
பொருளாதார உலகில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய கிரெடிட் கார்டுகளை வாடிக்கையாளர்கள் பலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். கிரெடிட் கார்டு பில் தொகையை சரியாக செலுத்தி விட்டால், நிதி நெருக்கடியில் இருந்து தப்பித்து விடலாம். ஆனால் பில் தொகையை செலுத்தத் தாமதித்தால், அதற்கான அபராதம் அதிகம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்படியான சூழலில் கிரெடிட் கார்டு தேவையே இல்லாத ஒருவர், இதனை வாங்கி வைத்து விட்டு பயன்படுத்தாவிட்டால் என்னவாகும் என்பதை இப்போது பார்ப்போம்.
வங்கிகளின் சார்பில் அடிக்கடி கிரெடிட் கார்டு வேண்டுமா என பல அழைப்புகள் வாடிக்கையாளர்களுக்கு வருகின்றன. இதனை நாம் எப்படி நிராகரித்தாலும், ஏதேனும் ஒரு சூழலில் நம்மை சரி என சொல்ல வைத்து கிரெடிட் கார்டை வாங்க வைத்து விடுகின்றனர் வங்கி ஊழியர்கள். வாடிக்கையாளரும் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினால் தானே பில் தொகையை செலுத்த வேண்டும்; பயன்படுத்தாமல் அப்படியே வைத்திருந்தால் பிரச்சினை இருக்காது அல்லவா என்று கிரெடிட் கார்டை வாங்குகிறார்கள்.
வங்கி ஊழியர்களின் கட்டாயத்தால் தேவையே இன்றி கிரெடிட் கார்டை வாங்குவது கூட நமக்கு இழப்பு தான் என்பது தொடக்கத்தில் யாருக்கும் தெரிவதில்லை. கிரெடிட் கார்டை வாங்கி அப்படியே வைத்திருந்தால் கூட அபராதம் செலுத்த வேண்டும். கிரெடிட் கார்டை வாங்கி 6 மாதத்திற்குள் பயன்படுத்தி விட வேண்டும். இல்லையெனில் அது செயலற்றதாக மாறி விடும். இந்நிலையில் செயலற்ற கிரெடிட் கார்டுகளை பயன்படுத்த நினைத்தால், நேரடியாக வங்கிக்கு சென்று KYC விவரங்களை புதுப்பிக்க வேண்டும். இல்லையெனில் அபராதத்தை செலுத்தி விட்டு, கிரெடிட் கார்டு கணக்கை முடித்துக் கொள்ளுங்கள்.
நான் தான் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தவே இல்லையே, பிறகு ஏன் அபராதம் செலுத்த வேண்டும் என நீங்கள் கேட்கலாம். ஆனால் இன்றைய பொருளாதார உலகில் அனைத்திற்குமே கட்டணம் உண்டு. பொதுவாக உங்களுக்கான கிரெடிட் கார்டை செயலாக்கம் செய்ததற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. கார்டுக்கான கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தாத நிலையில், அதனை செயல்படுத்தியதற்கான தொகையை அபராதம் என்ற பெயரில் வங்கிகள் நம்மிடம் இருந்து வசூலித்துக் கொள்ளும்.
இந்த அபராதத்தை செலுத்தத் தவறினால், மேலும் மேலும் அபராதத் தொகை கூடும் என்பதை மறக்க வேண்டாம். ஏனெனில் கிரெடிட் கார்டைப் பொறுத்தவரை அபராதம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். இந்த அபராதம் தொடர்பான தகவல்கள் நம்முடைய இ-மெயில் முகவரிக்கு வங்கிகள் அனுப்பி விடும். இது நம்முடைய சிபில் ஸ்கோரையும் பாதிக்கும் என்பது கூடுதல் பாதிப்பு. ஆகையால் பயன்படுத்தாத கிரெடிட் கார்டுகளை வைத்திருந்தால் உடனடியாக அதனை கேன்சல் செய்து விடுங்கள்.
ஒருவேளை கிரெடிட் கார்டைப் பயன்படுத்த நினைத்தால், குறைந்தபட்சம் மாதத்திற்கு ஒருமுறையாவது பயன்படுத்துவது நல்லது. உதாரணத்திற்கு கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி பெட்ரோல் போடுவது மற்றும் காய்கறிகளை வாங்குவது என உபயோகமாக பயன்படுத்தலாம். அதோடு மாதந்தோறும் பில் தொகையை காலம் தாழ்த்தாமல் செலுத்துவதிலும் கொஞ்சம் கவனமாக இருங்கள். கிரெடிட் கார்டே வேண்டாம் என நினைத்தால், அது தொடர்பான அழைப்புகள் ஏதேனும் வந்தால், எடுத்தவுடனேயே ஆர்வமில்லை வேண்டாம் என நிராகரித்து விடுங்கள்.