறை:
1. இந்த முறைப்படி கடன்களை அவற்றின் பாக்கியின்படி குறைந்த பாக்கி முதல் அதிக பாக்கி வரை வரிசைப்படுத்த வேண்டும். இரு கடன்களின் பாக்கி ஒன்றாக இருக்கும் பட்சத்தில், அதிக வட்டி விகிதம் உள்ள கடனை முதலில் வரிசைப்படுத்தி, குறைந்த வட்டி விகிதம் உள்ள கடனை இரண்டாவதாக வரிசைப்படுத்தலாம்.
2. வரிசையில் முதலில் உள்ள கடனைத் தவிர மற்றக் கடன்களுக்கு மாதாந்திர தவணையைச் செலுத்த வேண்டும். மீதமுள்ள பணத்தை முதல் கடனுக்குத் திருப்பவேண்டும். முதல் கடனை அடைப்பதில் அதிகபட்சத் தொகையைத் திருப்ப வேண்டும்.
3. முதல் கடனை அடைத்தபிறகு, படி இரண்டாவதில் கூறிய முறையை பயன்படுத்தி வரிசையில் மீதமுள்ள கடன்களை ஒவ்வொன்றாக அடைத்து முடிக்கவேண்டும். இவ்வாறு எல்லாக் கடன்களையும் அடைக்கவேண்டும்.
நிறை -
மனோதத்துவ ரீதியாக, மிகவும் சிறந்த முறை. சிறிய கடன்களை அடைத்து முடிக்கும்போது பெரிய கடன்களை அடைக்கும் உத்வேகம் ஏற்படுகிறது. இதனை அமெரிக்காவை சேர்ந்த பிரபல நிதி மேலாண்மை நிபுணரான டேவ் ராம்சே (Dave Ramsey) பரிந்துரைக்கிறார்.
குறை -
அதிக வட்டி உள்ள கடன்கள் பாக்கி அதிகமாக இருந்தால், அதிகமாக வட்டி செலுத்த நேரிடும்.
கடன் பனிச்சரிவு (debt avalanche) முறை:
1. இந்த முறைப்படி கடன்களை அவற்றின் வட்டி விகிதத்தின் படி அதிக வட்டி விகிதம் முதல் குறைந்த வட்டி விகிதம் வரை வரிசைப்படுத்த வேண்டும். இரு கடன்களின் வட்டி விகிதம் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், குறைந்த பாக்கி உள்ளதை முதலில் வரிசைப்படுத்தி, அதிக பாக்கி உள்ளதை இரண்டாவதாக வரிசைப்படுத்தலாம்.
2. வரிசையில் முதலில் உள்ள கடனைத் தவிர மற்றக் கடன்களுக்கு மாதாந்திர தவணையைச் செலுத்தவேண்டும். மீதமுள்ள பணத்தை முதல் கடனுக்குத் திருப்பவேண்டும். முதல் கடனை அடைப்பதில் அதிகபட்சத் தொகையைத் திருப்ப வேண்டும்.
3. முதல் கடனை அடைத்த பிறகு, படி இரண்டாவதில் கூறிய முறையைப் பயன்படுத்தி வரிசையில் மீதமுள்ள கடன்களை ஒவ்வொன்றாக அடைத்து முடிக்கவேண்டும். இவ்வாறு எல்லாக் கடன்களையும் அடைக்கவேண்டும்.
நிறை -
அதிக வட்டி விகிதம் உள்ள கடனை முதலில் அடைப்பதால், வட்டிக்காக செலவாகும் பணம் குறையும். கடன்கள் சீக்கிரமாக கட்டி முடிக்கப்படும்.
குறை -
அதிக வட்டி உள்ள கடன்கள் பாக்கி அதிகமாக இருந்தால், அடைப்பதற்கு காலம் அதிகமாகும். மனஉளைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு. மனோதத்துவ ரீதியாக நல்ல முறை அல்ல.
கடன் பனிப்பந்து மற்றும் கடன் பனிச்சரிவு கலந்த முறை (Hybrid);
1. இந்த முறைப்படி கடன்களை பனிப்பந்து முறை போல, அவற்றின் பாக்கியின்படி குறைந்த பாக்கி முதல் அதிக பாக்கி வரை வரிசைப்படுத்த வேண்டும். இரு கடன்களின் பாக்கி ஒன்றாக இருக்கும் பட்சத்தில், அதிக வட்டி விகிதம் உள்ளதை முதலில் வரிசைப்படுத்தி, குறைந்த வட்டி விகிதம் உள்ளதை இரண்டாவதாக வரிசைப்படுத்தலாம்.
2. வரிசையில் முதலில் உள்ள கடனைத் தவிர மற்றக் கடன்களுக்கு மாதாந்திர தவணையைச் செலுத்தவேண்டும். மீதமுள்ள பணத்தை முதல் கடனுக்குத் திருப்ப வேண்டும். முதல் கடனை அடைப்பதில் அதிகபட்சத் தொகையைத் திருப்ப வேண்டும்.
3. முதல் கடனை அடைத்தபிறகு, அல்லது முதல் சில கடன்களை அடைத்த பிறகு, பனிச்சரிவு முறை போல, கடன்களை வட்டி விகிதத்தின்படி வரிசைப்படுத்தி, வரிசையில் மீதமுள்ள கடன்களை ஒவ்வொன்றாக பனிச்சரிவு முறைப்படி அடைத்து முடிக்க வேண்டும். இவ்வாறு எல்லாக் கடன்களையும் அடைக்க வேண்டும்.
நிறை - இரண்டு முறைகளையும் பயன்படுத்தி, இரண்டின் பலன்களையும் பெறலாம்.
குறை - பனிப்பந்து முறையிலிருந்து, பனிச்சரிவு முறைக்கு சரியானபடி மாறவேண்டும். முன்கூட்டியே மாறினால், அதிக வட்டிக் கடனை அடைக்க காலமாகினால், மன உளைச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.
மன உளைச்சலை (annoying) சார்ந்த கடன் செலுத்தும் முறை:
1. இந்த முறைப்படி கடன்களை அவை கொடுக்கும் மன உளைச்சலின் படி அதிக மனஉளைச்சல் முதல் குறைந்த மன உளைச்சல் வரை வரிசைப்படுத்த வேண்டும். உதாரணமாக, கடன் அட்டைக் கடன் வசூலிக்கும் நிறுவனம் அதிக மன உளைச்சலைக் கொடுத்தால், அதற்கு முதல் இடம் கொடுக்கவேண்டும். இரு கடன்களின் மன உளைச்சல் ஒன்றாக இருக்கும் பட்சத்தில், குறைந்த பாக்கி உள்ளதை முதலில் வரிசைப் படுத்தி, அதிக பாக்கி உள்ளதை இரண்டாவதாக வரிசைப்படுத்தலாம்.
2. வரிசையில் முதலில் உள்ள கடனைத் தவிர மற்றக் கடன்களுக்கு மாதாந்திர தவணையைச் செலுத்த வேண்டும். மீதமுள்ள பணத்தை முதல் கடனுக்குத் திருப்பவேண்டும். முதல் கடனை அடைப்பதில் அதிகபட்சத் தொகையைத் திருப்ப வேண்டும்.
3. முதல் கடனை அடைத்தபிறகு, படி இரண்டாவதில் கூறிய முறையை பயன்படுத்தி வரிசையில் மீதமுள்ள கடன்களை ஒவ்வொன்றாக அடைத்து முடிக்க வேண்டும். இவ்வாறு எல்லாக் கடன்களையும் அடைக்கவேண்டும்.
நிறை - மன உளைச்சல் சார்ந்து செயல்படுவதால், மன நிம்மதியை அதிகரிக்க வல்லது.
குறை - மன உளைச்சல் உள்ள கடன் அதிகமாக இருந்தால், காலம் அதிகரிக்கும் போது, மனச் சோர்வு ஏற்பட வாய்ப்புண்டு.
கடன்களை அடைப்பதற்கு எந்த முறை நமக்கு ஒத்துவரும் என்று கண்டு, அதனைப் பயன்படுத்தி கடனை அடைக்கவேண்டும்.
கடன்களை அடைப்போம். கடன் இன்றி நிம்மதியாக வாழ்வோம். கடன் இல்லாத மனிதனே நிம்மதியான மனிதன்.