வாகனம், வீடு, விபத்து, கடும் நோய், பயணம் சார்ந்த காப்பீடுகள் பற்றித் தெரியுமா?

comprehensive-insurance-guide
comprehensive-insurance-guide
Updated on

திர்பாராத செலவுகளுக்குக் கடன் வாங்காமல் வரும் முன் காத்துக்கொள்வதற்கு, காப்பீடு அவசியம். அந்தக் காப்பீடுகளை நாம் நான்கு வகைகளாகப் பிரித்துக்கொள்ளலாம்.

1) அவசரகாலக் காப்பீடு அல்லது அவசர கால நிதி

2) ஆயுள் காப்பீடு

3) மருத்துவக் காப்பீடு

4) வாகனக் காப்பீடு, வீட்டுக் காப்பீடு, விபத்துக் காப்பீடு போன்ற இதரக் காப்பீடுகள்

இவற்றில் நான்காவதாக வரும் இதரக் காப்பீடுகளைப் பற்றிப் பார்ப்போம்.

இதரக் காப்பீடுகளை ஏன் வாங்க வேண்டும்?

வீடு மற்றும் வாகனம் இரண்டும்தான் ஒரு மனிதன் தன் வாழ்நாளில் செய்யும் மிகப்பெரிய செலவுகள். அவ்வாறு செலவு செய்து வாங்கிய பிறகு, அவற்றுக்கு ஏதேனும் பாதகம் நேர்ந்தால் அல்லது அவற்றால் பிறருக்கு ஏதேனும் பாதகம் நேர்ந்தால், அதிலிருந்து மீள்வதற்கு கடன் வாங்க நேரலாம். வீடுக் காப்பீடு மற்றும் வாகனக் காப்பீடு இத்தகைய சந்தர்ப்பங்களில் கடன் வாங்காமலிருக்க உதவும்.

ஒரு நபருக்கு விபத்து அல்லது கடும் நோய்வாய்ப்படுவது போன்றவை நேர்ந்தால், மருத்துவச் செலவுகளுக்கு மருத்துவக் காப்பீடு உதவுமே தவிர, அவற்றால் உடல் நலம் முடங்கினால் ஏற்படும் வருமான இழப்பு போன்றவற்றை சமாளிக்க மருத்துவக் காப்பீடு உதவாது. எனவே, கடன் வாங்க நேரலாம். விபத்துக் காப்பீடு மற்றும் கடும்நோய்க் காப்பீடு இத்தகைய சந்தர்ப்பங்களில் கடன் வாங்காமலிருக்க உதவும்.

வெளிநாட்டுப் பயணத்தில் நோய்வாய்ப்படுவது, விமானத்தைத் தவறவிடுவது போன்றவை நேர்ந்தால், அவற்றைச் சமாளிக்க கடன் வாங்க நேரலாம். பயணக்காப்பீடு இத்தகைய சந்தர்ப்பங்களில் கடன் வாங்காமலிருக்க உதவும்.

இதரக் காப்பீடுகளை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும்?

வாகனக் காப்பீடு (vehicle insurance) - நாம் வைத்திருக்கும் வாகனம் சார்ந்த பெரிய செலவுகளைக் கடன் வாங்காமல் சமாளிக்க வாகனக் காப்பீடு உதவும்.

வாகனக் காப்பீடில் மூன்று வகைகள் உள்ளன.

1. மூன்றாம் நபர் வாகனக் காப்பீடு (Third Party Insurance) - விபத்தில் நமது சொந்த வாகனத்தால் மூன்றாம் நபர்களுக்கு ஏற்படும் பண செலவுகளுக்குப் பணம் கொடுத்து உதவுவது. இது அரசாங்கத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2. சொந்த பாதிப்புக் காப்பீடு (Own Damage Insurance) - விபத்தில் சொந்த வாகனம் சார்ந்த பணச் செலவுகளுக்குப் பணம் கொடுத்து உதவுவது.

3. முழுமையான வாகனக் காப்பீடு (Comprehensive insurance) - இது மேலேயுள்ள இரண்டும் சேர்ந்தது. மூன்றாவது நபர் வாகனக் காப்பீடு மட்டுமன்றி, முழுமையான வாகனக்காப்பீடு வைத்திருப்பது அவசியம். அதன் மூலம் விபத்தில் மூன்றாம் நபருக்கான செலவுகளுக்கு மட்டுமன்றி, நமக்கும் வாகனம் சார்ந்த செலவுகளுக்கும் கடன் வாங்காமல் கையாள உதவும். இந்த வாகனக் காப்பீடு சிற்றுந்து (car), ஈருருளி (motor bike) என எல்லா வாகனங்களுக்கும் எடுத்து வைத்துக்கொள்வது அவசியம்.

வீடுக் காப்பீடு (Home Insurance) - வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சார்ந்த அசம்பாவிதங்கள், திருட்டு, கலவரம் போன்ற மனிதன் சார்ந்த அசம்பாவிதங்கள் போன்றவற்றால் வீட்டில் ஏற்படும் பண இழப்புகளுக்கு, பணம் கொடுத்து உதவுவது. இது வீட்டின் கட்டுமானம் (structure) மற்றும் வீட்டில் உள்ள பொருட்களுக்கு (contents) காப்பீடு வழங்குகிறது. வீடு இருக்கும் நிலத்திற்கு காப்பீடு கிடையாது. இதில் இரண்டு வகைகள் உள்ளன.

இதையும் படியுங்கள்:
பைக் பிரியர்களுக்கு குட் நியூஸ்: ‘Bajaj Dominar 400’-ல் அதிரடி மாற்றங்கள்!
comprehensive-insurance-guide

1. சந்தை விலைக் காப்பீடு (market value) - வீட்டின் சந்தை மதிப்பைப் பணமாக வழங்கும். இதில் தேய்மானம் கணக்கில் கொள்ளப்படும்.

2. மீண்டும் அமர்த்தல் காப்பீடு (Reinstatement value) - வீட்டை மறுபடி கட்டுவதற்குப் பணம் கொடுத்து உதவும். இதில் தேய்மானம் கணக்கில் கொள்ளப்படாது.

இவற்றில் சந்தை விலைக் காப்பீடு விலை அதிகம். மீண்டும் அமர்த்தல் காப்பீடு விலை குறைவு. மீண்டும் அமர்த்தல் காப்பீடு வாங்கினால் போதும். அதன் மூலம் வீட்டினைக் கட்டுவதற்கு போதிய பணம் கிடைத்து கடன் வாங்காமல் மறுபடி வீடு கட்ட முடியும்.

விபத்துக் காப்பீடு (accident insurance) - ஒரு நபருக்கு எதிர்பாராத திடீர் விபத்துகளால் உயிரிழப்பு, தற்காலிகமாக உடல்நலம் முடக்கப்படுவது, ஊனம் அடைவது போன்ற சமயங்களில் விபத்துக் காப்பீடு பணம் கொடுத்து உதவும். ‌இதன் மூலம் விபத்தினால் குடும்பம் பாதிக்கப்படும் பொழுது, கடன் வாங்காமல் குடும்பத்தைச் சமாளிக்க முடியும்.

ஆனால், விபத்தினால் ஏற்படும் தற்காலிக உடல்நலம் முடக்கம் காரணமாக, வேலைக்குச் செல்வதில் பிரச்னைகள் ஏற்பட்டால், வாரா வாரம் அல்லது மாதா மாதம் பணம் கொடுத்து உதவுவது, உடலில் ஏற்படும் ஊனம் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகள் போன்றவற்றிற்கு பணம் கொடுத்து உதவுவது போன்றவற்றில் மருத்துவக் காப்பீடு உதவாது. ஆனால், அத்தகைய சமயங்களில் விபத்துக் காப்பீடு உதவும். விபத்துக் காப்பீடுகளுக்குக் காப்பீடுத் தவணை மிகவும் குறைவு. ஏனென்றால், விபத்துகள் நடப்பது மிகவும் அரிது. இதன் மூலம் விபத்துகளால் ஏற்படும் பண நெருக்கடிகளைக் கடன் வாங்காமல் சமாளிக்க முடியும்.

கடுமையான நோய்க் காப்பீடு (Critical Illness Insurance)- கடுமையான நோய்களான புற்றுநோய், இதய நோய், பக்கவாதம் போன்றவற்றால் ஒரு நபர் பாதிக்கப்பட்டால், கடுமையான நோய்க் காப்பீடு பணம் கொடுத்து உதவும். அதன் மூலம் அந்தக் கடுமையான நோய் சார்ந்த மருத்துவக் காப்பீடு தாண்டிய செலவுகளுக்குக் கடன் வாங்காமல் சமாளிக்க முடியும். கடுமையான நோயினால் அலுவலகம் செல்வது பாதிக்கப்பட்டால் ஏற்படும் பண இழப்புகளுக்கு ரொக்கத் தொகையாகவோ அல்லது வாரா வாரம் மாதா மாதம் தொகை என்றோ பணம் கொடுத்து உதவும்.‌ இதன் மூலம் கடுமையான நோய்களுக்குக் கடன் வாங்காமல் சமாளிக்க முடியும்.

இதையும் படியுங்கள்:
ரூபாய் நோட்டில் இருக்கும் இந்த ரகசிய கோடுகள் எதற்காகத் தெரியுமா?
comprehensive-insurance-guide

பயணக் காப்பீடு (Travel Insurance) - வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும்போது ஏற்படும் திடீர் மருத்துவச் செலவுகள், பயணப் பெட்டியைத் தொலைத்தல், விமானத்தைத் தவற விடுதல், விமானம் தாமதமாதல் போன்ற எதிர்பாராத பெரிய செலவுகளுக்குப் பயணக் காப்பீடு பணம் கொடுத்து உதவும். அந்த சந்தர்ப்பங்களைக் கடன் வாங்காமல் சமாளிக்க முடியும்.

இதர காப்பீடுகளை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

இதரக் காப்பீடுகள் எவ்வளவு அதிகம் எடுத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு எடுத்துக்கொள்வது நலம். பொதுவாக இத்தகைய காப்பீடுகளில் தவணைத்தொகை குறைவு. ஏனென்றால், இவை அரிதாக நடக்கும் நிகழ்வுகள்.

இதரக் காப்பீடுகளை எங்கு வாங்க வேண்டும்?

இதரக் காப்பீடுகளை இணையத்தில் ஒப்பிட்டு, எந்த நிறுவனம் சகாய விலையில் வழங்குகிறது என்று பார்த்து வாங்க வேண்டும். காப்பீடுகளை ஒரே நிறுவனத்தில் வாங்கி கொண்டால், காப்பீடு கோரும் போது எளிதாக இருக்கும்.

இதரக் காப்பீடுகளை எவ்வாறு கோர வேண்டும்?

ஒவ்வொரு காப்பீட்டிற்கும் கோருவதற்கென்று தனித்தனியான விதிமுறைகள் உள்ளன. அதன்படி அந்தந்த நிறுவனத்தில் காப்பீடுகளை கோரவேண்டும்.

இவற்றைத் தவிர, சொந்தமாக கடை வைத்திருக்கும் நபர்கள் கடைக்கு காப்பீடு (Shop owner insurance) எடுத்துக்கொள்ள வேண்டும். விவசாயம் செய்பவர்கள் அறுவடை சார்ந்து காப்பீடு (Crop insurance) எடுத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவையான காப்பீடுகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கடன் வாங்குவதைத் தவிர்த்துக்கொள்ளலாம்.

காப்பீடுகளின் மூலம், கடன் வாங்குவதைத் தவிர்த்துக் கொள்வோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com