
வணிக நிதி முதலீடுகள் (Business Finance Investment) என்பது ஒரு நிறுவனம் தனது வணிகத்தை விரிவு படுத்தவும், லாபம் ஈட்டவும் அதனுடைய நிதி நிலைப்பாட்டை மேம்படுத்தவும் செய்யக்கூடிய நிதி சார்ந்த நடவடிக்கைகளாகும். இது அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், நிலைத்தன்மைக்கும், லாபம் ஈட்டவும் முக்கியமானது. வணிக நிதியும், முதலீடுகளும் வணிகத்தின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் முக்கியமானவை.
வணிக நிதி முதலீடுகள் என்பது ஒரு நிறுவனத்தின் நிதி ஆதாரங்களை பல வழிகளில் பயன்படுத்துவதாகும். இது அதன் எதிர்கால வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது. முதலீட்டில் பல வகைகள் உள்ளன.
a) பங்கு சந்தையில் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவது அல்லது விற்பனை செய்வது போன்ற முதலீடுகள்
b) தனியார் அல்லது அரசு நிறுவனங்களின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்வது.
c) புதிய இயந்திரங்கள், உபகரணங்கள் வாங்குவது, நிலம் போன்ற சொத்துக்கள் வாங்குவது போன்ற பெரிய அளவிலான முதலீடுகள் (capital expenditures).
d) புதிய திட்டங்களில் அதாவது புதிய தொழிற்சாலை அமைப்பது போன்றவற்றில் முதலீடு செய்வது.
e) பணியாளர்களின் திறனை மேம்படுத்துவதற்கு பயிற்சி அளிப்பது.
f) அன்றாட நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை நிர்வகிப்பது. அதாவது நிறுவனத்தின் அன்றாட செயல்பாடுகளுக்குத் தேவையான பணத்தை நிர்வகிப்பது (Working capital investments).
g) புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதற்கான முதலீடுகள் (Research and Development).
h) பிற நிறுவனங்களை வாங்குவது அல்லது அவற்றுடன் இணைவது (Acquisition investment).
i) புதிய வாடிக்கையாளர்களை ஈர்ப்பதற்காக விளம்பரம் செய்வதும் சந்தைப்படுத்துவதற்கும் செலவு செய்வது.
j) கிடைக்கும் லாபத்தை மீண்டும் வணிகத்தில் முதலீடு செய்வது.
வணிக நிதி முதலீடுகளின் முக்கியத்துவம்:
வணிக நிதியின்றி ஒரு நிறுவனம் செயல்படுவது கடினம். பல்வேறு நிதி ஆதாரங்களை நிர்வகிப்பதன் மூலம் தான் அதனுடைய இலக்கை அடைய முடியும். வணிக நிதி முதலீடுகள் மூலம் புதிய வாய்ப்புகளைப் பெறவும், புதிய உபகரணங்களை வாங்கவும், புதிய சந்தைகளுக்குள் நுழைவதற்கும், புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்கும் இந்த முதலீடுகள் உதவுகின்றன.
வணிக நிதி முதலீடுகள் ஒரு நிறுவனத்தினுடைய எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்வதுடன் நிதி ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகின்றன. இந்த முதலீடுகள் மூலம் புதிய தொழில் நுட்பங்களை பயன்படுத்த ஏதுவாகிறது. செயல்திறனை மேம்படுத்துவதன் மூலமும், செலவுகளை குறைப்பதன் மூலம் லாபத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் செயல்முறைகளில் முதலீடு செய்வது அந்த நிறுவனத்தை செயல்திறன் மிக்கதாக மாற்ற உதவும்.
கவனிக்க வேண்டியவை:
முதலீட்டு முடிவுகளை எடுக்கும் பொழுது அதில் உள்ள அபாயங்களை மதிப்பிடுவதும், முதலீட்டின் மொத்த செலவை கருத்தில் கொள்வதும் அவசியம். முக்கியமாக முதலீட்டின் கால அளவை தீர்மானிக்க வேண்டும். அத்துடன் முதலீட்டிற்கான நிதியை எவ்வாறு திரட்டுவது என்பதையும் கவனமாக திட்டமிட்டு தீர்மானிக்க வேண்டும்.