
நாம் வங்கி சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் போது, அது நம்முடைய சிபில் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், வங்கியல்லாத செயல்பாடுகளும் சிபில் ஸ்கோரில் தாக்கத்தை ஏற்படுத்தும் என சிலர் சொல்கின்றனர். அதாவது கிரெடிட் கார்டை வாங்கவில்லை என்றாலும் அது நம்முடைய சிபில் ஸ்கோரை பாதிக்குமா என்பதை அலசுகிறது இந்தப் பதிவு.
வங்கிக் கடன் மற்றும் கிரெடிட் கார்டு பயன்பாடு உள்ளிட்டவை நமது சிபில் ஸ்கோரில் நேர் மற்றும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். ஏற்கனவே கடன் வாங்கிய ஒருவர், அந்தக் கடனை முறையாக செலுத்தவில்லை என்றால் அது சிபில் ஸ்கோரைக் குறைத்து விடும். சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால், அடுத்த முறை கடன் வாங்கும் போது வங்கிகள் அதிக வட்டியை விதிக்கும். ஆனால் முதல்முறை கடன் வாங்குபவருக்கும் குறைவான சிபில் ஸ்கோரைக் காரணம் காட்டி வட்டியை அதிகரிப்பது எவ்வகையில் நியாயம் என சில வாடிக்கையாளர்கள் குமுறுகின்றனர்.
உதாரணத்திற்கு, இதற்கு முன்பு கடனே வாங்காத ஒருவருக்கு, குறைவான சிபில் ஸ்கோரை காரணம் காட்டி வட்டியை உயர்த்தியுள்ளது ஒரு வங்கி. இது ஏன் எனக் கேட்டதற்கு, நீங்கள் கிரெடிட் கார்டு வாங்கவில்லை அதனால் தான் சிபில் ஸ்கோர் குறைந்தது என்று வாடிக்கையாளரிடம் சொல்கின்றனர் வங்கி ஊழியர்கள். வங்கிகளின் இந்த செயல்முறை எதைக் குறிப்பிடுகிறது என்றே தெரியவில்லை. வட்டியை உயர்த்தும் எண்ணமா அல்லது கிரெடிட் கார்டை விற்கும் எண்ணமா? வங்கிகளின் முக்கிய நோக்கமே இலாபம் மட்டும் தான் என்பதை மட்டும் நம்மால் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
கடனை வாங்கும் போதே எவ்வளவு வட்டி என்பதை வாடிக்கையாளர்கள் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும். கடன் வாங்கிய பின்பு வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தினால், நிச்சயமாக அது தவறான நடைமுறை. இதனை அப்படியே விட்டுவிடாமல் வங்கியின் குறைதீர்க்கும் அலுவலரின் கவனத்திற்கு வாடிக்கையாளர்கள் கொண்டு செல்ல வேண்டும்.
வாடிக்கையாளர்களின் குறைகளைத் தீர்ப்பதற்காகவே 2006 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி, வங்கிக் குறைதீர்ப்பாளர் திட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி வங்கியில் கிடைக்கும் படிவத்தை பூர்த்தி செய்து வங்கிக் குறைதீர்க்கும் அலுவலரிடம் கொடுக்கலாம். அதோடு https://cms.rbi.org.in/ என்ற இணையதளத்திலும், crpc@rbi.org.in என்ற இமெயில் முகவரியிலும் புகார் அளிக்கலாம்.
வங்கிகளிடம் நேரடியாக எழுத்துப்பூர்வமாக புகார் அளித்து, 30 நாட்களைக் கடந்தும் தீர்க்கப்படவில்லை என்றால் மட்டுமே வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை குறைதீர்க்கும் அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். இதில் வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை இலவசமாக பதிவு செய்ய முடியும்.
பொதுவாக கிரெடிட் கார்டு பில்லை முறையாக கட்டவில்லை என்றால் தான் சிபில் ஸ்கோர் குறையும். ஆனால், கிரெடிட் வாங்கவில்லை அதனால் உங்கள் சிபில் ஸ்கோர் குறைந்து விட்டது என்பதை யாராலும் ஏற்றுக் கொள்ளவே முடியாது.
இருப்பினும் கடன் வாங்குவதற்கு முன்பு அனைவரும் தங்களுடைய சிபில் ஸ்கோரை சரி பார்த்துக் கொள்வது நல்லது. இன்றைய பொருளாதார உலகில் சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருப்பது முக்கியம் என்பதால், வங்கி சார்ந்த நடவடிக்கைகளில் கொஞ்சம் கவனமுடன் செயல்படுங்கள்.