
பெரும்பாலான மக்கள் தங்களது மாதச் செலவுகளுக்கு, மாதச் சம்பளத்தை எதிர்நோக்கியுள்ளனர். அடுத்த மாதத்தின் சம்பளம் வராவிட்டால், அடுத்த மாதத்தைக் கடப்பது கடினம் என்ற அளவிற்கு அவர்கள் மாத சம்பளத்தை நம்பி உள்ளனர். இதனை ஆங்கிலத்தில் 'paycheck to paycheck life' அதாவது மாதச்சம்பளத்திலிருந்து மாதச்சம்பளம் வரையிலான வாழ்க்கை என்று குறிப்பிடுவர்.
ஏப்ரல் 2024 இல் அமெரிக்காவின் சர்வே மங்கி மற்றும் சிஎன்பிசி இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் 65% மக்கள் இத்தகைய மாதச்சம்பளத்திலிருந்து மாதச்சம்பளம் வரையிலான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக கண்டறிப்பட்டது.
இது கடந்த ஆண்டை விட 7% அதிகம். ஜிப்பியா என்ற மற்றொரு இணையதளம் செப்டம்பர் 2022 இல் நடத்திய கருத்துக்கணிப்பில், இந்த சதவீதம் 63% ஆக இருந்தது. மேலும், இத்தகைய மக்களில் 40% மக்கள் வருடாவருடம் 1 இலட்சம் அமெரிக்க டாலர்களைச் சம்பளமாக பெற்றுவருவது, நமக்கு அதிர்ச்சியைக் கொடுக்கிறது. அதிக சம்பளம் பெறும் நபர்கள், சொகுசு வாழ்க்கையினால், இத்தகைய 'மாதச்சம்பளத்திலிருந்து மாதச்சம்பளம் வரை' என்ற வாழ்க்கை சுழலில் சிக்கியுள்ளனர்.
*************************
இதனைக் குறித்த ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்.
அது ஒரு மழைக்காலம். குளிரும் வாட்டி எடுத்தது. மழை பெய்து கொண்டிருந்தது.
வீதியில் இருந்த நாய் மழையில் நனைந்து கொண்டிருந்தது. மேலும், குளிரின் காரணமாக நடுங்கி கொண்டிருந்தது. ஒதுங்குவதற்கு சரியான இடம் இல்லை. உடனே நாய் சிந்திக்கத் தொடங்கியது.
தனக்கு மட்டும் இருப்பதற்கு ஒரு இடம் இருந்தால் வாழ்க்கை எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நாய் சிந்தித்தது. ஆனால், அது மழைக்காலம். அப்பொழுது அத்தகைய வீட்டினை அமைத்துக் கொள்ள முடியாது. எனவே, வெயில் காலம் வரட்டும் என்று நினைத்தது.
வெயில் காலமும் வந்தது. அப்பொழுது குளிர் இல்லை. மழையும் இல்லை. வெப்பம் மட்டுமே இருந்தது. அந்த வெப்பம் நாய்க்கு போதுமானதாக இருந்தது. தனக்கு ஒரு வீடு வேண்டும் என்ற நினைப்பு அப்போது நாய்க்கு போய்விட்டது. அந்த வீதியிலேயே சொகுசாக படுத்துக் கிடந்தது. காலம் மாறிய பொழுது நாயினுடைய நினைப்பும் மாறிவிட்டது.
இந்தக் கதையில் நாய் தான் மழைக்காலத்தில் பட்ட துன்பத்தினை வெயில் காலத்தில் மறந்து விட்டது. தனக்கு ஒரு வீடு இருந்தால் நன்றாக இருக்கும் என்ற மழைக்கால நினைப்பை, வெயில் காலத்தில் செயல்படுத்த தவறிவிட்டது. மறுபடியும் மழைக்காலம் வரும் பொழுது நாய்க்கு மறுபடியும் வீட்டின் நினைப்பு வரும்.
***************
மழைக்காலத்தில் திண்டாடிய அந்த நாயைப் போலவே சில மனிதர்களும் மாதச் சம்பளத்தை செலவழித்து விட்டு, அந்த மாதத்தைக் கடப்பதற்கு திண்டாடுகின்றனர். திண்டாட்டத்தின் போது, நாய் வெயில்காலத்தில் வீடு கட்டப்போவதை எண்ணியவாறே, அடுத்த மாதம் சம்பளம் வரும்போது, சிக்கனமாக வாழ்ந்து சேமிப்பை உருவாக்கிக் கொள்வோம் என்று எண்ணுகின்றனர். ஆனால், அடுத்த மாதம் சம்பளம் வந்த பிறகு, மறுபடியும் அதே மாதிரி ஊதாரித்தனமாக வாழ்க்கை நடத்துகின்றனர். மறுபடியும் அந்த மாதத்தைக் கடத்துவதற்கு திண்டாடுகின்றனர். இந்த அபாயகரமான சுழற்சியானது மாதா மாதம் தொடர்கிறது. ஒரு மாதச்சம்பளத்தில் இருந்து அடுத்த மாதச்சம்பளம் வரை என்ற அபாயகரமான சுழற்சியில் மாதா மாதம் திண்டாடுகின்றனர்.
சம்பளம் வரும்போது அதனைத் திட்டமிட்டு சேமித்து, முதலீட்டிற்கு ஒதுக்கிப் பணத்தினைப் பெருக்கும் பொழுது அடுத்த மாதத்தின் செலவுகளை எளிதாகக் கையாள முடியும். அடுத்த மாதம் மட்டுமின்றி, எதிர்காலத்தில் வெவ்வேறு குறிக்கோள்களுக்கான செலவுகளையும் எளிதாக கையாள முடியும். மாதம் வரவு செலவு கணக்கு வைத்து, பணம் எவ்வாறு செலவாகிறது என்று கணக்கிட்டு, நிதி திட்டமிடல் செய்ய வேண்டும். நிதி திட்டமிடலுக்கு ஏற்றவாறு பணத்தைக் கட்டுக்குள் செலவழிக்க வேண்டும். பணத்தை முதலீட்டிற்கு ஒதுக்க வேண்டும். இவ்வாறு சேமிப்பு மற்றும் முதலீட்டின் மூலம் தான் மாதச்சம்பளம் முதல் மாதச்சம்பளம் வரை என்ற அபாயகரமான சுழற்சியில் இருந்து மனிதர்கள் விடுபட முடியும்.