கடன்களில் மிகப்பெரிய அபாயம்: கடன் அட்டை எனும் சிலந்தி வலை!

credit-card-dangers
credit-card-dangers
Updated on

டன்களில் மிகவும் அபாயகரமானது கடன் அட்டைக் கடன். கடன் என்ற ஒன்று ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டது. பணம் கி.மு 300 இல் வந்தது. ஆனால், கடன் அட்டை என்பது கடந்த நூற்றாண்டில்தான் வந்தது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கடன் அட்டை என்ற ஒன்று இல்லாமல் மனிதன் வாழ்ந்து வந்தான் என்கிறபோது, அது அவசியமில்லாத கடன் வகை என்று நமக்கு வரலாற்றின் மூலம் தெரிய வருகிறது.

கடன் அட்டை என்பது அபாயகரமான கடன் ஏன் என்பதற்கு 8 காரணங்களைப் பார்ப்போம்.

1. கடன் அட்டை சுழற்சி முறை கடன் என்பதால் கடன் தொடர்கிறது - மற்ற கடன்களைப்போல் ஒருமுறை வாங்கி, செலுத்தினால் வெளியே வருகின்ற வகையில் கடன் அட்டைக் கடன் வராது. ஏனென்றால், அது சுழற்சி முறைக் கடன் (Revolving Debt). மாதாந்திர கடன் பாக்கி செலுத்திவிட்டாலும் கூட, நாம் மாதா மாதம் கடன் என்கிற அபாயகரமான சுழற்சியில் தொடர்கிறோம்.

2. கடன் அட்டைகளின் வட்டி விகிதம் மிகவும் அதிகம் - கடன் அட்டைகளின் சராசரி வட்டி விகிதம் 20% க்கு மேல் உள்ளது. எனவே, கடனில் மாட்டிக்கொண்டால், குறுகிய காலத்தில் கடன் அட்டை கடனானது வெகு வேகமாக வளரும். கடன் அட்டை கடனில் வட்டியானது தினந்தோறும் கணக்கிடப்படுகிறது. இது கூட்டு வட்டியானது எதிர்மறையில் செயல்படுவதைப் போன்றது. எனவே, கடன் அட்டைக் கடன் என்ற குழியில் விழுந்தால், குழியானது வெகு வேகமாக ஆழம் அதிகரித்துக் கொண்டே செல்லும். வெளியேறுவது கடினம். அதற்கு பெரிய ஏணி தேவைப்படும்.

3. மனோதத்துவ ரீதியாக அதிகமாக செலவு செய்ய வாய்ப்பு உண்டு- பற்று அட்டை அல்லது பணமாகச் செலவு செய்யும்பொழுது நமது பணமானது வங்கிக் கணக்கில் இருந்து செல்வதால் பார்த்து பார்த்து செலவு செய்கிறோம். வங்கியில் உள்ள பணத்தைத்தாண்டி நம்மால் செலவு செய்ய முடியாது. கடனில் மாட்டிக்கொள்ள முடியாது. ஆனால், கடன் அட்டையில் செலவழிக்கும் பொழுது நமது வங்கிக் கணக்கில் இருந்து நேரடியாக பணம் செலவாகாத காரணத்தினால் மக்கள் அதிகமாக பணம் செலவழிப்பதாக மனோதத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
மிரட்டலான வசதிகளுடன் களமிறங்கிய புதிய 'வைபர்' மின்சார சைக்கிள்!
credit-card-dangers

4. பல்வேறு கட்டணங்கள் சார்ந்த செலவுகளில் மாட்டிக் கொள்ள வாய்ப்புண்டு - கடன் அட்டையில் கடனை தாமதமாக செலுத்தினால் அபராதத்தொகை (Late Payment Fee) உண்டு. வருடாந்திர கட்டணம் (Annual Fee) உண்டு. பணப்பொறி வாயிலாக பணத்தை எடுத்தால் (Cash withdrawal) எடுத்த நொடியில் இருந்து வட்டி கணக்கெடுக்கப்படும். கடன் அட்டை பல்வேறு வகையில் நமது செலவுகளை அதிகரிக்க வாய்ப்புண்டு.

5. மன உளைச்சல்களை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு- கடனில் ஒரு வேளை சிக்கிக் கொண்டுவிட்டால் கடனில் இருந்து வெளியேறும் வரை அதிக மன உளைச்சலை ஏற்படுத்த வல்லது. ஏனென்றால், கடனை அடைக்காத பட்சத்தில் தினந்தோறும் வட்டி கணக்கிடப்பட்டு, கடன் தொடர்ந்து அதிகரிக்கும். குறைந்தபட்ச பாக்கி (Minimum Due) தொகையைச் செலுத்தினால், மீதமுள்ள பாக்கித் தொகைக்கு வட்டி கணக்கிடப்பட்டு, கடன் தொடர்ந்து அதிகரிக்கும்.‌ கடனால் ஏற்படும் மன உளைச்சல், குடும்பத்தின் நிம்மதியை குறைக்க வல்லது.

6. கடன் அட்டை சார்ந்த பரிசுகள் (Reward) அதிகமாக செலவழிக்க தூண்ட வாய்ப்பு உண்டு - கடன் அட்டை வாயிலான செலவுகள் சார்ந்த பரிசுகளின் காரணமாக அதிகமாக பணத்தைச் செலவழிக்க வாய்ப்பு உண்டு என்று அமெரிக்காவின் எம்ஐடி (MIT) கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சி கூறுகிறது. கடன் அட்டையில் உள்ள பரிசுகள் பணத்தைச் சேமிக்க உதவும் என்று சிலர் நினைக்கலாம். அமெரிக்காவின் பிரபல நிதி மேலாண்மை நிபுணர் டேவ் ராம்சே (Dave Ramsey) அவர்கள் பின்வருமாறு இதனைப் பற்றி கூறுகிறார்கள் - கடன் அட்டையால் பணக்காரனானவர் எவரும் கிடையாது. ஆனால் கடன் அட்டையால் ஓட்டாண்டி ஆனவர்கள் அதிகம் பேர் உண்டு. எனவே, இத்தகைய பரிசுகளுக்காக கடன் அட்டை என்கிற அபாயகரமான கடனில் மாட்டிக்கொள்ளக்கூடாது.

7. வாழ்க்கைக் குறிக்கோள்களுக்கான முதலீடுகளை கடன் அட்டைக் கடன் பாதிக்க வாய்ப்புண்டு- கடன் அட்டைக் கடனில் மாட்டிக் கொண்டால், அதனை அடைப்பதற்கு வெகு காலமாகும். ஆகையால், அதுவரை வாழ்க்கையின் மற்ற அங்கங்களுக்கான நிதிக் குறிக்கோள்களுக்கு போதிய பணத்தை ஒதுக்க முடியாது. அதனால் ஓய்வு காலம், குழந்தைகளின் மேல்படிப்பு போன்ற எதிர்காலத்தின் நிதி குறிக்கோள்கள் அடைவதற்கு பங்கம் ஏற்படலாம்.

8. கடினமான காலங்களை இன்னும் கடினமாக்க வல்லது- கடினமான காலங்களில் கடன் இல்லாவிட்டால் இருக்கும் பணத்தைக் கொண்டு வாழ்க்கை நடத்துவது கடினம். அப்போது கடன் அட்டை இருந்தால் கடனானது மிகவும் வேகமாக வளர்ந்து கொண்டே இருக்கும். கடன் இல்லாத பட்சத்தில், நாம் யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம். கடன் அட்டை கடனானது கடின காலத்தை இன்னும் கடினமாக்கும்.

இதையும் படியுங்கள்:
கடன் சுமையை குறைக்கணுமா? 'ரீ-பைனான்ஸ்' பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!
credit-card-dangers

கடன் அட்டைக்கு பதிலாக பற்று அட்டையைப் பயன்படுத்துவோம். கடன் அட்டைக் கொடுக்கும் எளிதாக பொருட்களை வாங்கும் சௌகரியத்தை கடன் அட்டையின் எந்த ஒரு தொந்தரவும் இன்றி பற்று அட்டைகள் வழங்குகின்றன. அதே சமயத்தில், பற்று அட்டைகள் நம்மை ஒரு போதும் கடனில் சிக்க வைக்காது.

கடனை எந்த வடிவத்திலும் தவிர்ப்போம். கடன் அட்டை என்கிற அபாயகரமான கடனைத் தவிர்ப்போம்.

கடனில்லாத மனிதனே நிம்மதியான மனிதன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com