
ஒருவர் நிதி நெருக்கடியில் இருக்கும் பொழுது, சரியான நிதி ஆலோசகரை அணுக வேண்டும். அதற்கு மாறாக பணத்தை மிச்சம் பிடிக்க, வருவோர் போவோரிடமெல்லாம் நிதி ஆலோசனை கேட்டால், அவரது நிதி நெருக்கடிப் பிரச்சனை பெரிதாகி விடலாம்.
இதனைக் குறித்த ஒரு ஈசாப் கதையைப் பார்ப்போம்:
வழிப்போக்கன் ஒருவன் நடந்து கொண்டிருந்தபோது அவனை ஒரு நாய் கடித்து விட்டது. வலியில் துடித்துப் போனான்.
உடனே ஒரு மருத்துவரை கலந்தாலோசிக்க எண்ணினான். மருத்துவரின் விலாசம் கேட்டான். அப்பொழுது அந்த வழி வந்த இரண்டாவது வழிப்போக்கன் தானே அவனுக்கு ஒரு ஆலோசனையைக் கூறினான்.
"நீ எதற்காக மருத்துவருக்கு பணத்தை வீணாக்குகிறாய். ஒரு ரொட்டியை வாங்கு. அதனை துண்டுகளாக்கி, அந்த துண்டுகளைக் கொண்டு கடிவாயில் வழியும் ரத்தத்தை துடை. பின்னர், அந்த ரொட்டி துண்டுகளை உன்னைக் கடித்த நாய்க்குப் போடு. இப்பொழுது உன்னுடைய நாய் கடி விஷம் இறங்கிவிடும்" என்றான் அந்த இரண்டாவது வழிப்போக்கன்.
இது மிகவும் செலவில்லாத வழியாக இருக்கிறதே என்று எண்ணினான் நாய் கடிபட்ட முதலாவது வழிப்போக்கன். இவ்வாறு ரொட்டியை வாங்கி துண்டுகளாக்கித் தனது காயத்தின் கடிவாயிலில் வழியும் ரத்தத்தைத் தடவிக் கொண்டிருந்தான்.
அதனைக் கண்ட அந்த வழியாகச் சென்ற மூன்றாவது வழிப்போக்கன் "என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று ஆச்சரியத்துடன் வினவினான்.
நாய் கடிபட்ட முதலாவது வழிப்போக்கன் நடந்ததைக் கூறினான்.
"என்னப்பா! இப்படி முட்டாள்தனம் செய்கிறாயே! நீ ரொட்டியில் ரத்தத்தைத் தடவுவதை நாய் கண்டிருந்தால் உன்னை மறுபடியும் கடித்துக் குதறி இருக்கும்..." என்றான்.
"இதற்கு நீயே ஒரு தீர்வு கூறு." என்றான் நாய்கடிபட்ட முதலாவது வழிப்போக்கன்.
"வழிப்போக்கர்களிடம் உனது நாய்க்கடிக்கு தீர்வு கேட்காதே. முதல் வேலையாக ஒரு மருத்துவரைச் சந்தித்து உனது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்..." என்றான் மூன்றாவது வழிப்போக்கன்.
நாய் கடிபட்ட முதலாவது வழிப்போக்கனும் ஒரு மருத்துவரைத் தேடிச் சென்றான்.
இந்தக் கதையின் மூலம் பிரச்சினைக்கு சரியான நபரை தேடிச் செல்ல வேண்டும் எனத் தெரிகிறது. வழிப்போக்கர்கள் நாய்க்கடிக்கு வெவ்வேறு ஆலோசனைகளைச் சொல்லலாம். ஆனால் சரியான ஆலோசனையைப் பெற சரியான நபரை அதாவது மருத்துவரை அணுக வேண்டும். இதனைப் போலவே நிதி நெருக்கடியில் உள்ளவர்களும் தங்களைச் சுற்றி உள்ள நபர்களிடம் நிதி ஆலோசனை கேட்காமல், பணம் மட்டும் வாங்கிக் கொண்டு நிதி ஆலோசனை வழங்கும் 'செபி'யில் பதிவு செய்து கொண்ட, ஃபீ ஒன்லி பைனான்சியல் பிளானர், (Fee only financial planner), நிதி ஆலோசர்களை அணுக வேண்டும். அதன் மூலம் அவர்களால் தமது நிதி பிரச்சனைகளிலிருந்து சரியான முறையில் வெளிவர முடியும்.
நமது நிதிப் பிரச்சனை என்ன? நமது நஷ்டத்தைத் தாங்கும் அளவு என்ன? நமது நிதிக் குறிக்கோள் என்ன? நமது தற்போதைய நிதி நிலைமை என்ன? எவ்வாறு நமது வாழ்வின் குறிக்கோள்களுக்கு நிதி திட்டமிடல் செய்ய வேண்டும்? என பல்வேறு விஷயங்களை அலசி ஆராய்ந்து நமக்கு ஏற்ற பிரத்யேகமான நிதி திட்டமிடலை நிதி ஆலோசகர்கள் செய்கின்றனர். எனவே தான் இது தனிநபர் நிதி, (personal finance) என்று அழைக்கப்படுகிறது. ஏனென்றால், நிதி திட்டமிடல் நபருக்கு நபர் மாறுபடும்.
செபியில் பதிவு செய்த பணம் மட்டும் வாங்கும் நிதி ஆலோசகர்களை நாம் நமது நிதி சம்பந்தமான திட்டமிடலுக்குப் பயன்படுத்திக் கொள்வோம்